நீர் உருண்டை
தேவையானப் பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
அரிசியை 4 அல்லது 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவக்கவும். நன்கு கழுவி நீரை வடித்துவிட்டு உப்பு சேர்த்து கிரைண்டரில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரைக்கும் பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்து அரைக்கலாம். ஆனால் மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.
மாவில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து பிசைந்து, சிறு எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
வாயகன்ற ஒரு பெரிய பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். நீர் நன்றாகக் கொதிக்கும் பொழுது, 4 அல்லது 5 உருண்டைகளைப் போடவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து, மேலும் சில உருண்டைகளைப் போடவும். உருண்டைகளைப் போட்டவுடன் கொதி அடங்கி சில நிமிடங்களில் நீர் மீண்டும் கொதிக்கத் தொடங்கும். அப்பொழுது கரண்டியால் லேசாக கிளறி விட்டு, மேலும் சில உருண்டைகளைப் போடவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். உருண்டைகள் வெந்ததும், பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து, அதிலிருக்கும் உருண்டைகளை ஒரு கரண்டியால் அரித்து எடுத்து வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
கொதித்த நீரில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து கலக்கவும். கஞ்சி போல் இருக்கும்.
உருண்டைகளை அப்படியே சாப்பிட்டு விட்டு, ஒரு கப் கஞ்சியைக் குடித்தால் நிறைவாக இருக்கும்.
குறிப்பு:
காரம் வேண்டுமானால், வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடுகு தாளித்து, அதில் உருண்டைகளைப் போட்டு கொஞ்சம் மிளகுத்தூள் தூவி ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.