உடுப்பி சாம்பார்


வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல் செய்யும் இந்த சாம்பார் பற்றிய குறிப்பினை சமீபத்தில் ஒரு நாளிதளில் பார்த்தேன்.  செய்து பார்த்ததில் சுவை உடுப்பி ஓட்டல் சாம்பார் போன்றே இருந்தது.  நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கத்திரிக்காய் (சிறிய அளவு) - 1
உருளைக்கிழங்கு (சிறிய அளவு) - 1
வெல்லம் பொடித்தது - 1 டீஸ்பூன்

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் (நடுத்தர அளவு) - 3 அல்லது 4
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவி, குக்கரில் போட்டு அத்துடன் ஒரு கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து குழைய வேக விட்டு எடுக்கவும்.

ஒரு வாணலியில்  சிறிது எண்ணை விட்டு அதில் மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். கடைசியில் கறிவேப்பிலையைப் போட்டு சற்று வதக்கி, பின்னர் அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து, வறுத்த பொருட்கள் எல்லவாற்றையும் ஒன்றாகப் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

கத்திரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து, கரைத்து, புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, காய்கறி துண்டுகளைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி,  காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து வேக விடவும்.  காய் நன்றாக வெந்ததும் அதில் புளித்தண்ணீரை விடவும்.  அத்துடன் உப்பு, வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்து, கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போனதும் அதில் வேக வைத்துள்ள பருப்பு, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

கவனிக்க:  நான் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு மட்டும் இதில் சேர்த்துள்ளேன்.  பறங்கிக்காய், கேரட் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

6 கருத்துகள்:

  1. வித்தியாசமான சாம்பார்... வீட்டில் பகிர்வை Bookmark செய்ய சொல்லி விட்டார்கள்... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. செய்து பார்த்துவிட வேண்டியது தான். !

    பதிலளிநீக்கு
  3. தங்களது சமையல் குறிப்புகள் அனைத்துமே சிறப்பாக உள்ளது.
    தங்களது குறிப்பின்படி அப்படியே செய்தால் மிக நன்றாக ருசியாக உள்ளது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
  4. 'உண்டிற் கொடுத்தோர்’ என்பதை, ‘உண்டி கொடுத்தோர்’ என்று திருத்தலாமே.

    பதிலளிநீக்கு
  5. பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. மாற்றி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. இந்த குறிப்பை செய்தேன் ..மிக அருமையாக வந்தது .மிக்க நன்றி
    Angelin

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.