கோவைக்காய் சாதம்

தேவையானப்பொருட்கள்:

சாதம் - 1 கிண்ணம் (இருவர் சாப்பிடும் அளவிற்கு)
கோவைக்காய் - 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
 
வறுத்து பொடிக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
கெட்டி பெருங்காயம் - ஒரு சிறு மிளகு அளவு (தூளாக இருந்தால் - ஒரு சிட்டிகை)
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
 
தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:

கோவைக்காயை நன்றாகக் கழுவி விட்டு, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். தோசைக்கல் அல்லது அகலமான தாவாவை அடுப்பிலேற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள காயை, தனித்தனியாக பரப்பி வைக்கவும். அதன் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு, அவ்வப்பொழுது திருப்பி விட்டு சிவக்க வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். (மைக்ரோவேவ் அவனிலும் வதக்கி எடுக்கலாம்).
 
வெறும் வாணலியில் வெள்ளை எள்ளைப் போட்டு சிவக்கும் வரை அல்லது பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.  அதே வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் பெருங்காயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப்போட்டு சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும்.
 
ஆறியதும், அத்துடன் வறுத்து வைத்துள்ள எள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும்.  பின் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும்.  கறிவேப்பிலையையும் போட்டு சற்று வறுத்து, அதன் பின் வதக்கி வைத்துள்ள கோவைக்காய் துண்டுகள், மஞ்சள் தூள்,  ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.  பின்னர் அதில் சாதத்தைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும். கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி, ஒரு டீஸ்பூன் எண்ணையையும் விட்டு நன்றாகக் கலந்து இறக்கி வைக்கவும்.

தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

4 கருத்துகள்:

  1. கோவைக்காய் கிடைக்கும் போது கண்டிப்பாய் செய்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.

    பார்க்கவே நன்றாக இருக்கிறது கோவைக்காய் சாதம்.

    பதிலளிநீக்கு
  2. பார்வதிமுத்துக்ருஷ்ணன்23 ஏப்ரல், 2012 அன்று 12:23 PM

    மாங்காய் சாதம் சூப்பர்.மீண்டும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கோவைக்காய் என்று தலைப்பைப் பார்த்ததும் , இது என்ன? காய் என யோசித்து விட்டு உங்கள் படத்தில் உள்ள துண்டுகளை வைத்து ,அடடா? இது கொவ்வைக்காய்...என்று தெளிந்தேன்.
    "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்"; ஈழத்தில் கொவ்வையே!!! நாங்கள் இதைச் சமைப்பதோ, சாப்பிடுவதோவில்லை. எங்கள் கிராமங்களில் வேலியில் படர்வதை, வெட்டி ஆட்டுக்குப் போடுவோம். அப்பப்போ, சிறுவர்களாக செந்நிறத்தால் கவரப்பட்டு பழத்தைச் சுவைத்துப் பார்ப்போம்.
    எங்கள் அடுப்பங்கரைக்கு இது வந்ததாகவில்லை.
    இங்குள்ள இந்தியக் கடைகளில் இதை மரக்கறியுடன் கண்டபோதும் பலவருடமாகத் தீண்டவில்லை.
    ஒரு நாள் ஒரு பாண்டிச்சேரிப் பெண்ணிடம் கேட்டபோது, சிறிதாகவெட்டி தயிருடன் சேர்த்து சலாட்டாகச் சாப்பிடலாமெனவும். நான்காகக் கீறி பொரித்துக் குழம்பு வைக்கலாமெனவும் கூறினார்.
    சிறுது வாங்கிச் சென்று சமைத்தோம். பிடித்தது, ஊருக்கு தொலைபேசியில் பேசிய போது கூறினேன்;
    என்ன? கொவ்வைக்காய் சாப்பிடுகிறதா? ...ஆச்சரியப்பட்டார்கள். நிச்சயம் அதை முயன்றிருக்க மாட்டார்கள்.
    நீரளிவுக்கும் நன்றென அறிந்தேன்.
    உங்கள் சாப்பாட்டு படங்கள் சமைக்கத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  4. யோகன் பாரிஸ் - வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி. தாங்கள் கூறியுள்ளது போல், நாங்களும் சிறு வயதில் இதை சாப்பிட்டதில்லை. கொல்லை புறத்தில் வேலியில் படர்ந்து கிடக்கும் கொடியில் விளைந்து தொங்கும் இந்த காயை, பள்ளியில் கரும்பலகைத் துடைக்கவே உபயோகிப்போம். ஆனால் இதன் மருத்துவ குணங்களை அறிந்த பிறகு, உணவிலும் சேர்த்துக் கொள்ள தொடங்கி விட்டோம்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.