கேழ்வரகு இனிப்பு மற்றும் கார சேமியா

கேழ்வரகு சேமியா,  வெவ்வேறு நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு, அவரவர் நிறுவன பெயரில் விற்கப்படுகிறது.   நான் "அணில் ராகி சேமியாவை" உபயோகித்து இனிப்பு மற்றும் கார சேமியா செய்தேன்.    சேமியாவை சமைக்கும் முறையை சேமியா பாக்கெட்டிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.  அதன்படி சேமியாவை வேக வைத்துக் கொண்டால்,  அதை உபயோகித்து விதவிதமான உணவைத் தயாரிக்கலாம்.

சேமியா வேக வைக்க:

ஒரு பாக்கெட் (200 கிராம்) ராகி சேமியாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, மூன்று நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் அதை அலசி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, எண்ணை தடவிய இட்லி தட்டில் பரப்பி, 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுத்து, ஆற விடவும்.

இனிப்பு சேமியா:
தேவையானப்பொருட்கள்:

வேக வைத்த சேமியா (மேற்படி வேக வைத்ததில் பாதி அளவு)
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
சர்க்கரை - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

மேற்கூறியுள்ள அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

கார சேமியா:


தேவையானப்பொருட்கள்:

வேக வைத்த சேமியா (மேற்படி வேக வைத்ததில் பாதி அளவு)
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
கறிவேப்பிலை - சிறிது
நறுக்கிய காய்கள் (கேரட், குடமிளகாய், தக்காளி போன்றவை ) - 1/2 கப்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.  பருப்புகள் சிவக்க வறுபட்டதும், வெங்காயம், பச்சைமிளகாய் (இரண்டாகக் கீறிப் போடவும்), கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.  பின்னர் அதில் காய்களைச் சேர்த்து, சிறிது உப்பையும் போட்டு ஓரிரு நிடங்கள் வதக்கவும்.  கடையில் வேக வைத்துள்ள சேமியா, சிறிது உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும்.  அடுப்பிலிருந்து இறக்கும் முன், எலுமிச்சம் பழச்சாற்றச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.



1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.