கத்திரிக்காய் கொஸ்து


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - நெல்லிக்காயளவு
பயத்தம் பருப்பு - 1/4 கப்
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பயத்தம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவைத்துக் கொள்ளவும்.

கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை ஊறவைத்து, கரைத்து, 1/2 கப் புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும், தக்காளிச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் அதில் கத்திரிக்காய்த் துண்டுகளைப் போட்டு, அத்துடன் புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். தண்ணீர் போதவில்லை என்றால், மேலும் சிறிது நீரைச் சேர்த்து, மிதமான தீயில் வேக விடவும். காய் நன்றாக வெந்ததும், வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறவும். மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.

வெண்பொங்கல், அரிசி உப்புமாவுடன் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். இட்லி, தோசை போன்றவற்றுடனும் பரிமாறலாம்.

கவனிக்க:

வெறும் கத்திரிக்காய்க்கு பதில், கத்திரிக்காயுடன், காரட், உருளைக்கிழங்கு, பெங்களூர் கத்திரிக்காய், பச்சை பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்தும் இந்த கொஸ்தை செய்யலாம்.

சிலர் கொஸ்தில் பருப்பு சேர்க்க மாட்டார்கள். அதற்கு பதில் சிறிது அரிசி மாவையோ அல்லது கடலை மாவையோ சிறிது தண்ணீரில் கரைத்து கொஸ்து கொதிக்கும் போது ஊற்றுவார்கள். இதுவும் சுவையாகவே இருக்கும்.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.