வத்தக் குழம்பு


தேவையானப்பொருட்கள்:

புளி - எலுமிச்சம் பழ அளவு
வத்தல் - (மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தல்) - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப் பல் - 10
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, நன்றாகப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும். இப்படி எடுத்த சாறு, மூன்று கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெந்தயத்தைச் சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையெனில், வெந்தயம் காந்தி கறுப்பாகிக் கசக்கும்). வெந்தயம் இலேசாக சிவந்தவுடன், வத்தலையும், பூண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் கறிவேப்பிலையையும் போட்டு சிறிது வதக்கி, அதில் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும். ஒரு மூடி போட்டு மூடி வைத்து, மிதமான தீயில் நன்றாகக் கொதித்து, எண்ணை மேலே தெரியும் வரை வைத்திருந்து, பின்னர் கீழே இறக்கி வைக்கவும்.

குறிப்பு: மேற்கண்ட முறையில் வைக்கப்படும் குழம்பு, சற்று சிவப்பாக இருக்கும். கருஞ்சிவப்பாக குழம்பு தேவையென்றால், புளித்தண்ணீரை ஊற்றும் முன்னர், பூண்டு, வத்தல் ஆகியவற்றை வதக்கிய பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றைப் போட்டு எண்ணையில் நன்றாக வதக்கி, அதன் பின் புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விட்டால், குழம்பு கருஞ்சிவப்பாக இருக்கும்.

இதில் "கருவடாம்" என்னும் தாளிக்கும் வடகத்தை கடுகுடன் சேர்த்து தாளித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

6 கருத்துகள்:

  1. பெயரில்லா23 மே, 2008 அன்று 6:40 PM

    வத்தலை எண்ணையில் பொறிக்க வேண்டுமா?

    நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வத்தலைத் தனியாக எண்ணையில் பொரிக்கத் தேவையில்லை. வத்தக் குழம்பிற்கு சற்று தாராளமாகவே எண்ணை ஊற்றி தாளிக்க வேண்டும். தாளிக்க ஊற்றும் எண்ணையிலேயே, கடுகு வெடித்தவுடன், வத்தலைப் போட்டு வறுக்கும் பொழுது, அது பொரிந்து விடும்.

    பதிலளிநீக்கு
  3. சாம்பார் பொடியைப் போட்டால் அது எப்படி வற்றல் குழம்பாகும்.

    கொத்தமல்லிவிதை, கடலைப்பருப்ப்பு, மிள்காய்வத்தல்[2] இவற்றை வறுத்து பொடி செய்து அதைக் கலப்பதுதான் நான்ன் செய்வது!

    பதிலளிநீக்கு
  4. சாம்பார் பொடி என்று பொதுவாகக் கூறப்படும் இந்தப்பொடி, மிளகாய், கொத்துமல்லி, பருப்பு சேர்த்து அரைக்கப்படுவதுதான். இதை குழம்புத்தூள் என்றும் சொல்வார்கள். இந்தப் பொடியை எல்லா சமையலிலும் சேர்க்கலாம். வத்தல் சேர்த்து செய்தால், அது "வத்தக்குழம்பு". காயையும், பருப்பையும் சேர்த்தால் அது சாம்பார்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.