நெல்லிக்காய் தயிர் பச்சடி


தேவையானப்பொருட்கள்:

நெல்லிக்காய் - 5 அல்லது 6
தயிர் - 1 பெரிய கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

நெல்லிக்காயை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளுடன், தேங்காய்த் துருவல். பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து அதில் அரைத்த விழுதையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பச்சடியில் கொட்டிக் கலக்கவும்.

10 கருத்துகள்:

  1. முழு மோர்நெல்லிக்காய் ஊறுகாய் ரெசிபி தெரியுமா?
    தயவுசெய்து பகிரவும்
    மின்மடல்:enmadal@yahoo.com

    பதிலளிநீக்கு
  2. அறிவன், Irfana,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க் நன்றி.

    முழு நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, அப்படியே நீருடன் வைப்பார்கள். இது நீர் நெல்லிக்காய் எனப்படும்

    முழு நெல்லிக்காயை மோரில் ஊறவைத்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைத்தால் அது மோர் நெல்லிக்காய். தேவையானப்பொழுது ஊறுகாய், சட்னி, பச்சடி ஆகியவற்றை செய்யப் பயன்படுத்தலாம். அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.

    ஆனாலும் ஊறுகாய் வகைகளில் உப்பின் அளவு அதிகமாய் இருப்பதால், பச்சடியாகவோ, பச்சையாகவோ சாப்பிடுவதுதான் சிறந்தது.

    பதிலளிநீக்கு
  3. கமலா,பதிலுக்க நன்றி.
    ஆனால் நான் சொல்வது மோர் நெல்லிக்காய் ஊறுகாய்.
    எனது தோழி ஒருமுறை செய்தார்.
    உத்தேசமாக நினைவில் இருக்கும் முறை:
    நெல்லிக்காய்களை முழுதாக வேகவைக்க வேண்டும்.
    பின்னர் கடுகு,உ.பருப்பு,பெ.காயம் தாளிப்பில் பச்சைமிளகாய்,இஞ்சி அரைத்து சேர்த்து,தயிர் உப்பு சேர்த்து வேகவைத்த நெ.காய்களைக் கொட்டிக் கிளறி பத்திரப்படுத்தவும்.

    என்ன சந்தேகமெனில்,இது நான் சாப்பிட்டு அறிந்த சுவையில் ஊகித்தது,உணமையில் இப்படித்தானா என்பது சந்தேகமாக இருக்கிறது.

    ஆனால் மோர் சாதத்திற்கு,சேர்த்து சாப்பிட்டால்..ஆஹா..என்ன ருசி !!!!

    தெளிவாகத் தெரிந்தால் அறியத்தரவும்.

    இது கேரள,ஆந்திர பிராமணர்களின் ரெசிபியில் வரக்கூடும்...

    பதிலளிநீக்கு
  4. புதிய செய்முறையாக இருக்கே..நன்றி

    பதிலளிநீக்கு
  5. நெல்லிக்காய் பவுடர் (அமலா பவுடர்) கடையில் கண்டதும் வாங்கினேன்.
    அதில் என்ன செய்யலாம். எப்படி பயன் படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
  6. தூயா,

    தங்கள் வருகைக்கு மிக்க் நன்றி.

    அறிவன் அவர்களுக்கு, தாங்கள் கூறியுள்ள மோர் ஊறுகாய் பற்றி முழுமையான விபரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது கூறினால் உபயோகமாக இருக்கும்.

    நெல்லிக்காய் பவுடரை பச்சடி, சாலட் போன்றவற்றில் ஓரிரு டீஸ்பூன் சேர்க்கலாம். வயிற்று உப்புசம், எரிச்சல், வாயு போன்ற தொல்லைகள் இருக்கும் பொழுது, ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் ப்வுடரை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீரைக் குடித்தால், உபாதைகள் நீங்கும்.

    பதிலளிநீக்கு
  7. இதே போல் வாழைத் தண்டையும் வேக வைத்து செய்யலாம்

    பதிலளிநீக்கு
  8. நன்றி பூங்குழலி அவர்களே. வாழைத்தண்டு தயிர் பச்சடி குறிப்பும் தனியாகக் கொடுத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.