கருணைக்கிழங்கு மசியல்
தேவையானப்பொருட்கள்:
பிடி கருணைக் கிழங்கு - 4 அல்லது 5
புளி - கொட்டைபாக்களவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
சின்ன வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
கருணைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிறகு தண்ணீரை விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். பிரஷ்ஷர் குக்கரிலும் வேக வைக்கலாம்.
புளியை சிறிது நீரில் ஊறவைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கெட்டியான புளிக்கரைசலை எடுக்கவும்.
வெந்த கிழ்ங்கிலிருந்து, அதன் தோலை நீக்கி விட்டு, நன்றாக மசித்துக் கொள்ளவும். மசித்த கிழங்குடன், புளிச்சாறு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீரை ஊற்றி கலக்கி, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
தேங்காயை சற்று கொரகொரப்பாக அரைத்து கொதிக்கும் கிழங்கில் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
பின்னர் அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.
ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
கவனிக்க: பிடிகருணை சாப்பிட்டால், தொண்டை சற்று கரகரப்பாக இருக்கும். இதை தடுக்க, கிழங்கை வேக வைக்கும் பொழுது சிறிது புளியையும் சேர்த்து வேக வைத்தால், கரகரப்பு இருக்காது. கிராமங்களில், கிழங்கை வேகவைக்கும் பொழுது புளியம் இலையைச் சேர்த்து வேக வைப்பார்கள்.
பிடிகருணைக்குப் பதில், காராகருணை என்றழைக்கப்படும், சேனை கிழங்கையும் உபயோகித்து இந்த மசியலைச் செய்யலாம். மூலநோய்க்கு சிறந்த நிவாரணி என்று சொல்லப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.