சேனைக்கிழங்கு வறுவல்
தேவையானப்பொருட்கள்:
சேனைக்கிழங்கு - பாதியாக வெட்டியது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
புளி - ஒரு கொட்டை பாக்களவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
செய்முறை:
சேனைக்கிழங்கைக் கழுவி, தோலை சீவி விட்டு, 3 அல்லது 4 அங்குல அளவிற்கு மெல்லிய வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வில்லைகளைக் கொதிக்கும் நீரில் போட்டு சில நிமிடங்கள் வேக விடவும். முக்கால் பங்கு வெந்தால் போதும். குழைய விடக்கூடாது.
புளியை சிறிது நீரில் ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் கெட்டியாகக் கரைத்த புளி ஆகியவற்றைச் சேர்த்து, விழுது போல் ஆக்கிக் கொள்ளவும். தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி காய விடவும். கல் காய்ந்ததும், அதில் சிறிது எண்ணை தடவவும். சேனைக் கிழங்கு வில்லைகள் ஒவ்வொன்றாக எடுத்து, மிளகாய் விழுதில் நன்றாக பிரட்டி எடுத்து, தோசைக்கல்லில் தனித்தனியாக வைக்கவும். அதைச் சுற்றி சிறிது எண்ணையை விட்டு, மிதமான தீயில் வேக விடவும். ஓரிரு வினாடிகள் கழித்து, ஒவ்வொரு வில்லைகளாகத் திருப்பி போட்டு, மறு பக்கத்தையும் வேக விடவும். இவ்வாறே திருப்பி திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்றாக சிவக்கும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
சாம்பார் சாதம் / ரசம் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
வீட்டில் நாளை செய்வதாக சொன்னார்கள்.
பதிலளிநீக்குதிருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி சகோதரி!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"