கொங்குநாடு பருப்பு


"பருப்பு" என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பருப்பு தென்னிந்திய சமையலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமணம் மற்றும் இதர விருந்துகளில் முதலில் பரிமாறப் படுவது பருப்புதான். "பருப்பில்லாமல் கல்யாணமா" என்று கூறப்படும் அளவிற்கு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. குழந்தைகளுக்கு முதல் திட உணவாக நாம் கொடுப்பதும் இந்த பருப்பு கலந்த சாதத்தைத் தான்.

சாதாரணமாக வீட்டில் பருப்பு சமைப்பதென்றால், சாம்பாருக்கு வேக வைத்த பருப்பிலிருந்து சிறிது எடுத்து, உப்பு சேர்த்து மசித்து வைப்பதுதான். ஆனால் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் கொங்குநாட்டுப் பக்கம் பருப்பு சமைக்கும் முறையைப் பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. பருப்பில் சிறிது விளக்கெண்ணையை ஊற்றி திறந்தப் பாத்திரத்தில் வேக வைத்தெடுத்து, தேங்காய் எண்ணையில் தாளித்துக் கொட்டினார்கள்.

விளக்கெண்ணை, வாயுவை நீக்கி செரிமானத்தை எளிதாக்கும் என்றார்கள். ஆனால் நிறையப்பேர் வீட்டில் விளக்கெண்ணை இருப்பில் வைத்துக் கொள்ளுவதில்லை. எனவே நான் சிறிது நல்லெண்ணை சேர்த்து செய்தேன். திறந்தப் பாத்திரத்தில் வேக நேரம் அதிகமாகும் என்பதால், பிரஷ்ஷர் குக்கரில் வேக வைத்து செய்தேன்.

தேவையானப் பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்
நல்லெண்ணை - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

தேங்காய் எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பற்கள் (சிறிய அளவு) - 5
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
நெய் - 4 டீஸ்பூன் (சாதத்துடன் பரிமாற)

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவி, குக்கரில் போட்டு அத்துடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை, மஞ்சள் தூள், 3 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும். குழைய விட வேண்டாம், மிருதுவாக வெந்தால் போதும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் தேங்காய் எண்ணையை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் சீரகத்தைச் சேர்க்கவும். பருப்பு சற்று சிவந்தவுடன், வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். பூண்டை சற்று தட்டிப் போடவும். சில வினாடிகள் வதக்கியப் பின் அதில் வேக வைத்துள்ளப் பருப்பைச் சேர்க்கவும். உப்பையும் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். ஒரு கொதி வநததும்
இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன், சிறிது நெய்யை விட்டு கலந்து சாப்பிடவும். தொட்டுக் கொள்ள பொரித்த அப்பளம் மற்றும் பச்சை மிளகாய் பச்சடி நன்றாக இருக்கும்.

4 கருத்துகள்:

  1. கொங்கு நாட்டு பருப்பு மிகவும் நன்றாக இருக்கிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான சமையல் குறிப்பு ! நன்றிங்க !

    பதிலளிநீக்கு
  3. madam kongunadu parupu super.my little 2 yrs kid like this

    ma and she ask me daily as pappu nei socchi

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.