• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
பண்டிகைக் குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்டிகைக் குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ் வருடப் பிறப்பு - 13 ஏப்ரல் 2012


மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்,  இந்த வருடம் சித்திரை முதல் நாளை தமிழ் வருடப் பிறப்பாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

இந்த ஆண்டின் பெயர் "நந்தன".

தமிழ் புத்தாண்டு அன்று, மிக முக்கியமாக சமையலில் எல்லா விதமான சுவைகளும் சேர்க்கப்படும். நம் வாழ்க்கையும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்று அனைத்தும் கலந்த கலவைதான் என்பதை நமக்கு உணர்த்துவதுடன், அதை ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

வெல்லம் (இனிப்பு), மாங்காய் (புளிப்பு), வேப்பம்பூ (கச‌ப்பு), மிளகாய் (காரம்) சேர்த்து பச்சடி செய்வது வழக்கம்.

சில‌ர், மாங்காய் ப‌ச்ச‌டியும், வேப்ப‌ம்பூ ர‌ச‌மும் செய்வார்க‌ள். அத்துடன், வடை, பாயசம், இனிப்பு போளி மற்றும் மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை மூன்றும் கலந்த சாம்பார் ஆகியவை புத்தாண்டு சமையலில் இடம் பெறும்.

சுவையாகச் சமைத்துப் படைத்து, பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

பழப் பாயசம்                                      இனிப்பு போளி     



 



கார்த்திகை தீபம்


இந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது. மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருநாள், தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகைத் தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம், ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி நீளமும் உள்ள ஒரு இரும்பு கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி அதைத் திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து ஏற்றப்படும். இந்த மகாதீபம் மலையைச்சுற்றி 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும்.

இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலோனோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். நகர்புறங்களில் இட நெருக்கடி இருந்தாலும், பால்கனி, மொட்டைமாடி சுவர், மாடிப்படிகட்டுகள், சன்னல் விளிம்புகள் என்று எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் விளக்கேற்றி வைப்பார்கள். பாரம்பரியமாக களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அகல் விளக்குகள்தான் ஏற்றி வைக்கப்படும். ஆனால் இப்பொழுது வேறுவகை விளக்குகளும், அலங்கார மெழுகுவத்திகளும் ஏற்றப்படுகின்றன.

இத்திருவிழாவின் இன்னொரு சிறப்பம்சம் "சொக்கப்பனை கொளுத்துதல்". கோவிலுக்கு அருகே, திறந்த வெளியில், ஒரு காய்ந்த மரத்துண்டை (அனேகமாக பப்பாளி மரத்தண்டு) நிறுத்தி அதனைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகளைக் கட்டி வைப்பார்கள். இதற்கு சொக்கப்பனை என்று பெயர். சாயங்காலப் பூஜை முடிந்து விளக்கேற்றிய பின்னர், கோவில் அர்ச்சகர் வெளியே வந்து, சொக்கப்பனைக்கு தீபாராதனைக் காட்டி அதைக் கொளுத்தி விடுவார். பனை மட்டையில் தீ பிடித்ததும் படபடவென்று ஒசையுடன் வெடித்துக் கொண்டே கொழுந்து விட்டு எரியும். இதற்கு புராணங்களில் வெவ்வேறு கதைகள் கூறப்பட்டிருந்தாலும், ஒருவேளை இதுதான் அந்நாளைய பட்டாசோ??

இதனால் தானோ இன்னமும் இத்திருநாளன்று சிறுவர்கள் பட்டாசு (பெரும்பாலும் தீபாவளிக்கு வாங்கியதில் மிச்சம் பிடித்தது) வெடித்து மகிழ்கிறார்கள்.

ஏற்றப்பட்ட விளக்குகள் அனைத்தும் தீயனவைகளைத் தடுத்து நல்லனவைகளைத் தரும் என்பது நம்பிக்கை. அகல் விளக்கோ அல்லது அழகிய சிறு மெழுகுவத்தியோ, இருண்ட மாலை வேளையில் வரிசை வரிசையாய் ஒளிரும் இத்தீபங்களைக் காண்பதே கொள்ளை அழகு.

இத்திருநாளில் ஏற்றப்படும் ஒவ்வொரு தீபமும் நம் வீட்டிற்கு மட்டுமின்றி அனைவர் வாழ்விலும் ஒளி பரவ செய்யட்டும்.
பண்டிகை என்றால் பலகாரமில்லாமலா! இதோ கார்த்திகை சிறப்பு சமையற்குறிப்புகள்:

கார்த்திகை பொரி
கார்த்திகை அப்பம்
பனை ஓலை கொழுக்கட்டை
மிளகு அடை

நவராத்திரி


நவராத்திரி செப்டம்பர் மாதம் 30ம் தேதி தொடங்குகிறது.

அக்டோபர் 8ம் தேதி சரஸ்வதி பூஜையும் (ஆயுதபூஜை என்றும் அழைப்பார்கள்), 9ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப் படுகிறது.

இந்த பத்து நாட்களும், கொலு வைத்து, அக்கம் பக்கத்தார் அனைவரையும் அழைத்து உபசரித்து, வெற்றிலைப் பாக்கு, பரிசுப் பொருட்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம்.

நவராத்திரி என்றாலே, நம் நினைவுக்கு முதலில் வருவது சுண்டல்தான்.

தினம் ஒரு சுண்டல் செய்து, அனைவருக்கும் அளித்து மகிழுங்கள்.

கொண்டைக்கடலை, பட்டாணி, காராமணி, வேர்க்கடலை, பச்சை பயிறு, மொச்சைக் கொட்டை, கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, சோளம், மற்றும் அவரவர்கள் விருப்பம் போல் எந்தவகை தானியம் அல்லது பருப்பை உபயோகித்து, சுண்டலைத் தயாரிக்கலாம். செய்முறை எல்லாவற்றிற்கும் ஒன்றுதான். முழு தானியம் என்றால் 8 மணி நேரமும், பருப்பு வகை என்றால் 2 அல்லது 3 மணி நேரமும் ஊற வைத்து தாளிக்க வேண்டும்.

சுண்டல் குறிப்பு: தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

வினாயகச்சதுர்த்தி - செப்டம்பர் 3ம் நாள்


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா.

வினாயகச்சதுர்த்தி, இந்த ஆண்டு செப்டம்பர் 3ம் நாள் வருகிறது.

சிறப்பு உணவில்லாமல் பண்டிகையா? அதுவும் கொழுக்கட்டை, சுண்டல் இல்லாமல் வினாயகச் சதுர்த்தியா??

இதோ கொழுக்கட்டை, சுண்டல் சமையற்குறிப்புகள். விருந்து சமைத்து, படைத்து, இறைவனை வழிபட்டு, அனைவரோடும் சேர்ந்து உண்டு மகிழுங்கள். பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

பூரண கொழுக்கட்டை / மோதகம்


தேவையானப்பொருட்கள்:

அரிசிமாவு - 2 கப்
வெல்லம் பொடி செய்தது - 2 கப்
தேங்காய்த்துருவல் - 2 கப்
ஏலக்காய் - 4 பொடி செய்தது
எண்ணை - 2 முதல் 3 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பூரணம்:

ஒரு பாத்திரத்தில், வெல்லத்தைப்போட்டு, அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தவுடன், வேறொரு பாத்திரத்தில் அதை வடிகட்டி எடுத்து, மீண்டும் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன், அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, கெட்டியாகும் வரை, கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் அதில், ஏலப்பொடியைத்தூவிக் கிளறி, இறக்கி வைக்கவும்.

மேல் மாவு:

ஒரு வாணலியில் அரிசி மாவைப்போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

4 கப் தண்ணீரில், உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு கொதிக்க விடவும்.

கொதித்த நீரை, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டி காம்பால் கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை பொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாக (சப்பாத்தி மாவு போல்) பிசைந்துக் கொள்ளவும்.

விரல்களில் எண்ணைத் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அழுத்தி மாவை விரிவடையச் செய்து, ஒரு சிறு கிண்ணம் போல் ஆக்கிக் கொள்ளவும். அதனுள், ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச் சேர்த்து, நடுவில் கொண்டு வந்து அழுத்தி விடவும். இது மோதகம் எனப்படும். கொழுக்கட்டை என்றால், பூரணத்தை நடுவில் வைத்து, இரண்டாக மடித்து ஓரங்களை அழுத்தி விடவும். எல்லா மாவையும், மோதகமாகவோ, கொழுக்கட்டையாகவோ செய்து, இட்லி தட்டில் சிறிது எண்ணையைத் தடவி, அதில் வைத்து 5முதல் 8 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


குறிப்பு:

கைகளால் மாவை கிண்ணம் போல் செய்யக் கடினமாயிருந்தால், கொழுக்கட்டை அச்சை உபயோகப் படுத்தலாம்.

இட்லி பானைக்குப்பதில், டபிள் பாய்லர் உபயோகித்தும் கொழுகட்டையை வேகவைக்கலாம். இதிலுள்ளத் தட்டு, குழியில்லாமல், தட்டையாக இருப்பதால், அதிக கொழுக்கட்டையை அடுக்கவும், அதே சமயம் கொழுக்கட்டை உரு மாறாமல் வேகவும் வசதியாயிருக்கும்.

தேங்காய் பூரணத்திற்குப் பதில், பருப்பு பூரணம், எள்ளு பூரணம் ஆகியவற்றையும் செய்யலாம்.

பருப்பு பூரணம்:

தேவையானப்பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 1 கப்
தேங்காய்த்துருவல் - 3/4 கப்
ஏலக்காய் - 2

செய்முறை:

கடலைப்பருப்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, ஊறிய நீரை வடித்து விட்டு, நல்லத் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். பருப்பு மிருதுவாக வெந்தவுடன் (குழையக் கூடாது), இறக்கி நீரை வடித்து விட்டு ஆற விடவும்.

பருப்பு சற்று ஆறியவுடன், அத்துடன், வெல்லம், தேங்காய்த்துருவல், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தெடுத்து, அதை ஒரு அடி கனமானப் பாத்திரத்தில் போட்டு அடுப்பிலேற்றவும். நிதானமாத் தீயில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பூரணம் கெட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆற விடவும்.

எள்ளு பூரணம்:

தேவையானப்பொருட்கள்:

வெள்ளை எள் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எள்ளைப் போட்டு, சிவக்க வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியவுடன், மிக்ஸியி8ல் போட்டு பொடிக்கவும். பின்னர் அதிலேயே வெல்லத்தூளைப்போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்று ஓட விடவும். எள்ளும், வெல்லமும் ஒன்றாகக் கலந்தப்பின், வெளியே எடுத்து, அத்துடன் ஏலப்பொடி, மற்றும் நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

கொண்டைக்கடலை சுண்டல்:

கொண்டைக்கடலையை 7 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைக்கவும்.

வேகவைக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

1 கப் கடலைக்கு - 3 அல்லது 4 மிளகாய் (காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்), 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 கறிவேப்பிலை கொத்து, 1 டீஸ்பூன் எண்ணை, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 1/2 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு (விருப்பப்பட்டால்),தேவை.

வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்தவுடன், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், மிளகாயை கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு உடனே வெந்தக் கடலையைக் கொட்டிக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி உடனே இறக்கவும். இறக்கியவுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...