• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
பொடி வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொடி வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேர்க்கடலை பொடி


தேவையானப்பொருட்கள்:

வேர்க்கடலை - 1 கப்
வெள்ளை எள் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 6 முதல் 7 வரை
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வெறும் வாணலியில், வேர்க்கடலையைப் போட்டு, தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தெடுக்கவும்.  பின்னர் எள்ளைப் போட்டு பொரியும் வரை வறுத்தெடுக்கவும்.  கடைசியில் பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றைப் போட்டு ஓரிரு வினாடிகள் வறுத்தெடுத்து ஆற விடவும்.

பின்னர் வறுத்த அனைத்தையும், மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.


இந்தப் பொடியை, சூடான சாதத்தில் போட்டுக் கலந்து, வேர்க்கடலை சாதமாக சாப்பிடலாம்.  இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

கறிவேப்பிலை பொடி

தேவையானப்பொருட்கள்: 

கறிவேப்பிலை - 1 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு நெல்லிக்காயளவு
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு பற்கள் (சிறிய அளவு)- 2
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 அல்லது 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, தனியா, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.  கடைசியில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுக்கவும்.  சற்று ஆறியவுடன் எல்லவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, உப்பையும் சேர்த்து சற்று கொரகொரப்பாகப் பொடித்து எடுக்கவும்.
இதை சூடான சாதத்தில் போட்டு, சிறிது நெய் அல்லது நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். காய்கறி பொரியல் செய்யும் பொழுது கடைசியில் சிறிது பொடியைத்தூவினால் நல்ல வாசனையாக இருக்கும்.

கறிவேப்பிலை எள்ளுப் பொடி


தேவையானப்பொருட்கள்:

வெள்ளை எள் - 1 கப்
கறிவேப்பிலை - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும்.  அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.  கடைசியில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து ஆற விடவும்.  பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, அத்துடன் உப்பையும் சேர்த்து பொடித்தெடுக்கவும்.

இதை இட்லி/தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.  சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.  காய்கறி பொரியல் செய்யும் பொழுது, கடைசியில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைத் தூவி  எடுத்தால் சுவையாக இருக்கும்.

எள்ளு பொடி


தேவையானப்பொருட்கள்:

வெள்ளை எள் - 1/2 கப்
கறுப்பு எள் - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
காய்ந்த மிளகாய் - 10 முதல் 12 வரை
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெறும் வாணலியில் வெள்ளை மற்றும் கறுப்பு எள்ளைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.

அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

வறுத்தெடுத்த எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

சுவையான எள்ளு பொடி தயார்.

இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து "எள்ளு சாதம்" செய்யலாம். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

பூண்டு கறிவேப்பிலை பொடி


தேவையானப்பொருட்கள்:

பூண்டு பற்கள் - 25 முதல் 30 வரை (சிறியது)
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8 வரை
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கையளவு
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
எண்ணை - 1 அல்லது 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, தனியா, மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, தேங்காய் ஆகியவற்றை, ஒவ்வொன்றாகப் போட்டு வாசனை வரும் வரை தனித்தனியாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். சற்று ஆறியவுடன், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

இட்லி, தோசையுடன் பரிமாறலாம். சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வத்த குழம்பு பொடி


தேவையானப்பொருட்கள்:

காய்ந்த மிளகாய் - 6
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 முதல் 2 டீஸ்பூன் வரை

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து, ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு, நன்றாக பொடித்து எடுக்கவும்.

மேற்கூறிய அளவிற்கு, 5 அல்லது 6 பேருக்கு தேவையான குழம்பு தயாரிக்கலாம்.

எலுமிச்சம் அளவு புளியை ஊற வைத்துக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் இந்தப் பொடியைச் சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை, நல்லெண்ணையில் தாளித்துக் கொட்டினால், சுவையான வத்தக் குழம்பு தயார்.

அதிகமாக பொடித்து வைத்துக் கொண்டால், தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம்.

கொள்ளுப்பொடி


உடம்பிலுள்ள கொழுப்பைக் குறைத்து, உடலை இளைக்க வைக்கும் தன்மை கொள்ளிற்கு உண்டு.

அதனால்தான் "இளைத்தவனுக்கு எள்ளு. கொழுத்தவனுக்கு கொள்ளு" என்னும் சொற்றொடர் வழக்கிலுள்ளது.

வாரம் ஒரு முறையாவது கொள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால், ஊளைச்சதை நிச்சயம் குறையும்.

கொள்ளில், ரசம், சூப், குழம்பு, துவையல், சுண்டல் அனைத்தும் செய்யலாம். கொள்ளுப்பொடியைத் தயாரித்து வைத்துக் கொண்டால், சமையலில் சேர்க்க எளிதாக இருக்கும். கடைகளில் இந்தப்பொடி கிடைக்கிறது. வீட்டிலும் இதைத் தயாரிக்கலாம்.

தேவையானப்பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில், உப்பைத்தவிர, மேற்கண்ட பொருட்களை, தனித்தனியாக வறுத்தெடுத்து ஆற விடவும்.

ஆறியபின், உப்பு சேர்த்து நன்றாகப் பொடித்தெடுக்கவும்.

இந்தப்பொடியை, சூடான சாதத்தில் போட்டு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணையுடன் சாப்பிட சுவையாயிருக்கும். நெய், எண்ணை தவிர்த்தும் சாப்பிடலாம்.

ரசம் செய்யும் பொழுது, இந்தப்பொடியைச் சேர்த்து கொள்ளு ரசமாக செய்யலாம்.

துவையல், சூப் செய்யும் பொழுதும் உபயோகிக்கலாம்.

பூண்டு மிளகாய் பொடி


தேவையானப்பொருட்கள்:

பூண்டுப்பற்கள் - 10 முதல் 15 வரை
காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு பருப்பு மற்றும் மிளகாயை, தனித்தனியாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு பூண்டுப்பறகளை (தோலுரித்து விட்டு) போட்டு சற்று வதக்கி எடுக்கவும். வறுத்த பருப்பு,மிளகாய் சற்று ஆறியதும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மிக்ஸியிலிருந்து எடுக்குமுன் பூண்டைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அல்லது பருப்பு, மிளகாயை மட்டும் பொடி செய்து கொண்டு அதில் பூண்டை இடித்துப் போட்டுக் கிளறவும்.

இந்தப்பொடியுடன் சிறிது நல்லெண்ணைச் சேர்த்து, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

குறிப்பு: இந்த மிளகாய் பொடியை பருப்பு இல்லாமலும் செய்யலாம். வெறும் மிளகாயை வறுத்து, உப்பு சேர்த்து பொடித்து அத்துடன் பூணடை இடித்துப் போட்டால், சுவை கூடுதலாக இருக்கும். ஆனால் காரம் அதிகமாக இருக்கும்.

பொரியல் பொடி


இந்தப் பொடியை செய்து வைத்துக் கொண்டால், சுவையான பொரியலை சுலபமாக செய்யலாம்.

தேவையானப்பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/2 கப்
உளுத்தம்பருப்பு - 1/2 கப்
காய்ந்தமிளகாய் - 10 முதல் 15 வரை
தனியா - 1/4 கப்
பெருங்காயம் - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 அல்லது 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, மேற்கூறிய பொருட்களை(உப்பைத்தவிர), ஒவ்வொன்றாக தனித்தனியாக சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியபின் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்யவும்.

காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

விருப்பமான காயை பொடியாக நறுக்கி சற்று வேக வைத்து தாளித்து, இறக்கி வைக்குமுன், ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் இந்தப் பொடியைத் தூவிக் கிளறினால், சுவையானப் பொரியல் சுலபத்தில் தயார். காயை மைக்ரோ அவனில் வேக வைத்தால் சமையலும் சீக்கிரம் முடிந்து விடும். சத்தும் குறையாது.

சாம்பார் பொடி



தேவையானப்பொருட்கள்:

காய்ந்த மிளகாய் - 1 கப்
தனியா (மல்லி) - 3/4 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சுண்டைக்காயளவு (கட்டி பெருங்காயம் இல்லையென்றால், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்)
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 ஈர்க்கு (விருப்பமானால்)
எண்ணை - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஓரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு, மேற்கண்ட பொருட்கள் (மஞ்சள்தூள் தவிர) ஒவ்வொன்றையும், தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கட்டிப் பெருங்காயம் உபயோகித்தால், அதையும் வறுத்துக் கொள்ளவும். தூள் பெருங்காயம் என்றால் வறுக்கத் தேவையில்லை.

கடைசியில், வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக, அதே வாணலியில் கொட்டி, அத்துடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

சற்று ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து, டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: மேற்கண்ட விதத்தில் செய்யும் பொடி 10 முதல் 15 நாட்களுக்கு வாசனை போகாமல் நன்றாக இருக்கும். சாம்பார் மற்றும் பொரிச்ச குழம்பு, கூட்டு செய்வதற்கு உபயோகிக்கலாம்.

எண்ணையில் வறுத்து அரைக்கும் பொடி, சற்று கொரகொரப்பாக இருக்கும். வத்த குழம்பு, காரக்குழம்பு செய்வதற்கு, பொடி நைசாக இருக்க வேண்டும். அதற்கு, எண்ணையில்லாமல், வெறும் வாணலியில் பொருட்களை வறுத்து, நைசாக அரைத்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...