ஓட்ஸ் மோர்க்களி


"மோர்க்களி" அல்லது "மோர்க்கூழ்" என்றழைக்கப்படும் இது ஒரு எளிய சிற்றுண்டி. சாதரணமாக, அரிசி மாவு மற்றும் மோர் கலந்து செய்வார்கள். அரிசிமாவிற்குப்பதில், ஓட்ஸ் மாவில் இதைச் செய்தேன். சுவை நன்றாகவே இருந்தது.

தேவையானப்பொருட்கள்:

குயிக் குக்கிங் ஓட்ஸ் - 1 கப்
புளித்தத் தயிர் - 1/2 கப்
நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மோர் மிளகாய் - 2 அல்லது 3
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

தயிரைக் கடைந்து, அத்துடன் ஓட்ஸ் மாவு, பெருங்காயத்தூள், உப்புச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை விட்டுக் கரைத்துக் கொள்ளவும். தோசை மாவை விட சற்று நீர்க்க இருக்க வேண்டும்.

அடி கனமான வாணலியை (நான் ஸ்டிக் வாணலி சிறந்தது) அடுப்பிலேற்றி, அதில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், மோர் மிளகாயை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும். அத்துடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் சேர்த்து சிவக்க வறுக்கவும். அடுப்பை மிதமான் தீயில் வைத்து, ஓட்ஸை மாவை ஊற்றி, கை விடாமல் கிளறவும். மாவு சட்டியில் ஒட்டாமல் பந்து போல் உருண்டு வரும் பொழுது, (5 அல்லது 6 நிமிடங்கள் ஆகும்) எண்ணை தடவிய ஒரு தட்டில் கொட்டி, சமப்படுத்தி, சற்று ஆறியதும் துண்டுகள் போடவும்.

வறுத்த மோர் மிளகாய் அல்லது தேங்காய்த்துவையலுடன் பரிமாறவும்.

கவனிக்க: மோர் மிளகாய் இல்லையென்றால், காய்ந்த மிளகாயை உபயோகப்படுத்தலாம்.

இதை மைக்ரோவேவ் அவனிலும் செய்யலாம். மாவைக்கரைத்து, அதில் தாளித்துக் கொட்டி, 5 அல்லது 7 நிமிடங்கள் வரை மைக்ரோவேவ் அவனில் வைத்து செய்யலாம். ஆனால், நிமிடத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்துக் கிளறி விட்டு மீண்டும் அவனில் வைத்து எடுக்கவும்.

4 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.