மாங்காய் பருப்பு


இது ஒரு ஆந்திர சிறப்பு உணவு. மாங்காய், பருப்பு இரண்டையும் ஒன்றாக வேக வைத்து தாளிப்பார்கள்.  மாங்காயைத் தோலுடனோ அல்லது தோலை சீவி விட்டோ அவரவர் சுவைக்கேற்ப சமைப்பார்கள்.

நான் மாங்காயை தோலுடன் தனியாக வேக வைத்து செய்துள்ளேன்.

தேவையானப்பொருட்கள்:

மாங்காய் (நடுத்தர அளவு ) - 1
துவரம் பருப்பு - 1 சிறிய கப்
எண்ணை - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2 (இலேசாக கீறிக் கொள்ளவும்)
பூண்டு பற்கள் (சிறிய அளவு) - 5
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவி, குக்கரில் போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணை, மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் தண்ணீரை விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

மாங்காயைக் கழுவி விட்டு தோலுடன் நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.   ஒரு பாத்திரத்தில் மாங்காய் துண்டுகளைப் போட்டு அத்துடன்  சிறிது மஞ்சள் தூள், சாம்பார் பொடி, சிறிது உப்பு சேர்த்து, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு வேக விடவும்.
காய் நன்றாக வெந்ததும், இறக்கி வைத்து இலேசாக மசித்துக் கொள்ளவும். அத்துடன் வெந்த பருப்பையும் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையுன் சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும்    கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.  பின்னர் அத்துடன் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு (சற்று நசுக்கி போடவும்) சேர்த்து வதக்கி, கொதிக்கும் பருப்புல் கொட்டி கிளறி, இறக்கி வைக்கவும்.

இந்த பருப்பை சூடான சாதத்துடன், சிறிது நெய் அல்லது நல்லெண்ணை சேர்த்து பிசைந்து, பொரித்த அப்பளம் அல்லது ஜவ்வரிசி வடவத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

2 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.