• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
பச்சடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பச்சடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கற்பூரவல்லி தயிர் பச்சடி

"மெக்ஸிகன் மின்ட்", என்று கூறப்படும் கற்பூரவல்லி இலை (ஒமவல்லி இலை என்றும் சொல்வார்கள்) ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  இதை பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது கஷாயம்/டீ தயாரித்தும் குடிக்கலாம் சளி, இருமல் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

உணவிலும் சேர்த்து சமைக்கலாம்.  தயிருடன் கலந்து பச்சடியாக செய்தால் சுவையாக இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

கற்பூரவல்லி இலை - 5 முதல் 6 வரை (ஒரு கைப்பிடி)
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகு - 5 முதல் 6 வரை
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1 கப்

தாளிக்க:

எண்ணை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - இரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு சிறு வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஓரிரு வினாடிகள் வதக்கிக் கொள்ளவும்.  பின்னர் அத்துடன் தேங்காய் துருவலைச் சேர்த்து மீண்டும் ஓரிரு வினாடிகள் வதக்கி விட்டு, அடுப்பை அணைத்து விட்டு, கற்பூரவல்லி இலைகளைச் சேர்த்து வதக்கி ஆற விடவும்.  ஆறியபின், விழுதாக அரைத்தெடுக்கவும்.

தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, அதில் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்  ஆகியவற்றைத் தாளித்து கொட்டிக் கலந்து பரிமாறவும்.

தக்காளி இனிப்பு பச்சடி


திருமண விருந்துகளில் "இனிப்பு பச்சடி" கண்டிப்பாக இடம் பெறும்.  இது "தக்காளி", "பீட்ரூட்" அல்லது பழத்துண்டுகளை வைத்து செய்யப்படும்.  தக்காளி இனிப்பு பச்சடிக்கான குறிப்பு:

தேவையானப்பொருட்கள்:

நன்கு பழுத்த தக்காளி - 3
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, தக்காளியை முழுதாகப் போட்டு மூடி வைத்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு, தக்காளியை வெளியே எடுத்து ஆற விடவும். பின்னர் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.  பச்சடி கொதிக்க ஆரம்பித்து, சற்று கெட்டியானவுடன், அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்ற நெய்யில் வறுத்து சேத்து, ஏலக்காய் தூளையும் தூவி கிளறி இறக்கி வைக்கவும்.

பீட்ரூட் இனிப்பு பச்சடி குறிப்பிற்கு  இங்கே சொடுக்கவும் 

வேர்க்கடலை தயிர் பச்சடி


தேவையானப்பொருட்கள்:

தயிர் - 1 கப்
வேர்க்கடலை (பொடித்தது) - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூண்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1 டீஸ்பூன்

செய்முறை:

அரை கப் வறுத்த வேர்க்கடலையை எடுத்து, தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு சிறு வாணலியில், மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.  ஆறியபின் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.  கடைசியில் தேங்காய்த்துருவலையும் அத்துடன் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் அதில் வேர்க்கடலைப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

சிறு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பச்சடியில் கொட்டிக் கிளறி விடவும்.

கலந்த சாதம் மற்றும் கார அடையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

வெண்டைக்காய் தயிர் பச்சடி


தேவையானப்பொருட்கள்:

வெண்டைக்காய் - 8 முதல் 10 வரை
தயிர் - 2 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வெண்டைக்காயைக் கழுவி, துடைத்து விட்டு, சிறு வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தோசைக்கல் அல்லது பரவலான தாவாவை அடுப்பிலேற்றி, 1 அல்லது 2 டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் வெண்டைக்காய் துண்டுகளை பரப்பி வைத்து வேக விடவும்.  அடிபக்கம் சிவக்க வதங்கியதும், ஒவ்வொரு துண்டையும் திருப்பிப் போட்டு மறு பக்கமும் சிவக்கும் வரை வதக்கி எடுக்கவும்.  (இதை மைக்ரோவேவ் அவனிலும் வறுத்து எடுக்கலாம்.  சிலர் எண்ணையில் வெண்டைக்காயை பொரித்தும் எடுப்பார்கள்).

அரைக்க கொடுத்துள்ளப் பொருட்களை விழுதாக அரைத்தெடுக்கவும். தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயைச் சேர்த்து, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி, மீண்டும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

கவனிக்க:  தயிரை தாளித்து தயார் செய்து வைத்து விட்டு, பரிமாறும் முன் வெண்டைக்காயைச் சேர்த்தால், கொழகொழப்பில்லாமல் நன்றாக இருக்கும்.

பீட்ரூட் இனிப்பு பச்சடி


திருமண விருந்துகளில் "இனிப்பு பச்சடி" கண்டிப்பாக இடம் பெறும்.  இது "தக்காளி", "பீட்ரூட்" அல்லது பழத்துண்டுகளை வைத்து செய்யப்படும்.  பீட்ரூட் இனிப்பு பச்சடிக்கான குறிப்பு:

தேவையானப்பொருட்கள்:

பீட்ரூட் - 1
சர்க்கரை - 4 அல்லது 5 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பீட்ரூட்டை கழுவி, தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய்யை விட்டு அதில் முந்திரி பருப்பு, திராட்சை ஆகியவற்றை இலேசாக வறுத்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் பீட்ரூட் துருவலைப் போட்டு 5 முதல் 6 நிமிடங்கள் வரை வதக்கி எடுத்து ஆற விடவும்.  ஆறிய பின் விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை விட்டு அத்துடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை நீர் நன்றாகக் கொதிக்கும் பொழுது அதில் பீட்ரூட் விழுதைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அதில் சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.  ஒரு கொதி வர ஆரம்பித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

தக்காளி இனிப்பு பச்சடி குறிப்பிற்கு இங்கே சொடுக்கவும்.

இஞ்சி பச்சடி

தேவையானப்பொருட்கள்:

இஞ்சி - 2 அல்லது 3 பெரிய துண்டுகள்
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 
வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
எள் - 1/2 டீஸ்பூன்
 
தாளிக்க:

நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெல்லம் - ஒரு சிறு துண்டு
 
செய்முறை:

இஞ்சியை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துருவிய இஞ்சி 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு இருக்க வேண்டும்.

புளியை ஊறவைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்துக் கரைத்து இரண்டு அல்லது இரண்டரை கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு, காய்ந்ததும் அதில் இஞ்சித்துருவலைப் போட்டு வதக்கவும்.  இஞ்சி சிவக்க வதங்கியதும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
 
அதே வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், எள் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி அதில் புளித்தண்ணீரை ஊற்றவும்.  அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.  புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைத் தணித்து விட்டு, அரைத்து வைத்துள்ளப் பொடியைத் தூவவும்.  (சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றினால்  பொடி கெட்டியாவதை தடுக்கலாம்). மீண்டும் ஓரிரு வினாடிகள் கொதித்ததும், அதில் வதக்கி வைத்துள்ள இஞ்சித்துருவல், வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இன்னும் சில வினாடிகள் அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். பிரட்டுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

பச்சை மிளகாய் பச்சடி


தேவையானப்பொருட்கள்:

பச்சை மிளகாய் - 6 முதல் 8 வரை
புளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்து பொடிக்க:

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு

தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில், துவரம் பருப்பு, தனியா, அரிசி, பெருங்காயம் ஆகியவற்றை, ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியதும் கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

புளியை ஊறவைத்து, கரைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து, 2 கப் அளவிற்கு எடுத்து வைக்கவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் இலேசாகக் கீறிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை நிறம் மாறி வெளிர் நிறம் வந்தவுடன் எடுத்து தனியாக வைக்கவும்.

அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் வெந்தயத்தைப் போட்டு வறுக்கவும். (கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்). அதில் புளித்தண்ணீரை விடவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். புளி நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து விட்டு, அத்துடன் வெல்லத்தூள், பொடித்து வைத்துள்ள் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வதக்கி வைத்துள்ள மிளகாயைப் போடவும். மேலும் ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

தயிர் சாதம் மற்றும் பருப்பு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

தக்காளி பச்சடி


தேவையானப் பொருட்கள்:

தக்காளி (நடுத்தர அளவு) - 2
தயிர் - 1 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ள தேங்காய், மிளகாய், கடுகு, சீரகம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். குழைய வேண்டாம், சற்று வெந்தாலே போதும். அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து ஆற விடவும்.

தயிருடன் சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாகக் கடைந்துக் கொள்ளவும். அதில் ஆற வைத்துள்ள தக்காளியைப் போட்டுக் கிளறி விடவும்.

தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருட்களை தாளித்து பச்சடியில் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி, குளிர்பதனப் பெட்டியில் குறைந்தது அரை மணி நேரமாவது வைத்திருந்து பரிமாறவும்.

கலந்த சாதம் மற்றும் சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.

காரட் கோசுமல்லி


"கோசுமல்லி" அல்லது "கோசும்பரி" என்று அழைக்கப்படும் இது தென்னிந்திய திருமணம், மற்றும் விசேஷ விருந்துகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஊறவைத்த பயத்தம் பருப்பையும், பச்சை காய்கறிகளையும், அப்படியே பச்சையாக கலந்து சாலட் போல் பரிமாறுவார்கள்.

செய்வது மிகவும் சுலபம். உடல் நலத்திற்கும் உகந்தது. இதை காரட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் செய்வார்கள். எல்லாக் காய்களையும் சேர்த்தோ அல்லது ஒரே காயை பயன்படுத்தியோ செய்யலாம். ஆனால் பெரும்பாலும் விருந்துகளில், காரட் கோசுமல்லிதான் இடம் பெறும்.

தேவையானப்பொருட்கள்:

காரட் (நடுத்தர அளவு) - 2
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மாங்காய் (துருவியது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பச்சை கொத்துமல்லி தழை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ப்யத்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்னீரில் ஊற வைக்கவும்.

காரட்டைக் கழுவி, தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மெல்லிய சிறு துண்டுகளாக் (தீக்குச்சி போல்) நறுக்கிக் கொள்ளவும்.

கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விடவும். (விதையை நீக்கி விட்டால், காரம் குறைந்த்து விடும். மிளகாயையும் கூட சாப்பிடலாம்).

ஒரு பாத்திரத்தில் காரட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, மாங்காய்த் துண்டுகள், உப்பு போட்டுக் கலக்கவும்.

தாளிக்கும் கரண்டி அல்லது ஒரு சிறு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணை விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, காரட் கலவையில் கொட்டவும்.

ஊற வைத்துள்ள பருப்பை, தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, காரட்டுடன் சேர்க்கவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

அன்னாசிபழப் பச்சடி


"கொஜ்ஜு" என்று கன்னடர்களால் அழைக்கப்படும் இது இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் நிறைந்த ஒரு பச்சடி. கத்திரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் ஆகியவற்றில் இதை செய்யலாம். ஆனாலும், அன்னாசிப்பழத்தில் செய்வதுதான் அதிகமாக காணப்படுகிறது. தெற்கு கர்னாடகப் பகுதி திருமணங்களில் கண்டிப்பாக இது இடம் பெறும்.

தேவையானப்பொருட்கள்:

அன்னாசிப்பழத்துண்டுகள் (சிறியதாக வெட்டியது) - 2 கப்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
வெல்லம் - ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்து, பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3 (நடுத்தர அளவு)
தனியா - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
எள் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி

தாளிக்க:

எண்ணை - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை விட்டு, வறுத்து, பொடிக்க கொடுத்துள்ள அனைத்தயும் சற்று சிவக்க வறுத்து, ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

புளியை ஊறவைத்து, 1/4 கப் புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அன்னாசிப்பழத்துண்டுகளைப் போட்டு, மஞ்சள் பொடி சேர்த்து, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். (குக்கரில் போட்டும் 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக வைக்கலாம்).

பழத்துண்டுகள் மிருதுவாக வெந்ததும், அதில் புளித்தண்ணீர், வெல்லம் (பொடித்துச் சேர்க்கவும்), உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் சிறிது நீரைச் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து வரும் பொழுது, வறுத்து, பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவிக் கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சடி தேவையானப் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.

பின்னர் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.

பாகற்காய் பச்சடி


தேவையானப் பொருட்கள்:

பாகற்காய் (நீள வகை) - 2
புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
தக்காளி - 2 (நடுத்தர அளவு)
வெல்லம் பொடி செய்தது - 1/2 கப்
மிளகாய்த்தூள் ‍- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ‍- 1/4 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு ‍- 1/2 டீஸ்பூன்
சீரகம் ‍- 1 டீஸ்பூன்
வெந்தயம் ‍- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கெட்டியாகக் கரைத்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியைத் துண்டுகளாக்கி, நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பாகற்காயை, விதையை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/2 கப் தண்ணீரை விட்டு வேக விடவும். வெந்தவுடன், அதில் புளித்தண்ணீர், தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கிளறி, மூடி வைத்து, கொதிக்க விடவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானவுடன், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, தாளித்து, அதில் கொதிக்கும் பாகற்காய் கலவையைக் கொட்டி கலக்கவும். வெல்லப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டு, சிறு தீயில் வைக்கவும். வெல்லம் கரைந்து, பச்சடி திக்கானவுடன், இறக்கி வைக்கவும்.

ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

காய்கறி தயிர் பச்சடி


தேவையானப்பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
காரட் - 1
கொத்துமல்லி இலை - சிறிது
பச்சைமிளகாய் - 2 (நடுத்தர அளவு)
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு
தயிர் - ஒரு பெரிய கிண்ணம்

செய்முறை:

வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித்துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும். கொத்துமல்லியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைந்த தயிரை ஒரு பாத்திரந்தில் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

சுவையான தயிர் பச்சடி தயார்.

காய்கறி சாலட்


கோடை நெருங்கி விட்டது. உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் மோர் ஆகியவற்றைச் சேர்த்துக் கொளவது நல்லது. எளிமையான காய்கறி சாலட் குறிப்பு இதோ:

தேவையானப்பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
காரட் - 1
புதினா இலை - சிறிது
கொத்துமல்லி இலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு

செய்முறை:

வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித்துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு (நீக்கியப் பகுதியை சாம்பார் அல்லது ரசத்தில் சேர்க்கலாம்) மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், புதினா, கொத்துமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய காய்கறி துண்டுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கிளறி விடவும். பின்னர் அதில் எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து மீண்டும் ஒரு முறைக் கிளறி, அதன் மேல் காய்கறித்துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும். (அலங்காரம் இல்லாமலும் இந்த சாலட் சாப்பிட சுவையாகவே இருக்கும்).

பார்ஸ்லி, லெட்டுஸ் கிடைத்தால், அதையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். குடமிளகாய் மற்றும் கோஸ் போன்றவற்றையும் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

நெல்லிக்காய் தயிர் பச்சடி


தேவையானப்பொருட்கள்:

நெல்லிக்காய் - 5 அல்லது 6
தயிர் - 1 பெரிய கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

நெல்லிக்காயை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளுடன், தேங்காய்த் துருவல். பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து அதில் அரைத்த விழுதையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பச்சடியில் கொட்டிக் கலக்கவும்.

ஆரஞ்சுத்தோல் பச்சடி


தேவையானப் பொருட்கள்:

ஆரஞ்சுத்தோல் பொடியாக நறுக்கியது - 1 கப்
புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
தக்காளி - 2 (நடுத்தர அளவு)
வெல்லம் பொடி செய்தது - 1/2 கப்
மிளகாய்த்தூள் ‍- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ‍- 1/4 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு ‍- 1/2 டீஸ்பூன்
சீரகம் ‍- 1 டீஸ்பூன்
வெந்தயம் ‍- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கெட்டியாகக் கரைத்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியைத் துண்டுகளாக்கி, நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஆரஞ்சுத்தோல் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/2 கப் தண்ணீரை விட்டு வேக விடவும். வெந்தவுடன், அதில் புளித்தண்ணீர், தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கிளறி, மூடி வைத்து, கொதிக்க விடவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானவுடன், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, தாளித்து, அதில் கொதிக்கும் ஆர‌ஞ்சுத்தோல் குழம்பைக் கொட்டி கலக்கவும். வெல்லப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டு, சிறு தீயில் வைக்கவும். வெல்லம் கரைந்து, பச்சடி திக்கானவுடன், இறக்கி வைக்கவும்.

ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

குறிப்பு: ஆரஞ்சு புதிதாக இருக்க வேண்டும். "கமலா ஆரஞ்சு" என்று அழைக்கப்படும் பழத்தை, உரித்தப்பின் இருக்கும் தோலில் இதை செய்ய வேண்டும். காரம், உப்பு, வெல்லம் ஆகியவற்றை அவரவர் தேவைக்கேற்றவாறு, கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம்.

மாங்காய் பச்சடி


தேவையானப் பொருட்கள்:

மாங்காய் -‍ 1 பெரியது
வெல்லம் பொடித்தது ‍- 1/2 கப்
சாம்பார் பொடி -‍ ‍ 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ‍- ஒரு சிட்டிகை
உப்பு ‍- ஒரு சிட்டிகை
எண்ணை ‍- 1 டீஸ்பூன்
கடுகு ‍- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை ‍- சிறிது

செய்முறை:

மாங்காயை தோல் சீவிவிட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக சீவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு, அத்துடன், சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்புப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக விடவும்.

காய் நன்றாக வெந்தவுடன், ஒரு கரண்டியால் மசித்துக் கொள்ளவும். வெல்லப் பொடியைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து, காயுடன் சேர்ந்தப்பின், கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

குறிப்பு:சாம்பார் பொடிக்குப் பதில், வெறும் மிளகாய்த்தூளையும் சேர்க்கலாம். வெறும் மிளகாய்த்தூள் சேர்ப்பதானால், அளவை சிறிது குறைத்துக் கொள்ளவும். மேலும், மாங்காயின் புளிப்புத் தன்மைக்கேற்ப, வெல்லத்தை, சிறிது கூட்டியோ, குறைத்தோ சேர்க்கவும்.

காராமணி பழப்பச்சடி


தேவையானப் பொருட்கள்:

காராமணி பயறு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 1 கப்
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
பப்பாளிப்பழம் நறுக்கியது - 1 கப்
மாதுளம் பழ முத்துக்கள் - 1 கப்
சப்போட்டா பழத்துண்டுகள் - 1/2 கப்
ஆப்பிள் பழத்துண்டுகள் - 1/2 கப்

செய்முறை:

காராமணிப் பயிறை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும். குழையவிடக்கூடாது. சுண்டலுக்கு வேக வைப்பதுபோல் வேகவைத்து, தண்ணீரை வடித்து விடவும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத்தூளைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், அதை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை அடுப்பிலேற்றி கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். பின்னர் அதில் வெந்த காராமணியைச் சேர்த்து கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து காராமணியும் வெல்லமும் ஒன்றாகச் சேரும் வரை கிளறி ஆற விடவும்.

ஒரு பெரிய கண்ணாடிக் கிண்ணத்தில் எல்லாப் பழங்களையும் போட்டு, தேனை ஊற்றி, அத்துடன் வெல்ல காராமணியையும் போட்டு நன்றாகக் கலந்து குளிர்பதன பெட்டியில் 1 மணி நேரம் வைத்திருந்து பரிமாறலாம்.

குறிப்பு:

பழக்கலவையில் தங்களுக்கு விருப்பமான அனைத்துப் பழங்களையும் அல்லது அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும் சேர்க்கலாம். விருந்து போன்ற சமையங்களில் பரிமாற ஏற்றது.

சுரைக்காய் தயிர் பச்சடி

தேவையானப் பொருட்கள்:

சுரைக்காய் ( தோல், விதை நீக்கி சிறியதாக நறுக்கியது) - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2 அல்லது 3
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கொத்துமல்லித் தழை - சிறிது

செய்முறை:

தேங்காய்த்துருவலையும், பச்சைமிளகாயையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும் கடுகு வெடித்தவுடன், நறுக்கிய காயைப்போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு சேர்த்து, சிறிது வதக்கி, ஒரு கை நீர்த்தெளித்து, சிறு தீயில் வேகவிடவும். காய் சிறிது வெந்தவுடன் (குழையத் தேவையில்லை), அடுப்பை அணைத்து விடவும். ஆறியவுடன், தயிரில் கொட்டிக் கிளறவும். சீரகத்தூள், கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...