• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
சட்னி/துவையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்னி/துவையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கத்திரிக்காய் துவையல்


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 4
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காய்ம் - ஒரு பட்டாணி அளவு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கத்திரிக்காயைக் கழுவி, துடைத்து விட்டு அதன் மேல் சிறிது எண்ணைத் தடவி, அடுப்பு தீயில் காட்டி நன்றாகத் தோல் சுருங்கி கறுப்பாகும் வரை சுட்டெடுக்கவும். கத்திரிக்காயை இடுக்கியில் பிடித்தும் சுடலாம். அல்லது வடைக்கம்பியில் கத்திரிக்காயைக் குத்தியும் சுடலாம். சுட்ட கத்திரிக்காயும், சுடாத கத்திரிக்காயும் மேலே உள்ள படத்தில்.

சுட்ட கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கி விட்டு, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் புளியைப் போட்டு வறுக்கவும். கடைசியில் மிளகாயைப் போட்டு வறுத்து எடுத்து ஆற விடவும்.

வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் சுட்டக் கத்திரிக்காயைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுக்கவும்.

கடுகு தாளித்து, அரைத்த துவையலில் கொட்டிக் கிளறி விடவும்.

இட்லி, தோசை, உப்புமா, உப்பு கொழுக்கட்டை ஆகியவற்றுடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

கதம்ப சட்னி


கதம்ப சட்னி, வெவ்வேறு பொருட்களை, அவரவர் விருப்பம் போல் சேர்த்து செய்வதாகும்,  அடிப்படை பொருட்களான, உப்பு, புளி, மிளகாயுடன் தக்காளி, வெங்காயம், தேங்காய், பருப்பு போன்றவற்றைச் சேர்த்து செய்யலாம்.    அந்த வகையில் இதுவும் ஒரு கதம்ப சட்னி.

தேவையானப்பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 கப்
பொட்டு கடலை - 2 டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 3 முதல் 4 வரை
பூண்டுபற்கள் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
புளி - ஒரு நெல்லிக்காயளவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

மேலே கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து, தாளித்து கொட்டவும்.

எள்ளு துவையல்


தேவையானப்பொருட்கள்:

கறுப்பு எள்ளு - 4 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
பூண்டுப்பற்கள் - 2
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் போட்டு, வறுக்கவும். எள் வெடிக்க ஆரம்பித்ததும், ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும் அதில் மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றைப் போட்டு ஓரிரு வினாடிகள் வறுக்கவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மேலும் ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து ஆற விடவும்.

பின்னர் எல்லாவற்றையும் மிகஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்தால் போதும். கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

எலுமிச்சம் சாதம் / தேங்காய் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

கொத்துமல்லி சட்னி - III


தேவையானப்பொருட்கள்:

பச்சை கொத்துமல்லி - 1 கட்டு
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புளி - ஒரு சிறிய நெல்லிக்காயளவு
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

கொத்துமல்லியை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பெருங்காய்ம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் புளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஓரிரு வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஈரப்பசை போகும் வரை வதக்கவும். கடைசியில் கொத்துமல்லியைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும்.

வறுத்த பருப்புகளையும், மற்ற அனைத்தையும் உப்பு மற்றும் சிறிது தண்ணீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

தக்காளி கொத்துமல்லி சட்னி


தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 2
கொத்துமல்லித்தழை (நறுக்கியது) - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன், அதில் பச்சை மிளகாயைக் கீறிப்போட்டு வதக்கவும். பின்னர் அதில் புளியைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். அதன் பிறகு தக்காளித்துண்டுகளைச் சேர்த்து, பெருங்காயப் பொடியையும் போட்டு மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும். கடைசியில் அத்துடன் கொத்துமல்லித் தழையையும் சேர்த்து ஒரு வினாடி வதக்கி, இறக்கி ஆற விடவும். பின்னர் அத்துடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுத்து, கடுகு தாளித்துக் கொட்டவும். (அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.)

பீர்க்கங்காய் துவையல்


தேவையானப்பொருட்கள்:

பீர்க்கங்காய் - 1
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பீர்க்கங்காயை கழுவி விட்டு, அதன் கூரான முனையை மட்டும் நீக்கி விட்டு, தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் இன்னும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் பீர்க்கங்காய் துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கி எடுத்து, 10 நிமிடங்கள் ஆற விடவும்.

மிக்ஸியில் வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம், புளி ஆகியவற்றைப் போட்டு, அத்துடன் உப்பையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பீர்க்கங்காயைப் போட்டு, மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி ஓரிரு வினாடிகள் ஓட விட்டு, வழித்தெடுக்கவும்.

பின்னர் அதில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

இட்லி/தோசை போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சூடான சாதத்தில் போட்டு, சிறிது நெய்யைச் சேர்த்து பிசைந்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.

தக்காளி கறிவேப்பிலைச் சட்னி


தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தக்காளியை 4 அல்லது 5 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயம், சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாயைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்தவுடன், இஞ்சியைச் சேர்த்து வதக்கவும். பின் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி கடைசியில் தக்காளித் துண்டுகளையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி எடுத்து ஆற விடவும். பின்னர் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

காரட் சட்னி


தேவையானப்பொருட்கள்:

காரட் - 2
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
புளி - ஒரு நெல்லிக்காயளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

காரட்டைக் கழுவி, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து வதக்கவும். கடைசியில் காரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, இறக்கி ஆற விடவும். ஆறிய பின் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

கொத்துமல்லி சட்னி


தேவையானப்பொருட்கள்:

பச்சை கொத்துமல்லித் தழை - ஒரு கட்டு
பச்சை மிளகாய் - 2
புளி - ஒரு பட்டாணி அளவு
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

கொத்துமல்லித் தழையை நன்றாகக் கழுவி விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கொத்துமல்லித்தண்டோடு சேர்த்து அரைக்கலாம்.

நல்ல வாசனையோடு இருக்கும். இட்லி, தோசை மட்டுமின்றி, தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.

குறிப்பு: புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாற்றை சேர்க்கலாம். பித்தம், வாய் கசப்பு போன்றவற்றை நீக்க வல்லது.

முள்ளங்கி சட்னி


தேவையானப்பொருட்கள்:

முள்ளங்கி - 2
பச்சை மிளகாய் - 3 முதல் 4 வரை
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
புளி - ஒரு நெல்லிக்காயளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

முள்ளங்கியின் தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பருப்பு வறுபட்டவுடன் அதில் பச்சை மிளகாயைக் கீறி போடவும், புளியையும் போட்டு சற்று வதக்கவும். பின்னர் அதில் முள்ளங்கித் துண்டுகளைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். கடைசியில் கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லித்தழையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும். சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

சீரணத்திற்கு உதவும் சட்னி இது.

குடமிளகாய் சட்னி


தேவையானப்பொருட்கள்:

குடமிளகாய் - 2 (சிவப்பு நிற மிளகாய் உகந்தது)
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பற்கள் - 4
புளி - ஒரு நெல்லிக்காயளவு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

குடமிளகாயை, விதை நீக்கி விட்டு நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பருப்பு சிவநதவுடன் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் அதில் குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக புளியையும் சேர்த்து வதக்கி, இறக்கி ஆற விடவும்.

பின்னர் அதில் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுத்து, கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

கவனிக்க: சிவப்பு நிற குடமிளகாய் உபயோகித்தால் சட்னி நல்ல நிறமாக இருக்கும். பச்சை நிற மிளகாயிலும் செய்யலாம். சுவையில் மாற்றமிருக்காது. ஆனால் சட்னியின் நிறம் சற்று மங்கலாக இருக்கும்.

கத்திரிக்காய் சட்னி


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 4 (நடுத்தர அளவு)
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
புளி - நெல்லிக்காயளவு
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கத்திரிக்காயைக் கழுவி துடைத்து, அதன் மேல் சிறிது எண்ணைத் தடவி, இடுக்கியால் பிடித்துக் கொண்டு அடுப்பு தீயின் மேல் காட்டி சுட்டெடுக்கவும். (சுடுவதற்குப் பதில் வேக வைத்தும் எடுக்கலாம். ஆனால் கத்திரிக்காயைச் சுட்டு சட்னி செய்தால், சுவை நன்றாக இருக்கும். வேக வைப்பதானால், கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வேக வைத்தெடுக்கவும்). வெந்த கத்திரிக்காயின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து விடவும்.

அல்லது மிக்ஸியில் தேங்காயுடன் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

புளியை தண்ணீரில் ஊறவைத்து, 1 டீஸ்பூன் திக்கான புளிச்சாறு எடுக்கவும். அல்லது தேங்காய் அரைக்கும் பொழுது புளியையும் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் விழுது, தேங்காய், புளி ஆகியவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். தேவையான தண்ணீரைச் சேர்த்து தளர விடவும். மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

இட்லி, தோசையுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.

பசலைக்கீரை சட்னி


தேவையானப்பொருட்கள்:

பசலைக்கீரை - 10 முதல் 15 இலைகள்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
பூண்டுப்பற்கள் - 4 அல்லது 5
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் பசலைக்கீரையைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி ஆறவிடவும். அத்துடன் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.

தக்காளி கொஸ்து


தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 4 (நன்றாகப் பழுத்தது)
கடலை மாவு - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தக்காளியை அப்படியே முழுதாகப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தை மூடி பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

பின்னர் தக்காளியை வெளியே எடுத்து, அதன் தோலை உரித்தெடுக்கவும். உரித்தத் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசிக்கவும். மசித்த விழுதை சூப் வடிகட்டி அல்லது சற்று பெரிய துளையுள்ள ஒரு வடிகட்டியில் போட்டு, இலேசாக தேய்த்தால், தக்காளி விதை நீங்கி, கெட்டியான தக்காளிச் சாறு கிடைக்கும்.

மசிப்பதற்கு பதில், உரித்த தக்காளியை மிக்ஸியில் போட்டு ஓரிரண்டு சுற்று சுற்றி, வடித்தெடுக்கலாம். மிக்ஸியில் அரைப்பதானால், தக்காளி நன்றாக ஆறியபின் போட்டு அரைக்கவும். இல்லையெனில் மூடி திறந்து, வெளியே சிதறி விடும். கவனம் தேவை.

தக்காளி சாற்றில், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் தக்காளிச்சாற்றை ஊற்றிக் கலக்கி கொதிக்க விடவும். கொஸ்து கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கடலைமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். நன்றாகக் கலக்கி விட்டு, மிதமான தீயில் வைத்து கொஸ்து சற்று கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து சிறிது கொத்துமல்லித் தழையைத் தூவி பரிமாறலாம்.

இட்லி / தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: கடைகளில் கிடைக்கும் தக்காளிச்சாற்றை (Tomato Puree)உபயோகித்தும் இதை செய்யலாம். தக்காளிச்சாற்றில் தேவையான தண்ணீரைச் சேர்த்து, மேற்கூறியபடி இந்த கொஸதை தயாரிக்கலாம். சீக்கிரத்தில் வேலை முடிந்து விடும்.

பருப்பு துவையல்


தேவையானப்பொருட்கள்;

துவரம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
பூண்டுப்பற்கள் - 2
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் (எண்ணை போடாமல்) பருப்பைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

பருப்பு சற்று ஆறியதும், அத்துடன் மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீரையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

ரசம் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள நன்றாயிருக்கும். சூடான சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு: துவையல் அரைக்கும் பொழுது ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைத்தால் சுவை மேலும் கூடும்.

கறிவேப்பிலைத் துவையல்


தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - ஒரு சிறிய நெல்லிக்காயளவு
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, பெருங்காயம், பருப்புகள், மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். கடைசியில், அடுப்பை தணித்துக் கொண்டு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் புளியையும், தேங்காய்த்துருவலையும் சேர்த்து வதக்கி, சற்று ஆறியவுடன் அத்துடன் வறுத்த பருப்பு, மிளகாய், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

இதில் மேலும் சற்று நீரைச் சேர்த்து, தளர சட்னியாகவும் செய்யலாம். இட்லி, தோசை போன்றவற்றுடன் பரிமாற நன்றாயிருக்கும்.

கவனிக்க: தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும். தேங்காயைத் தவிர்த்தும் இந்த துவையலைச் செய்யலாம். தேங்காய் உபயோகிக்காவிட்டால், பருப்பு வகைகளைச் சற்று கூடுதலாக போடவும்.

தேங்காய், பருப்பு எதுவுமில்லாமல், வெறும் உப்பு, புளி, மிளகாயுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்தும் செய்யலாம். இந்த வகை சற்று கசப்பு தன்மை உடையதாக இருக்கும். ஆனால் உடலுக்கு மிகவும் நல்லது.

கடப்பா


தஞ்சை, மற்றும் கும்பகோணம் பகுதியில் பிரசித்தமான கடப்பா (பெயர் காரணம் தெரியவில்லை)அப்பகுதியிலுள்ள பெரும்பாலான ஓட்டல்களில் கிடைக்கும். திருமண விருந்துகளின் போதும் பரிமாறப்படும். இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டுப்பற்கள் - 4
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
சோம்பு - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை இலை - 2
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, பொட்டுகடலை, தேங்காய் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் ஏலக்காய், பட்டை இலையைப் போடவும். பட்டை இலை சற்று வறுபட்டதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வரை கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும். அத்துடன் உருளைக்கிழங்கு மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீரைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, சற்று சேர்ந்தால் போல் வந்ததும் இறக்கி விடவும்.

குறிப்பு:

பொட்டுக்கடலைக்குப்பதில், சிறிது கடலைமாவை உபயோகித்தும் இதைச் செய்யலாம்.

சிலர் இதில் வேகவைத்த பயத்தம் பருப்பையும் சேர்ப்பார்கள்.

வெங்காய சட்னி


தேவையானப்பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காயளவு
காய்ந்த மிளகாய் 5 அல்லது மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு:

நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வெங்காயத்தை தோலுரித்து விட்டு, உப்பு, புளி, மிளகாய் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும். அதில் கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.

குறிப்பு: சாம்பார் வெங்காயம் இல்லையென்றால், பெரிய வெங்காயத்தை நறுக்கி உபயோகிக்கலாம்.

கேரட் தக்காளி சட்னி


தேவையானப்பொருட்கள்:

கேரட் - 2
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

கேரட்டை தோல் சீவி நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் நடுத்தர அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பின் அதில் மிளகாயைப் போட்டு சற்று வறுத்து அத்துடன் இஞ்சி, தக்காளித்துண்டுகள் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும். பின்னர் அத்துடன் கேரட் துண்டுகளையும் சேர்த்து மீண்டும் சில வினாடிகள் வதக்கி, கீழே இறக்கி வைத்து தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும். சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

பின்னர் அதில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

புதினா சட்னி


தேவையானப்பொருட்கள்:

தேங்காய்த்துருவல் - 1/4 கப்
புதினா - 1 கப்
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
பெருங்காயம் - ஒரு பட்டாணியளவு (கெட்டிப் பெருங்காயம் இல்லையென்றால் பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்)
உப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், பருப்பு ஆகியவற்றை போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாயின் நிறம் சற்று மாறியவுடன், புதினாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வத்க்கவும். பின்னர் அதில் புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக மீண்டும் ஓரிரு வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும்.

சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...