கற்பூரவல்லி தயிர் பச்சடி

"மெக்ஸிகன் மின்ட்", என்று கூறப்படும் கற்பூரவல்லி இலை (ஒமவல்லி இலை என்றும் சொல்வார்கள்) ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  இதை பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது கஷாயம்/டீ தயாரித்தும் குடிக்கலாம் சளி, இருமல் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

உணவிலும் சேர்த்து சமைக்கலாம்.  தயிருடன் கலந்து பச்சடியாக செய்தால் சுவையாக இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

கற்பூரவல்லி இலை - 5 முதல் 6 வரை (ஒரு கைப்பிடி)
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகு - 5 முதல் 6 வரை
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1 கப்

தாளிக்க:

எண்ணை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - இரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு சிறு வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஓரிரு வினாடிகள் வதக்கிக் கொள்ளவும்.  பின்னர் அத்துடன் தேங்காய் துருவலைச் சேர்த்து மீண்டும் ஓரிரு வினாடிகள் வதக்கி விட்டு, அடுப்பை அணைத்து விட்டு, கற்பூரவல்லி இலைகளைச் சேர்த்து வதக்கி ஆற விடவும்.  ஆறியபின், விழுதாக அரைத்தெடுக்கவும்.

தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, அதில் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்  ஆகியவற்றைத் தாளித்து கொட்டிக் கலந்து பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.