பட்டாணி மசாலா


தேவையானப்பொருட்கள்:

காய்ந்த வெள்ளை பட்டாணி - 1 கப்
தக்காளி (பெரியது) - 1
பெரிய வெங்காயம் - 2
இலவங்க பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பட்டாணியை 8 முதல் 10 மணி நேரம் (அல்லது இரவு முழுதும்) ஊற வைக்கவும். ஊறிய பட்டாணியை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 2 முதல் 3 விசில் வரும் வரை வேக விடவும்.

ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்றொரு வெங்காயத்தையும், தக்காளியையும் நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பெரிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர் அத்துடன் தக்காளித் துண்டுகளையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, ஆற விடவும். பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள மிளகாய், தனியா, பட்டை, கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

வெந்த பட்டாணியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து, அதையும் அரைத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய், வெங்காய விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் வேக வைத்துள்ள பட்டாணியை வெந்த நீருடன் சேர்க்கவும். பட்டாணி விழுதையும் சேர்த்து, தேவை பட்டால் மேலும் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறவும். உப்பு சரி பார்த்து, , ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

விருப்பப் பட்டால், கொத்துமல்லி தழை தூவி பரிமாறலாம்.

பூரி, சப்பாத்தி, பிரட் டோஸ்ட் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

4 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.