• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
பழ வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழ வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பலாப்பழ அல்வா மற்றும் பாயசம்

இது பலாப்பழ சீசன்.  இப்பொழுது கிடைக்கும் பழத்தை உபயோகித்து, பலாப்பழ விழுதை செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் பொழுது, "இனிப்பு இலை அடை", "கொழுக்கட்டை", "பாயசம்" என்று விதவிதமாக சமைக்கலாம். பெரும் அளவில் செய்ய முடியாவிட்டால், தேவைக்கேற்ற பலாச்சுளைகளை வாங்கி சிறு அளவில் செய்யலாம்.

பலாப்பழ விழுது
  

தேவையானப்பொருட்கள்:

பலாச்சுளை - 10 முதல் 15 வரை
பொடித்த வெல்லம் - 1 கப்
சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை:

பலாச்சுளையிலிருந்து, கொட்டையை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் 1/4 தண்ணீர் சேர்த்து, பிரஷ்ஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.  இதை மைக்ரோவேவ் அவனிலும் அல்லது திறநத பாத்திரத்திலும் வேக வைத்தெடுக்கலாம்.  வெந்தப் பலாச்சுளை சற்று ஆறியதும், மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

விழுது எவ்வளவு இருக்கிறதோ அதற்கு சம அளவிற்கு வெல்லம் சேர்க்க வேண்டும்.  மேற்கூறிய அளவிற்கு ஒரு கப் வரை விழுது கிடைக்கும்.  எனவே ஒரு கப் பொடித்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.  வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து வடிகட்டவும்.  வடிகட்டிய வெல்லப்பாகை ஒரு அடி கனமான் வாணலியில் விட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதையும் சேர்த்து, அடுப்பிலேற்றி, மிதமான தீயில் கிளறவும்.  பாகும், விழுதும் நன்றாகச் சேர்ந்து, கெட்டியாக சுருண்டு வரும் வரைக் கிளறி, சுக்குப்பொடியைத் தூவி மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

பலாப்பழ அல்வா


அல்வா செய்ய வேண்டுமென்றால், மேற்கண்ட முறையில் விழுது தயாரித்து, சுக்குப் பொடிக்குப் பதில் சிறிது ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரிப்பருப்பு, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

பலாப்பழ பாயசம் 


பாயசம் செய்ய மேற்கண்ட முறையில் விழுது தயாரித்து, கடைசியில் ஒரு கப் தேங்காய்பாலைச் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த சிறிதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள், முந்திரி,  ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.  தேங்காய்பாலிற்குப்பதில் சாதாரண பாலையும் சேர்க்கலாம்.

கீரணிப்பழம்


கோடை நெருங்கி விட்டது. சென்னையின் மூலை, முடுக்கெல்லாம் "தர்பூசணி", "முலாம் பழம்" "கீரணிப் பழம்" என்று குவிந்து கிடக்கும் இந்த பழங்கள், கோடைக்கேற்ற, குளிர்ச்சியான பானங்கள் தயாரிக்க மட்டுமன்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. "மெலன்" என்று பொதுவாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தப் பழங்கள் வெவ்வேறு வகையான வடிவத்திலும், வண்ணத்திலும் கிடைக்கிறது. அதில் ஒரு வகைதான் "கீரணிப் பழம்". இது உடற்சூட்டைத் தணித்து, களைப்பைப் போக்க வல்லது. நெஞ்செரிச்சலை நீக்க உதவும். இதில் விட்டமின் "A", "B" மற்றும் பொட்டாசியமும் உள்ளது. ஆயுர்வேதத்தில், சிறுநீரகக் கோளாறு, மலச்சிக்கல், வாய்வுக் கோளாறு, குடற்புண் ஆகியவற்றை சரிசெய்ய, இந்தப் பழம் பரிந்துரைக்கப் படுகிறது.

இதன் தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது சர்க்கரையைத் தூவி அப்படியே சாப்பிடலாம்.

அல்லது வெட்டிய துண்டுகளை மிக்ஸியில் போட்டு, தேவையான சர்க்கரையும், சிறிது தண்ணீரையும் சேர்த்து சாறாக்கி, குளிர வைத்துக் குடிக்கலாம்.

பாலைச் சேர்த்து மிக்ஸியில் அடித்து, "மில்க் ஷேக்" செய்தும் குடிக்கலாம்.

இத்துடன் சிறிது எலுமிச்சம் சாறு, இஞ்சி சாறு, தேன் கலந்தும் சாப்பிடலாம்.

அன்னாசிப்பழ பானகம்


தேவையானப்பொருட்கள்:

அன்னாசிப்பழம் - பாதி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புதினா - சிறிது
பச்சை கொத்துமல்லி - சிறிது
வெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இரண்டு, மூன்று துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியை மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, புதினா, கொத்துமல்லி, வெல்லம், சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தெடுக்கவும். அதை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்றாக வடிகட்டவும்.

பின்னர் அதில் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். எடுத்து வைத்திருக்கும் அன்னாசிப் பழத்துண்டுகளை பொடியாக நறுக்கி அதன் மேல் தூவி விடவும்.

குளிர்பதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.

தர்பூசணி


கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.


பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.


மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

இந்தியாவில் இப்பொழுது கோடை வெயில் கொளுத்துகிறது. வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.

ஜுஜுபி


ஜுஜுபி, சிவப்பு ஈச்சை, சீனா ஈச்சை என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப்பழம் சீனாவைத் தாயகமாகக் கொண்டது. 4000 அண்டுகளாக பயிரிடப்படும் இந்த மரம் சீனாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கும் பரவி, இந்தியாவிலும் விளைகிறது. உருண்டையாகவும், நீளவடிவிலும், நெல்லிக்காயளவிலிருந்து எலுமிச்சம் பழ அளவிற்கு இருக்கும் இந்தப்பழம், நூற்றுக்கணக்கான வகைகளை உடையது.

அட இது என்னப் பழம் என்று பார்க்கிறீர்களா? அதாங்க நம்ம இலந்தை பழம்.

வட இந்திய மாநிலங்களில் விளையும் பழம் சற்று நீளமாகவும் பெரிதாகவும் இருக்கும். சதைப்பற்றும் அதிகமாக இருக்கும்.


தமிழ்நாட்டில் சிறு நெல்லிக்காயளவிற்கு இருக்கும். தள்ளு வண்டியில் வைத்து பள்ளிக்கூடங்களுக்கருகில் விற்கப்படும். உப்பு, மிளகாய்பொடி தூவி பொட்டலம் போட்டு சாப்பிடுவதில் பிள்ளைகளுக்கு ஒரே உற்சாகம் தான்.

அப்படியே சாப்பிடப்படும் இந்தப் பழத்திற்கு சமையலறையில் அவ்வளவாக வரவேற்பு இல்லாவிடினும், மேலை நாட்டினர் இதை மிட்டாய், ஊறுகாய் மற்றும் இனிப்பு வகைகள் செய்வதில் உபயோகிக்கிறார்கள்.

தமிழ் நாட்டை பொறுத்தவரை, நான் அறிந்த ஒரே தின்பண்டம் "இலந்தை வடை" தான். (வேறு பண்டங்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்). வெயிலில் காய வைத்தப் பழத்திலிருந்து கொட்டைகளை நீக்கி விட்டு, அத்துடன் கொஞ்சம் புளி, மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இடித்து, வடை போல் மெல்லியதாகத் தட்டி, மீண்டும் வெயிலில் காய வைத்து எடுத்து வைப்பார்கள். கிராமத்துக் கடைகளில் கிடைத்து வந்த இது, இப்பொழுது நகர அங்காடிகளிலும் கிடைக்கிறது.

மருத்துவ குணங்கள் நிறைந்த இது, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. வயிற்று வலி, தொண்டைப்புண், மலச்சிக்கல், குடற்புண் ஆகியவற்றை ஆற்றுப்படுத்த வல்லது.

காய்ந்தப் பழத்தைப் பொடி செய்து ஒரு டீஸ்பூன் உட்கொண்டால், பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு கட்டுபடும்.

என்னதான் மருத்துவ குணங்கள் இருந்தாலும், இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவதில்லை. ஆனாலும், இதைப் பார்க்கும் பொழுது நிச்சயமாக அவர்கள் பள்ளிக்கூட நாட்கள் நினைவிற்கு வராமல் போகாது.

நாவல் பழம்


நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.

நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

இது ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரைக் கிடைக்கும்.

இதைச் சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். இதன் துவர்ப்பு ருசியும், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் நாவில் படிந்துவிடும் நீல நிறமும் காரணங்களாக இருக்கலாம்.

வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது.

தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.

பப்பாளி - தேவதைகளின் பழம்


கிறிஸ்தோபர் கொலம்பஸ், முதன்முறையாக பப்பாளிப் பழத்தைச் சுவைத்தப் பொழுது, இதை "தேவதைகளின் பழம்" என்று வர்ணித்துள்ளார்.


பப்பாளிப்பழம், சாறு மிகுந்த, இனிப்பானப் பழம். இதில் ஆரோக்கியத்திற்குத் தேவையானச் சத்துக்கள், நிறைய இருக்கின்றன.

இது சீரண சக்தியை அதிகரிக்கும். இதய நோய், மூட்டு வலி, நுரையீரல் நோய், கண் நோய் ஆகியவைற்றை தடுக்க வல்லது.

இதில் வைட்டமின் "ஏ", "சி" மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இதில் உப்புச்சத்து குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதோடு, இதன் கலோரி அளவும் குறைவானது. மேலும், இது உடற் கொழுப்பின் அளவையும் குறைக்கக் கூடியது.

இதன் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
அல்லது சுவையான "மில்க் ஷேக்" செய்தும் சாப்பிடலாம்.

சப்போட்டாப்பழம்


சப்போட்டாப்பழம், "சிக்கு" என்று பிற மாநிலங்களில் அழைக்கப் படுகிறது. இதில், நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை நிறைய அடங்கியுள்ளது.

இந்த மரத்தண்டிலிருந்து எடுக்கப்படும் பால் பிசுக்குத்தன்மை மிகுந்தது. அதிலிருந்துதான் "சிக்லெட்" எனப்படும் மிட்டாய் தயாரிக்கப் படுகிறது.

சப்போட்டாப்பழத்தை காய வைத்து, பொடியாக்கி விற்பனை செய்கிறார்கள். இது ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு உதவுகிறது.

பழத்தின் தோல், கொட்டை ஆகியவற்றை நீக்கி விட்டு, துண்டங்களாக்கி அப்படியே சாப்பிடலாம்.

சப்போட்டாவை உபயோகித்து, அல்வா, பாயசம் போன்றவற்றையும் செய்யலாம். ஆனால், எல்லோராலும் விரும்பப்படுவது, "மில்க் ஷேக்" தான்.


தேவையானப்பொருட்கள்:

சப்போட்டாப்பழம் - 2 பெரியது
பால் ‍- 1 கப்
சர்க்கரை ‍- 1 டீஸ்பூன் (விருப்பமானால்)

செய்முறை:

பழத்தின் தோல், கொட்டை ஆகியவற்றை நீக்கி விட்டு, துண்டுகளாக வெட்டி, அத்துடன் சிறிது சர்க்கரையைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின்னர் அதில் பாலை விட்டு மீண்டும் ஒரிரு வினாடிகள் சுற்றவிட்டு எடுத்து, சற்று குளிர வைத்து பரிமாறவும்.

குறிப்பு: ஒரு டேபிள்ஸ்பூன் கிரீம் அல்லது பால் பவுடரை சேர்த்து அரைத்தால், சுவை கூடும்.

நான், MTR பாதாம் பவுடரைச் சேர்த்து செய்தேன். சுவையாக இருந்தது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...