அன்னாசிபழப் பச்சடி
"கொஜ்ஜு" என்று கன்னடர்களால் அழைக்கப்படும் இது இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் நிறைந்த ஒரு பச்சடி. கத்திரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் ஆகியவற்றில் இதை செய்யலாம். ஆனாலும், அன்னாசிப்பழத்தில் செய்வதுதான் அதிகமாக காணப்படுகிறது. தெற்கு கர்னாடகப் பகுதி திருமணங்களில் கண்டிப்பாக இது இடம் பெறும்.
தேவையானப்பொருட்கள்:
அன்னாசிப்பழத்துண்டுகள் (சிறியதாக வெட்டியது) - 2 கப்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
வெல்லம் - ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வறுத்து, பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3 (நடுத்தர அளவு)
தனியா - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
எள் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி
தாளிக்க:
எண்ணை - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை விட்டு, வறுத்து, பொடிக்க கொடுத்துள்ள அனைத்தயும் சற்று சிவக்க வறுத்து, ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து, 1/4 கப் புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அன்னாசிப்பழத்துண்டுகளைப் போட்டு, மஞ்சள் பொடி சேர்த்து, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். (குக்கரில் போட்டும் 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக வைக்கலாம்).
பழத்துண்டுகள் மிருதுவாக வெந்ததும், அதில் புளித்தண்ணீர், வெல்லம் (பொடித்துச் சேர்க்கவும்), உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் சிறிது நீரைச் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து வரும் பொழுது, வறுத்து, பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவிக் கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சடி தேவையானப் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.