• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தக்காளி கொஸ்து


தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 4 (நன்றாகப் பழுத்தது)
கடலை மாவு - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தக்காளியை அப்படியே முழுதாகப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தை மூடி பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

பின்னர் தக்காளியை வெளியே எடுத்து, அதன் தோலை உரித்தெடுக்கவும். உரித்தத் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசிக்கவும். மசித்த விழுதை சூப் வடிகட்டி அல்லது சற்று பெரிய துளையுள்ள ஒரு வடிகட்டியில் போட்டு, இலேசாக தேய்த்தால், தக்காளி விதை நீங்கி, கெட்டியான தக்காளிச் சாறு கிடைக்கும்.

மசிப்பதற்கு பதில், உரித்த தக்காளியை மிக்ஸியில் போட்டு ஓரிரண்டு சுற்று சுற்றி, வடித்தெடுக்கலாம். மிக்ஸியில் அரைப்பதானால், தக்காளி நன்றாக ஆறியபின் போட்டு அரைக்கவும். இல்லையெனில் மூடி திறந்து, வெளியே சிதறி விடும். கவனம் தேவை.

தக்காளி சாற்றில், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் தக்காளிச்சாற்றை ஊற்றிக் கலக்கி கொதிக்க விடவும். கொஸ்து கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கடலைமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். நன்றாகக் கலக்கி விட்டு, மிதமான தீயில் வைத்து கொஸ்து சற்று கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து சிறிது கொத்துமல்லித் தழையைத் தூவி பரிமாறலாம்.

இட்லி / தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: கடைகளில் கிடைக்கும் தக்காளிச்சாற்றை (Tomato Puree)உபயோகித்தும் இதை செய்யலாம். தக்காளிச்சாற்றில் தேவையான தண்ணீரைச் சேர்த்து, மேற்கூறியபடி இந்த கொஸதை தயாரிக்கலாம். சீக்கிரத்தில் வேலை முடிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...