கத்திரிக்காய் புளிக்கூட்டு
தேவையானப்பொருட்கள்:
கத்திரிக்காய் - 4 (பெரியதாக இருந்தால் 2)
துவரம்பருப்பு - 1/2 கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
பெரிய வெங்காயம் - 1 (நடுத்தர அளவு)
தக்காளி - 1
பூண்டுப்பற்கள் - 4
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிப்பதற்கு:
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
துவரம்பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக பிழிந்தெடுக்கவும். 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் கெட்டி புளிச்சாறு தேவை. (புளி பேஸ்ட் இருந்தாலும் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்).
வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு ஒரிரு வினாடிகள் வதக்கி, பின் அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பானதும், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்புப் போட்டு நன்றாக சேர்த்து விடவும். இப்பொழுது கத்திரிக்காய்த் துண்டங்களைப் போட்டு கிளறவும். காய் மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் விட்டு, ஒரு மூடியால் மூடி விட்டு, மிதமான் தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வைத்திருக்கவும். காய் வேகவில்லையென்றால், இன்னும் சிறிது நேரம் வைத்திருந்து, காய் வெந்தவுடன், வேகவைத்தப் பருப்பைக் கொட்டிக் கிளறி, கொதிக்க விடவும். கூட்டு கொதிக்க ஆரம்பித்ததும், புளித்தண்ணிரைச் சேர்த்துக் கிளறிவிட்டு, மீண்டும் நன்றாகக் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.
சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாயிருக்கும். தொட்டுக்கொள்ள பொரித்த கூழ்வடவம் இருந்தால் இன்னும் சுவை கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.