பல தானியச் சுண்டல்


நவ தானியயங்கள் என்று கூறப்படும் கோதுமை, நெல் (அரிசி), துவரை (துவரம் பருப்பு), பச்சை பயறு (பயத்தம் பருப்பு), கொண்டைக்கடலை, மொச்சைக்கொட்டை, எள்ளு, கொள்ளு, உளுந்து (உளுத்தம் பருப்பு) ஆகியவற்றைக் கலநது செய்யப்படும் சுண்டல் நவதானியச் சுண்டல். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தானியம் உகந்தது. அதனால், நவராத்திரியின் பொழுது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியத்தை உபயோகித்து சுண்டல் செய்து, நவகிரகங்களையும் சாந்தி படுத்துவது வழக்கம் (நவக்கிரகம் சாந்தி அடைகிறதோ, இல்லையோ, தினம் ஒரு வகை தானியம் உண்பதால், நமக்கு சத்து மிகுந்த உணவும், அதனால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது). மேற்கண்ட தானியங்கள் இருப்பில் இல்லாத பொழுது, இருக்கும் ஏதாவது ஒன்பது வகை பயிறு அல்லது பருப்பு கலந்து சுண்டல் செய்வதும் "நவ தானியச் சுண்டல்" என்று அழைக்கப்பட்டது. நவதானியத்தில் ஒன்றிரண்டு குறைந்தாலோ அல்லது கூடினாலோ, அதை வைத்து செய்யும் சுண்டல் "பல தானியச் சுண்டல்". இதில் விருப்பமான அல்லது இருப்பில் உள்ள அனைத்து தானியங்களையும் உபயோகிக்கலாம்.

என் அடுப்பங்கரையில் இருந்தவை:

கொண்டைக்கடலை, காய்ந்த பட்டாணி, மொச்சைக்கொட்டை, காராமணி, கொள்ளு, பச்சைப்பயிறு - ஒவ்வொன்றும் 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை - எல்லா தானியங்களும் சேர்ந்து 2 கப்

காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பச்சைப்பயிறை தனியாகவும், மற்ற தானியங்களை ஒன்றாகவும் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய தானியங்களை கழுவி சிறிது உப்பும் தண்ணீரும் சேர்த்து குக்கரில் போட்டு 2 அல்லது 3விசில் வரும் வரை வேக வைத்து, வடிகட்டி வைக்கவும்.

பச்சைப்பயிறை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து குழையாமல் வேக வைத்து வடித்தெடுக்கவும். குக்கரில் போட்டால் ஒரு விசில் போதுமானது.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், மிளகாயைக் கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, பின்னர் அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள தானியங்களைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக் கிளறி விடவும். இறக்கி வைக்கும் முன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலைத் தூவி இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.