உருளைக்கிழங்கு பாயசம்


தேவையானப்பொருட்கள்:

பால் - 1/2 லிட்டர் (2 பெரிய டம்ளர்)
உருளைக்கிழங்கு - 1
பயத்தம் பருப்பு - 1/2 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
நெய் - 1 அல்லது 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
காய்ந்த திராTசை - சிறிது
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வெல்லப்பாகை தனியாக எடுத்து வைக்கவும்.

அடிகனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைக்கவும்.

இன்னொரு அடுப்பில், வாணலியை வைத்து பயத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.   வறுத்த பருப்பை ஒரு குக்கரில் போட்டு, அதிலேயே உருளைக்கிழங்கையும் கழுவி, இரண்டாக வெட்டிப் போடவும்.  2 கப் தண்ணீரைச் சேர்த்து மூடி போட்டு, 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டெடுக்கவும்.   குக்கர் ஆறியபின், மூடியைத் திறந்து உருளைக் கிழங்கை தனியாக எடுத்து, தோலுரித்து விட்டு, மசித்துக் கொள்ளவும். வெந்த பருப்பையும் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு, சிறிது பாலை விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

மசித்த பருப்பு, அரைத்த உருளைக்கிழங்கு விழுது ஆகியவற்றை ஒவ்வொன்றாக அடுப்பிலிருக்கும் பாலில் சேர்த்துக் கிளறி விடவும். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொதிக்க ஆரம்பித்ததும், வெல்லப்பாகை விட்டு கிளறி விடவும். மீண்டும் ஒரு கொதி வநததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அத்துடன் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூளையும் தூவிக் கலந்து பரிமாறவும்.

இதை சூடாகவும் சாப்பிடலாம் அல்லது குளிர வைத்தும் சாப்பிடலாம்.

2 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.