புடலங்காய் வறுவல்


தேவையானப்பொருட்கள்:

புடலங்காய் - 1
பொட்டுக்கடலை பொடி அல்லது கடலை மாவு - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - ஓரிரு துளிகள்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

 செய்முறை:

புடலங்காயின் விதை, மற்றும் உள்ளே இருக்கும் வெள்ளையான நாரை நீக்கி விட்டு, நீள வாக்கில், கீழ்கண்ட படத்தில் உள்ளது போல் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  
நீள புடலங்காயானால் ஒன்று போதும், குட்டையான காயானால் 2 உபயோகிக்கவும்.

 நறுக்கிய காயில் சிறிது உப்பைத் தூவி, பிசறி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற விடவும்.  பின்னர் காயை நன்றாகப் பிழிந்து விட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.  அத்துடன் பொட்டுக்கடலை பொடி அல்லது கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், வெள்ளை எள், பெருங்காயத்தூள, கறிவேப்பிலை  (பொடியாக நறுக்கி சேர்க்கவும்), எலுமிச்சம் பழச்சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசறி விடவும்.  அதன் மேல் ஒரு கை தண்ணீரைத் தெளித்து, எல்லா மாவும் காயில் நன்றாக ஒட்டும் படி பிசறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை காய வைத்து, ஒரு கை காயை எடுத்து உதிரியாக எண்ணையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  எல்லாவற்றையும் இப்படியே பொரித்தெடுக்கவும்.

கடைசியில், ஒரு கொத்து கறிவேப்பிலையை எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து, வறுத்து வைத்துள்ள காயின் மேல் தூவினால் போல் போட்டால் பார்க்க நன்றாக இருக்கும்.

சாம்பார் சாதம் / ரசம் சாதம் / கலந்த சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


4 கருத்துகள்:

  1. எல்லா மாவையுமா சேர்த்து போடணும், இல்ல ஏதாவது ஒன்னெ போட்டா போதுமா? ஏன்னா கடலை மாவும் அரிசி மாவும் சேராதே? எல்லாம் ஒரு எக்ஸ்ப்ரிமென்ட்டுதானேன்னு சொன்னா சரி:)

    பதிலளிநீக்கு
  2. சுவையாக் இருக்கும் போல. எங்க வீட்டில புடலங்காய் அலர்ஜி:)
    அவருக்குச் செய்து கொடுக்கிறேன்.!!

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.