நெல்லிக்காய் தொக்கு


தேவையானப்பொருட்கள்:

நெல்லிக்காய் - 10
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்  

வறுத்தரைக்க:
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்  

தாளிக்க:
நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்  

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 3 அல்லது 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.  கொட்டை நீக்கிய நெல்லிக்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

வெறும் வாணலியில் வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.  அதே வாணலியில் கடுகைப் போட்டு வெடிக்க ஆரம்பிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.  வறுத்த வெந்தயம், கடுகு இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.  அல்லது சிறு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.  அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.  அத்துடன் பெருங்காயத் தூளையும் போடவும்.  அத்துடன் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.  எல்லாம் சேர்ந்து சுருள வதங்கியதும், வெந்தய கடுகுப் பொடியைத் தூவிக் கிளறி விடவும்.  கடைசியில் எலுமிச்சம் சாற்றை ஊற்றிக் கிளறி, உடனே அடுப்பை அணைத்து விடவும்.  மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி விட்டு, சுத்தமான ஜாடியில் அல்லது பாட்டிலில் போட்டு வைக்கவும்.

தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.  சூடான சாதத்தில் போட்டு பிசைந்து , சுட்ட அப்பளத்துடன் சாப்பிடலாம்.  ஒரு டேபிள்ஸ்பூன் தொக்கை, ஒரு கப் தயிரில் சேர்த்துக் கலந்து தயிர் பச்சடி போலும் செய்யலாம்.  இந்த தயிர் பச்சடி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

2 கருத்துகள்:

  1. நெல்லிக்காய் தொக்கு செய்முறை அருமை.எங்க அம்மாவும்இதே முறையில்தான் செய்வாங்க.

    பதிலளிநீக்கு
  2. nellikkai vankivitu seivathariyathu irrunthen. seithu parthen. mikavum nanraka irunthathu. thanks to kamala aduppankari

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.