சுரைக்காய் கடலைக்கூட்டு
தேவையானப் பொருட்கள்:
சுரைக்காய் - பாதி ( நறுக்கினால் 2 கப் இருக்க வேண்டும்)
கொண்டைக்கடலை - 1/2 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
செய்முறை:
சுரைக்காயைத் தோல் சீவி, விதைகளையும், விதையோடு இருக்கும் வெள்ளைப் பகுதியையும் நீக்கி விட்டு, நடுத்தர அளவுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும். ஊற வைத்தக் கடலையை குக்கரில் போட்டு சிறிது தண்ணீரைச் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.
பொட்டுக்கடலையையும், கசகசாவையும் சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், சீரகம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கிவிட்டு காய்த்துண்டுகளையும், வேகவைத்தக் கடலையும் சேர்க்கவும். அத்துடன், உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறி விடவும். காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, நிதானமான தீயில் வேக விடவும். காய் நன்றாக வெந்ததும், பொட்டுக்கடலைப் பொடியைத் தூவி கிளறவும். சிறு தீயில் வைத்து காய் தேவையான அளவிற்கு கெட்டியானதும், கீழே இறக்கி வைக்கவும்.
சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாயிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.