கீரை கடலை கறி
தேவையானப்பொருட்கள்:
கீரை (எந்த வகையானாலும்) - 1 கட்டு
பச்சை வேர்க்கடலை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
காய்ந்த மிளகாய் - 2
பூண்டுப்பற்கள் - 4 முதல் 5 வரை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்
செய்முறை:
பச்சை வேர்க்கடலையை குக்கரில் போட்டு, சிறிது உப்பையும், தேவையான தண்ணீரையும் சேர்த்து, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
கீரையை நன்றாக தண்ணீரில் அலசி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயையும் இரண்டாகக் கிள்ளிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் (நான் ஸ்டிக்காக இருந்தால் நல்லது) கீரை, மஞ்சள்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். எண்ணை எதுவும் விடத்தேவையில்லை. வெறும் வாணலியில் வதக்கினாலே போதும். அடுப்பை சிறு தீயில் வைத்து, கீரை நன்றாக சுண்டும் வரை வதக்கி எடுக்கவும்.
வேறொரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் பூண்டுப்பற்களைப் போட்டு வதக்கவும். அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றையும் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் வதங்கியபின் தக்காளியைத் சேர்த்து, தக்காளி நன்றாகக் குழையும் வரை வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள வேர்க்கடலை, வதக்கிய கீரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கிளறி விடவும். சிறு தீயில் ஓரிரு வினாடிகள் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.
இதை சாதம், சப்பாத்தி இரண்டிற்குமே தொட்டுக் கொள்ளலாம். பிரட் துண்டுகளின் நடுவே வைத்து சான்ட்விட்ச் போலவும் சாப்பிடலாம்.
நல்ல பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்