கத்திரிக்காய் துவையல்


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 4
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காய்ம் - ஒரு பட்டாணி அளவு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கத்திரிக்காயைக் கழுவி, துடைத்து விட்டு அதன் மேல் சிறிது எண்ணைத் தடவி, அடுப்பு தீயில் காட்டி நன்றாகத் தோல் சுருங்கி கறுப்பாகும் வரை சுட்டெடுக்கவும். கத்திரிக்காயை இடுக்கியில் பிடித்தும் சுடலாம். அல்லது வடைக்கம்பியில் கத்திரிக்காயைக் குத்தியும் சுடலாம். சுட்ட கத்திரிக்காயும், சுடாத கத்திரிக்காயும் மேலே உள்ள படத்தில்.

சுட்ட கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கி விட்டு, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் புளியைப் போட்டு வறுக்கவும். கடைசியில் மிளகாயைப் போட்டு வறுத்து எடுத்து ஆற விடவும்.

வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் சுட்டக் கத்திரிக்காயைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுக்கவும்.

கடுகு தாளித்து, அரைத்த துவையலில் கொட்டிக் கிளறி விடவும்.

இட்லி, தோசை, உப்புமா, உப்பு கொழுக்கட்டை ஆகியவற்றுடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.