- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
மோர்க்குழம்பு
தேவையானப் பொருட்கள்:
மோர் - 2 கப் (திக்காக இருக்கவேண்டும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 10 அல்லது 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.
பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.
மோரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் கொட்டவும்.
குறிப்பு:
தயிராக இருந்தால், ஒரு பாத்திரத்தில் கொட்டி மோர் சிலுப்பியால் நன்றாக சிலுப்பிக் கொள்ளவும். குழம்பை நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது. அப்படிக் கொதித்தால், குழம்பு நீர்த்துப் போய் விடும். குழம்பில் காய் சேர்த்தும் செய்யலாம். வெண்டைக்காய், பெங்களூர் கத்திரிக்காய், வெள்ளைப் பூசணிக்காய் பொருத்தமாய் இருக்கும். வெண்டைக்காய் சேர்ப்பதென்றால், காம்பு நீக்கி விட்டு, இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணையில், பிசுக்கு போக வதக்கி, குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். மற்ற காய்கள் என்றால், காயை சிறிது வேகவைத்து சேர்க்கவும். நாலைந்து மசால் வடைகளை குழம்பில் சேர்த்தால், வடை ஊறி, அருமையான வடை மோர்க்குழம்பு தயார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
Really very nice explanation
I tried...Came well
Nice mor Kuzhambu Preparatio, by Aduppankarai.
Very simple but nice recipe
கருத்துரையிடுக