பறங்கிக்காய் அல்வா


தேவையானப் பொருட்கள்:

பறங்கிக்காய் - ஒரு பெரிய துண்டு
ரவா - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய்ப்பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 5

செய்முறை:

பறங்கிக்காயை வெட்டி தோல், விதை மற்றும் விதையைச் சுற்றியுள்ள நார் போன்ற பகுதியை நீக்கி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கியத்துண்டுகளைப் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு வேகவிடவும். காய் நன்றாக வெந்ததும், நீரை வடித்துவிட்டு, மசித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

அதே வாணலியில் ரவாவைச் சேர்த்து, வாசனை வரும்வரை வறுக்கவும். அதில் பாலை விட்டு வேக விடவும். ரவா வெந்ததும், மசித்து வைத்துள்ள் பறங்கிக்காய் விழுதைச் சேர்க்கவும். மசித்த காய் அளவில் பாதி அளவிற்கு (1 கப்பிற்கு 1/2 கப்) சர்க்கரையை சேர்த்து கிளறவும். இனிப்பு அதிகம் தேவையென்றால், இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். சிறிது கெட்டியானதும் 4 அல்லது 5 டீஸ்பூன் நெய்யை விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.


குறிப்பு:

சர்க்கரைக்குப் பதில், வெல்லம் சேர்த்தும் செய்யலாம். வெல்லம் சேர்த்தால், சிறிது சுக்குப் பொடியையும் சேர்க்கவும். சுவையாக இருக்கும்.

2 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.