கேழ்வரகு இனிப்பு அடை


தேவையானப்பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி அளவு
நெய் - 4 முதல் 5 டீஸ்பூன் வரை

செய்முறை:

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தால் போதும், பாகு பதம் தேவையில்லை. வெல்லம் கரைந்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, கேழ்வரகு மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். மாவு வெல்லத்துடன் சேர்ந்த்து, சற்று கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் காய்ந்த திராட்சை, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை வறுத்து மாவுடன் சேர்க்கவும். ஏலக்காய்த்தூளையும் சேர்த்து, கையில் சிறிது நெய்யைத் தடவிக் கொண்டு நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு, 4 உருண்டைகள் கிடைக்கும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சூடானதும், மாவு உருண்டையை கல்லின் நடுவே வைத்து, விரல்களால் வட்டமாகத் தட்டி, (கல்லில் வைத்துத் தட்ட கடினமாக இருந்தால், வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டிலோ சிறிது நெய்யைத்தடவி அதன் மேல் வைத்துத் தட்டி, பின்னர் அதைக் கல்லில் போட்டும் சுட்டெடுக்கலாம்) சிறிது நெய்யை அடையைச் சுற்றி ஊற்றி வேக விடவும். ஒரு பக்கம் சிவந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கவும் சிவந்ததும், கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.

கேழ்வரகு கார அடைக்கு இங்கே சொடுக்கவும்.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.