மிளகு சாதம்


தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுக்கவும். சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைதையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்தெடுக்கவும்.

மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

இன்னொரு வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

அப்பளத்துடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.