பச்சை மிளகாய் பச்சடி
தேவையானப்பொருட்கள்:
பச்சை மிளகாய் - 6 முதல் 8 வரை
புளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வறுத்து பொடிக்க:
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
தாளிக்க:
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில், துவரம் பருப்பு, தனியா, அரிசி, பெருங்காயம் ஆகியவற்றை, ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியதும் கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து, கரைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து, 2 கப் அளவிற்கு எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் இலேசாகக் கீறிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை நிறம் மாறி வெளிர் நிறம் வந்தவுடன் எடுத்து தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் வெந்தயத்தைப் போட்டு வறுக்கவும். (கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்). அதில் புளித்தண்ணீரை விடவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். புளி நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து விட்டு, அத்துடன் வெல்லத்தூள், பொடித்து வைத்துள்ள் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வதக்கி வைத்துள்ள மிளகாயைப் போடவும். மேலும் ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
தயிர் சாதம் மற்றும் பருப்பு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
அருமையான குறிப்பு.பச்சை மிளகாய் பச்சடி செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல குறிப்பு ! நன்றி !
பதிலளிநீக்கு