மாம்பழ சாம்பார்

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
நாட்டு மாம்பழம் (சிறிதாக இருக்கும்) - 4 முதல் 5 வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

ந்ண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு எடுக்கவும்.

புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். புளித்தண்ணீர் 3  கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

மாம்பழத்தைக் கழுவி, இரண்டு பக்கமும் முக்கால் பாகம் கீறிக் கொள்ளவும். அடி பாகம் வரை வெட்டாமல், மாம்பழத்தின் அடி பாகத்தை அப்படியே வைத்துக் கீறிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை விட்டு, அதில் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதித்து வரும் பொழுது மாம்பழத்தைப் போட்டு மூடி வைத்து, மிதமான தீயில் ஓரிரு நிமிடங்கள் வேக விடவும். பின்னர் அதில் வேக வைத்துள்ளப் பருப்பைச் சேர்த்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

பின்குறிப்பு: இந்த மாம்பழ சாம்பாருக்கு சின்ன சைஸில் கிடைக்கும் நாட்டு மாம்பழத்தை முழுதாகப் போட்டு செய்வார்கள். பெரும்பாலும் அவரவர் தோட்டத்தில் விளையும் பழத்தில், சாம்பார், மோர்க்குழம்பு, ரசம் என்று விதவிதமாக மாங்காய் சீசனில் செய்வார்கள் மார்க்கெட்டிலும் இந்த வகை நாட்டுப் பழங்கள் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால், பெரிய மாம்பழத்தை (பெரிய துண்டுகளாகப் போட்டு) உபயோகித்தும் செய்யலாம். இந்த சாம்பாரின் சிறப்பு, மாம்பழச்சாறு சாம்பாருடன் கலந்து தனி சுவையைக் கொடுக்கும். சாம்பாரிலுள்ள மாம்பழத்தை சாப்பிட்டால், இனிப்பும், காரமுமாக அதும் ஒரு வித தனி சுவையுடன் இருக்கும்.


 
 

4 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.