உருளைக்கிழங்கு தயிர் மசாலா


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 2
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பச்சை கொத்துமல்லி இலை - சிறிது
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தயிர் - 1/2 கப்

செய்முறை:

உருளைக்கிழங்கை, குக்கரில் போட்டு தேவையான தண்ணீரை விட்டு, 1 அல்லது 2 விசில் வரும் வரை அல்லது கிழங்கு முக்கால் வேக்காடு வேகும் வரை வேக விட்டு எடுக்கவும். குக்கர் ஆறியதும், அதை திறந்து, கிழங்கை எடுத்து தோலை உரித்து விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலைச் சேர்க்கவும். சோம்பு சற்று பொரிந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பச்சை வாசனை போனவுடன், உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துக் கிளறி விடவும். அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது நீர் (1/4 கப் அளவிற்கு), சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கிளறி மூடி போட்டு, மிதமான தீயில் உருளைக் கிழங்கு மிருதுவாக வேகும் வரை வைத்திருக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாயைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில், தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, ஓரிரு வினாடிகள் கிளறி, இறக்கி வைக்கவும்.

சப்பாத்தி, பூரி அல்லது சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம். மைதா பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

3 கருத்துகள்:

  1. வீட்டில் செய்ய சொல்கிறேன். தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. உருளை கிழங்கு தயிர் மசாலா செய்த்தது இல்லை.

    செய்துப் பார்க்கிறேன்.

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. Potato Curd Masala. This is a new
    item to us. We will try it out.
    Thank you. Wish you and your Team a Happy Pongal.

    Ponnammal Balasubramanian

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.