• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
ரசம்/சாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசம்/சாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மைசூர் ரசம்


தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்
தக்காளி - 1 அல்லது 2
புளி - எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கொத்துமல்லி இலை - சிறிது


வறுத்தரைக்க:


தனியா - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 2  டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை

தாளிக்க:

நெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவி, தேவையான தண்ணீரும், சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து குழைய வேக வைத்து, நன்றாக மசித்து விட்டு அதில் மேலும் சிறிது வென்னீரைச் சேர்த்து, நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து, கரைத்து 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும், தனித்தனியாக, ஒரு டீஸ்பூன் எண்ணையில் சிவக்க வறுத்தெடுத்து, ஆறவிட்டு, சிறிது தண்ணீரைச் சேர்த்து, சற்று கொரகொரப்ப்பாக அரைத்தெடுக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் புளித்தண்ணீர், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தக்காளி நன்றாக வெந்து, புளியின் பச்சை வாசனையும் போனவுடன், அரைத்து வைத்துள்ள விழுதினை சிறிது நீருடன் கலந்து ஊற்றவும். உப்பு சரி பார்த்து, கொத்து மல்லி இலையைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

பின்னர் அத்துடன் பருப்புத் தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து, அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை, நெய்யில் தாளித்துக் கொட்டவும்.

புளிச்சாறு


தேவையானப்பொருட்கள்:

புளி - எலுமிச்சம் பழ அளவு
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து சாற்றைப் பிழிந்தெடுக்கவும். தேவையான நீரைச் சேர்த்து, 3 கப் புளித்தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், தீயைத் தணித்துக் கொண்டு வெந்தயத்தைச் சேர்த்து சற்று சிவக்க வறுக்கவும். காய்நத மிளகாயை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியதும் புளித்தண்ணீரை விடவும். அத்துடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து மிதமான தீயில் மேலும் 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள அப்பளம் பொருத்தமாயிருக்கும். பார்ப்பதற்கு ரசம் போலும், சுவையில் புளிக்காய்ச்சல் போலவும் இருக்கும்.

காய்கறிகள் கையிருப்பில் இல்லாத பொழுது, அவசரத்திற்கு இந்தச் சாறு கை கொடுக்கும்.

அகத்திக்கீரை சாறு


தேவையானப்பொருட்கள்:

அகத்திக்கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சற்று வதக்கவும். அத்துடன் கீரையை அலசிப் போட்டு, சீரகம், உப்பு சேர்க்கவும். அதில் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும்.

தேங்காயை நன்றாக அரைத்து வெந்தக் கீரையில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்ற வல்லது. இந்தச் சாற்றை வடிகட்டி சூப் போலவும் குடிக்கலாம்.

கவனிக்க: இந்தச் சாற்றை வெறும் தண்ணீருக்குப் பதில், அரிசி கழுவிய நீரில் செயதால் இன்னும் சுவையாக இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...