தேவையானப்பொருட்கள்:
தோசை மாவு - 1 கிண்ணம்
புரோக்கோலி - 1
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டுப்பற்கள் (சிறிய அளவு) - 3 அல்லது 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
மசாலா தயாரிக்க:
புரோக்கோலியின் பூவை தனியாக எடுத்து நடுத்தர அளவு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 4 அல்லது 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது உப்பைச் சேர்த்து புரோக்கோலி துண்டுகளைப் போட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு, உடனே எடுத்து தனியாக வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது இடித்துக் கொள்ளவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விட்டு எடுத்து, சற்று ஆறியதும், தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு காய்ந்ததும் சீரகம், சோம்பு ஆகியவற்றைப் போடவும். சீரகம் பொரிந்ததும் இஞ்சி, பூண்டு சேர்த்து சற்று வதக்கி, அதன் பின் வெங்காயத்தையும் சேர்த்து சிவக்க வதக்கவும். பின்னர் அதில் தக்காளி விழுதைச் சேர்த்து, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி விடவும். சில வினாடிகள் வரை கிளறி விட்டு அதில் முந்திரி விழுதைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில் புரக்கோலியைப் போட்டு, சிறிது தண்ணீரைத் தெளித்து, மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும். புரக்கோலி வெந்து மசாலா கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
தோசை தயாரிக்க:
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, எண்ணை தடவி, கல் சூடானதும் ஒரு பெரிய கரண்டி தோசை மாவை ஊற்றி மெல்லியதாக பரப்பி விடவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையைச் சுற்றி ஊற்றி வேக விடவும். ஒரு புறம் சிவக்க வெந்ததும், தோசையின் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் மசாலாவை வைத்து, தோசையின் இரண்டு முனையயும் மடித்து விட்டு, திருப்பிப் போட்டு சில வினாடிகள் வேக விட்டு எடுக்கவும்.
சட்னி/சாம்பாருடன் பறிமாறவும்.
கவனிக்க: இந்த புரக்கோலி மசாலாவை சப்பாத்தி, பூரி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)