கலகலா
கலகலா, கல்கல், குல்குல் எனறு பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்த பலகாரம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது செய்யப்படும் ஒரு அருமையான இனிப்புப் பண்டம். இதில் முட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து செய்வது வழக்கம்.
நான் முட்டையைத் தவிர்த்து விட்டு, இதை செய்தேன். மிகவும் சுவையாகவே இருந்தது.
தேவையானப்பொருட்கள்:
மைதா - 1 கப்
ரவா - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
வெண்ணை அல்லது நெய் - 2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 1/2 கப் அல்லது மாவு பிசைவதற்கு தேவையான அளவு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
மைதா, ரவா, பொடித்த சர்க்கரை, வெண்ணை, சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். அதில் வெதுவெதுப்பான பாலை சிறிது சிறிதாக விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.
பிசைந்த மாவை, சிறிது எடுத்து ஒரு சிறு அருநெல்லிக்காய் அளவிற்கு உருட்டிக் கொள்ளவும். எல்லா மாவையும் சிறு சிறு உருண்டைகளாக்கி வைக்கவும்.
ஒரு முள்கரண்டியின் பின்புறத்தில் சிறிது நெய்யைத் தடவி, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து சற்று இழுத்து விட்டு நன்றாக அழுத்தவும். பின் அதை எடுத்து சுருட்டவும். சங்கு போன்ற வடிவத்தில் கிடைக்கும். எல்லா உருண்டைகளையும் இப்படியே செய்யவும்.
ஒரு வாணலியில் பொரிப்பதறகு தேவையான எண்ணையில் விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், செய்து வைத்திருக்கும் "கலகலாவை" கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கொதித்து, ஒரு கம்பி பாகு பதத்திற்கு வநததும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடவும். சர்க்கரை பாகில் பொரித்து வைத்துள்ள கலகலாவைப் போட்டு, பாகு அதன் மேல் நன்றாகப் படும்படி கிளறி எடுத்து, ஒரு தட்டில் கொட்டி, தனித்தனியாகப் பரப்பி விடவும். சற்று நேரத்தில், சர்க்கரை பாகு பூத்து கலகலாவின் மேல் படிந்து விடும். காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
கவனிக்க: மேற்கண்ட முறையில் செய்வது சற்று நேரம் பிடிக்கிம். நேரம் இல்லாதவர்கள், சிறு உருண்டைகளாக உருட்டி செய்வதற்குப் பதில், பெரிய எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக இட்டு, கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தும் பொரிக்கலாம். இப்படி செய்வதற்கு "துக்கடா" என்று சொல்வார்கள்.
இனிப்பு துக்கடா குறிப்பிற்கு இங்கே சொடுக்கவும்.
good tips its very useful
பதிலளிநீக்கு