காய்கறி கடலைக் கறி


தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ் - 8 முதல் 10 வரை
கேரட் - 1
காலிஃபிளவ்ர் - பாதி
கொண்டைக்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டெஅச்போன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கொண்டைக்கடலையை 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

காய்கறிகளைக் கழுவி விட்டு, 1" அளவிற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். காலிஃபிளவரையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊறவைத்துள்ளக் கடலையை குக்கரில் போட்டு, தேவையான நீரை ஊற்றி 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.

தேங்காய்த்துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, பாலை பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளியை சேர்க்கவும். அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், காய்கறிகளைச் சேர்த்துக் கிளறி விடவும். அத்துடன் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்துள்ளக் கடலையைச் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். நன்றாகக் கொதி வந்ததும், தேங்காய்ப் பாலைச் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.

புலாவ் மற்றும் சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

2 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.