கத்திரிக்காய் சாதம்
கத்திரிக்காய் சாதம், வாங்கி பாத் என்றும் அழைக்கப்படும். இந்த சாதத்தில் சேர்க்கப்படும் பொடியை முன்னதாகவே செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் பொழுது மிகச் சீக்கிரத்தில் இதை செய்து விடலாம்.
தேவையானப்பொருட்கள்:
அரிசி - 1 கப்
கத்திரிக்காய் - 4 (நடுத்தர அளவு)
பெரிய வெங்காயம் - 1
புளி - பெரிய நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் பொடித்தது - 1 டீஸ்பூண் (விருப்பப்பட்டால்)
வாங்கி பாத் பொடி செய்வதற்கு:
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 2
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். கடைசியாக தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுத்து ஆற விடவும். வறுத்தெடுத்த பொருட்கள் எல்லாம் ஆறியவுடன் உப்பைச் சேர்த்து நன்றாகப் பொடி செய்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து, கெட்டியாக சாறு எடுக்கவும்.
அரிசியை வேக வைத்து சாதமாக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கத்திரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு சூடானதும் அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர் அதில் கத்திரிக்காய் துண்டுகளைப் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, காய் வேகும் வரை வதக்கவும். இப்பொழுது அதில் புளிச்சாறு, வெல்லம், வாங்கி பாத் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். காயுடன் மசாலா சேரும் வரை வதக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் மீதமுள்ள எண்ணையை விட்டு சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காய்ம், முந்திரி சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இதை கத்திரிக்காய் மசாலாவில் கொட்டிக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ளவும். கடைசியில் சாதத்தைக் கொட்டிக் கிளறி இறக்கி வைக்கவும்.
பொரித்த அப்பளம், வடவம் அல்லது சிப்ஸ் சேர்த்து சாப்பிட சுவையாயிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.