• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
சூப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பச்சை பயறு சூப்


தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1/2 கப
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 1
தக்காளி (நடுத்தர அளவு) - 1
எண்ணை அல்லது வெண்ணை - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சை பயறை 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பிரஷர் குக்கரில் ஊற வைத்த பயறு, உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு 2 முதல் 3 கப் வரை தண்ணீரைச் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.

குக்கர் ஆறியவுடன், திறந்து வெந்தப் பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

அடி கனமான் ஒரு பாத்திரத்தில் எண்ணை அல்லது வெண்ணையைப் போட்டு சூடானதும் பூண்டைச் சேர்த்து சிவக்க வதக்கவும்.  பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து அதையும் சிவக்க வதக்கவும்.  அத்துடன் அரைத்து வைத்துள்ள பயறு விழுதைப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.  ஒரு கொதி வநததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் சூப்பை ஊற்றி, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி, சோள சிப்ஸ் அல்லது கேரட் துண்டுகளோடு பரிமாறவும்.

பூண்டு சூப்


தேவையானப்பொருட்கள்:

பூண்டுப் பற்கள் - 5 முதல் 6 வரை
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1
பச்சை கொத்துமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒருகம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும்.  பின்னர் சுட்ட பூண்டு, 2 அல்லது 3 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும். அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலை ஆகியவற்றைத் தூவி பரிமாறவும்.

பன் அல்லதுரொட்டித் துண்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.



உருளைக்கிழங்கு கேரட் சூப்


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
கேரட் - 2
வெங்காயம் - 1
பூண்டுப்பற்கள் - 2
வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை இலை - 1
தண்ணீர் - 4 முதல் 5 கப் வரை
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் கழுவி, தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2 கப் உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் 2 கப் கேரட் துண்டுகள் தேவை.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிரஷர் குக்கரை அடுப்பிலேற்றி அதில் நெய் அல்லது ஆலிவ் எண்ணையை (இல்லையென்றால் சாதரண சமையல் எண்ணையை உபயோகப்படுத்தலாம்)  விட்டு வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.  பின்னர் அத்துடன் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட் துண்டுகள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்கவும். பின்னர் அதில் 4 முதல் 5 கப் தண்ணீரை விட்டு, அத்துடன் பட்டை இலையைப் (இதை பிரிஞ்சி இலை என்றும் சொல்வார்கள்) போடவும்.  மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். குக்கரின் சூடு தணிந்ததும், மூடியைத் திறந்து அதிலுள்ள பட்டை இலையை எடுத்து விட்டு, பிளண்டரை உபயோகித்துக் கடைந்து விட்டு, உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

வீட் பிரட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:  மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டுமெனில், குக்கரிலிருந்து தண்ணீரை வடித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.  மீதமுள்ள உருளைகிழங்கு, கேரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுத்து, வடித்து வைத்துள்ள நீரில் போட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி சூடாக்கி (கொதிக்க விட தேவையில்லை) பரிமாறவும்.

தர்பூசணி நீர்மோர்


தேவையானப்பொருட்கள்:

தர்பூசணி (விதை நீக்கி நறுக்கியது) - 1 கப்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
புதினா - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2

செய்முறை:

தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும்.

கண்ணாடி தம்ளர் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும்.

கவனிக்க: வெங்காயத்தின் பச்சை வாசனைப் பிடிக்காதவர்கள், அரை டீஸ்பூன் எண்ணையில் வெங்காயத்தை வதக்கி சேர்க்கலாம்.

காரட் சூப்


தேவையானப்பொருட்கள்:

காரட் - 2
பெரிய வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புதினா - சிறிது
உப்பு, மிளகு தூள் - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

குக்கரில், வெட்டி வைத்துள்ள காரட், வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்க்கவும். அதில் கட்டி வைத்துள்ள மிளகாய் முடிச்சைப் போடவும். சிறிது உப்பையும் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். குக்கர் ஆறியபின் , குக்கரைத் திறந்து, அதிலுள்ள மிளகாய் முடிச்சை எடுத்து அப்படியே குக்கரில் பிழிந்து விடவும். வெந்த காரட்டை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து, வடிகட்டவும். வடிகட்டிய சூப்பை மீண்டும் அடுப்பிலேற்றி சிறிது கொதிக்கவிடவும். சூப் கொதித்து தேவையான பதத்திற்கு வந்ததும், கீழே இறக்கி வைத்து, கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

பரிமாறும் முன் அத்துடன் சிறிது பாலாடைக்கட்டியைத் துருவி அலங்கரித்துக் கொடுக்கலாம். அல்லது கிரீம் சிறிது சேர்க்கலாம். வறுத்த ரொட்டித்துண்டுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு: காரட்டையும், வெங்காயத்தையும், சிறிது வெண்ணையிலோ அல்லது நெய்யிலோ வதக்கி வேக வைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...