• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
சாத வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாத வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சம்பா சாதம் (மிளகு, சீரக சாதம்)


சம்பா சாதமும் (மிளகு, சீரக சாதம்), கத்திரிக்காய் கொஸ்தும், சிதம்பரம் கோவிலில் நடராஜருக்கு படைக்கப்படும் பிரசாதமாகும். 

தேவையானப்பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
நெய் - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் 5 கப் தண்ணீரை விட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு வைத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் நெய்யை விட்டு முந்திரிப்பருப்பைப் போடவும்.  முந்திரி சற்று சிவந்ததும் அதில் வேக வைத்துள்ள சாதம், மிளகு, சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு, நன்றாகக் கலந்து, இறக்கி கத்திரிக்காய் கொஸ்துடன் பரிமாறவும்.


கவனிக்க:  அதிக காரம் விரும்பாதவர்கள், மிளகு, சீரகப் பொடியை சற்று குறைத்துக் கொள்ளவும்.  அல்லது நெய்யைக் கூட்டிக் கொள்ளவும்.




கறிவேப்பிலை சாதம் - இரண்டாம் வகை


தேவையானப்பொருட்கள்:

சாதம் - 1 கிண்ணம் (2 பேருக்கு தேவையான அளவு)
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது

 செய்முறை:

ஒரு சிறு வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணையை விட்டு அதி உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் கறிவேப்பிலையையும் போட்டு மேலும் சில வினாடிகள் வறுத்து, இறக்கி ஆற விடவும்.  ஆறிய பின்னர் அத்துடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

வேறொரு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் அதில் முந்திரிப்பருப்பு மற்றும் சிறிது கறிவேப்பிலையைப் போட்டு சற்று வறுக்கவும்.  அத்துடன் சாதம், பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலைப் பொடி இரண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

 குறிப்பு:  இது சீக்கிரமாகச் செய்யக்கூடிய ஒரு வகை.  மீந்து போன  சாதத்திலும் இதை செய்யலாம்.

முதல் வகை செய்முறைக்கு . இங்கே சொடுக்கவும்

டபிள் பீன்ஸ் சாதம்


தேவையானப்பொருட்கள்:

சாதம் - 1 கிண்ணம் (இருவருக்கு தேவையான அளவு)
டபிள் பீன்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

வறுத்து பொடிக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு மிளகு அளவு அல்லது பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லை இலை - சிறிது
நெய் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
 உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப

செய்முறை:

டபிள் பீன்ஸை மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் கசகசாவைப் போட்டு சில வினாடிகள் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.  பின்னர் வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய்,  பெருங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.  வறுத்த பொருட்கள் ஆறியதும், வறுத்த கசகசா, ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.  வெங்காயம் நன்றாக வதங்கியதும், வேக வைத்துள்ள டபிள் பீன்ஸை சேர்க்கவும்.  அத்துடன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு, வறுத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். கடைசியில் சாதத்தையும், சிறிது உப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.  நெய் சேர்ப்பதானால் அதையும் சேர்த்துக் கிளறி, கொத்துமல்லி இலையைத் தூவி இறக்கி வைக்கவும்.


உளுந்து சாதம்


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
முழு உளுந்து - 1/4 கப்
பூண்டு பற்கள் - 10 முதல் 15 வரை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிபப்ருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:
வெறும் வாணலியில் அரிசியையும், உளுந்தையும்,  நிறம் மாறாமல், தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தெடுக்கவும்.

ஒரு குக்கரில், வறுத்த அரிசி, உளுந்து, பூண்டு, வெந்தயம், உப்பு ஆகியவற்றைப் போட்டு, அத்துடன் இரண்டரைக் கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி, 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டெடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சீரகம், பெருங்காயத்தூள், முந்திரி, கறிவேப்பிலை சேர்க்கவும்.  சீரகம் பொரிந்ததும், தேங்காய்த்துருவலைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.  பின்னர் அதில் வேக வைத்துள்ள அரிசிக் கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

குறிப்பு:  புழுங்கலரிசி மற்றும் கறுப்பு உளுந்தை உபயோகித்துத்தான் இந்த சாதத்தை செய்வார்கள்.  இடுப்பெலும்பிற்கு வலு சேர்க்கக் கூடியது.  இதைத் தாளிக்காமல், சிறிது நல்லெண்ணை சேர்த்து அப்படியேவும் சாப்பிடலாம்.

அன்னாசி சாதம்

தேவையானப்பொருட்கள்:

சாதம் - 1 கிண்ணம் (இருவருக்கு தேவையான அளவு)
அன்னாசிப்பழம் (சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 கப்
வெங்காயம் - பாதி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 3 அல்லது 4 பற்கள்
கொத்துமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு (கொரகொரப்பாகப் பொடித்தது) - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.   அடி கனமான வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விடவும்.  அதில் அன்னாசிப்பழத் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.  அத்துடன் இஞ்சி, பூண்டு துண்டுகளைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கியபின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.  பின்னர் கொத்துமல்லி, புதினா இலைகளைச் சேர்த்து சற்றி வதக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.  அதில் 2 அல்லது 3 கை நீரைத் தெளித்து மூடி வைத்து சிறு தீயில் சில வினாடிகள் வேக விடவும். பின்னர் மூடியைத் திறந்து, நீர் வற்றும் வரை கிளறி விடவும்.  அதில் சாதத்தைப் போட்டு, அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி, அடுப்பை சற்று பெரிய தீயில் வைத்து, ஓரிரு கிளறு கிளறி இறக்கி வைக்கவும்.  இறக்கி வைத்தப் பின் எலுமிச்சை சாறைச் சேர்த்து கிளறி, கொத்துமல்லி இலைத் தூவி பரிமாறவும்.

பூண்டு சாதம்

தேவையானப்பொருட்கள்:

சாதம் - 2 கப் (இருவருக்கு தேவையான அளவு)
பூண்டு பற்கள் (சிறிய அளவு) - 10 முதல் 15 வரை
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு சிறு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். கடைசியில் 4 அல்லது 4 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும். ஆறிய பின், வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு அதில் மீதமுள்ள பூண்டுப்பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.  அதே எண்ணையில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.  அடுப்பை தணித்து வைத்துக் கொண்டு, சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ளப் பொடி, உப்பு  ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும்.  கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

வெள்ளரிக்காய் பச்சடியுடன் பரிமாறவும்.

கவனிக்க: எண்ணைக்கு பதில் சிறிது நெய்யிலும் பூண்டை வதக்கி போடலாம். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பிற்குப் பதிலாக, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றைப் பொடித்தும் சேர்க்கலாம். பொட்டுக்கடலை/வேர்க்கடலை சேர்ப்பதென்றால் வறுக்கத் தேவையில்லை.

கோவைக்காய் சாதம்

தேவையானப்பொருட்கள்:

சாதம் - 1 கிண்ணம் (இருவர் சாப்பிடும் அளவிற்கு)
கோவைக்காய் - 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
 
வறுத்து பொடிக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
கெட்டி பெருங்காயம் - ஒரு சிறு மிளகு அளவு (தூளாக இருந்தால் - ஒரு சிட்டிகை)
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
 
தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:

கோவைக்காயை நன்றாகக் கழுவி விட்டு, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். தோசைக்கல் அல்லது அகலமான தாவாவை அடுப்பிலேற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள காயை, தனித்தனியாக பரப்பி வைக்கவும். அதன் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு, அவ்வப்பொழுது திருப்பி விட்டு சிவக்க வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். (மைக்ரோவேவ் அவனிலும் வதக்கி எடுக்கலாம்).
 
வெறும் வாணலியில் வெள்ளை எள்ளைப் போட்டு சிவக்கும் வரை அல்லது பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.  அதே வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் பெருங்காயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப்போட்டு சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும்.
 
ஆறியதும், அத்துடன் வறுத்து வைத்துள்ள எள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும்.  பின் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும்.  கறிவேப்பிலையையும் போட்டு சற்று வறுத்து, அதன் பின் வதக்கி வைத்துள்ள கோவைக்காய் துண்டுகள், மஞ்சள் தூள்,  ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.  பின்னர் அதில் சாதத்தைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும். கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி, ஒரு டீஸ்பூன் எண்ணையையும் விட்டு நன்றாகக் கலந்து இறக்கி வைக்கவும்.

தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

மாங்காய் சாதம்

தேவையானப்பொருட்கள்:

சாதம் - 2 கப்
மாங்காய்த்துருவல் - 1 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
 
செய்முறை:

ஒரு பச்சை மாங்காயை எடுத்து, தோல் சீவி துருவிக் கொள்ளவும். மாங்காய் துருவல் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். (புளிப்புத்தன்மை மற்றும் அவரவர் ருசிக்கேற்ப மாங்காய்த்துருவலை சற்று கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம்).
 
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும்.  எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும்.  காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும்.  கறிவேப்பிலையையும் போடவும்.  பின்னர் அத்துடன் மாங்காய்த்துருவல், மஞ்சள் தூள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை, அடுப்பை  சிறு தீயில் வைத்து வதக்கவும்.  கடைசியில் உப்பு போட்டுக் கிளறி விட்டு, சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி எடுக்கவும்.
 
பின்குறிப்பு: மாங்காயை துருவி சேர்ப்பதற்குப் பதிலாக, அரைத்தும் சேர்க்கலாம்.

கொத்துமல்லி சாதம்


தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
பச்சை கொத்துமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:


அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். இஞ்சியையும் துண்டுகளாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின் அதில் புளியைப் போட்டு சற்று வதக்கவும். கடைசியில் கொத்துமல்லியை நறுக்கிப்போட்டு சில வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

வாணலியில் மீதி எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். அத்துடன் சாதம், உப்பு, கொத்துமல்லி விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மிளகு சாதம்


தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுக்கவும். சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைதையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்தெடுக்கவும்.

மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

இன்னொரு வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

அப்பளத்துடன் பரிமாறவும்.

கீரை சாதம்


தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
கீரை (ஏதாவது ஒரு வகை) - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு பற்கள் - 4
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
முந்திரி பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

சாதத்தை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.

கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். பூண்டை நசுக்கி கொள்ளவும் அல்லது பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து சற்று சிவக்க வறுக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் கிளறி விடவும். பின்னர் அதில் கீரையைச் சேர்த்து வதக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. கீரையிலுள்ள நீர்ச்சத்தே போதுமானது. அடுப்பை சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விட்டு, கீரை நன்றாக சுண்டும் வரை வதக்கவும். கடைசியில், வடித்த சாதத்தைக் கொட்டிக் கிளறி விடவும்.

அப்பளம்/காய்கறி சிப்ஸ் ஆகியவற்றுடன் பரிமாறவும்.

நெல்லிக்காய் சாதம்


தேவையானப்பொருட்கள்:

சாதம் - 2 கப்
நெல்லிக்காய் - 2 முதல் 3 வரை
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும். அல்லது துண்டுகளாக நறுக்கி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டி சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, துருவிய அல்லது அரைத்த நெல்லிக்காயைப் போட்டு மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதில் உப்பு, சாதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கும் முன் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

காய்கறி கூட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

காரம் தேவையென்றால், பச்சை மிளகாயை நெல்லிக்காயுடன் அரைத்து சேர்க்கவும். எப்படி சாப்பிட்டாலும் விட்டமின் சி மிகுந்த அருமையான சாதம் இது.

சாம்பார் சாதம்


தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

காய்கறிகள்:

சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கலந்த காய்கள் - 2 முதல் 3 கப் வரை (நடுத்தர அளவிற்கு வெட்டியது)

விருப்பமான அல்லது வீட்டிலுள்ள எந்த வகை காய்களையும் சேர்க்கலாம். நான் இதில் முருங்கைக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், கேரட், பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கு, குடை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துள்ளேன்.

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்ம் - ஒரு பட்டாணி அளவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி இலை - சிறிது
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)

செய்முறை:

அரிசியையும், பருப்பையும் நன்றாகக் கழுவி விட்டு, அத்துடன் 3 முதல் 4 கப் தண்ணீரைச் சேர்த்து, குக்கரில் போட்டு 5 முதல் 6 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயம், கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். வறுத்தப் பொருட்கள் சற்று ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

புளியை சிறிது நீரில் ஊறவைத்து, கரைத்து, சாற்றைப் பிழிந்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் அல்லது வாணலியில், 2 டீஸ்பூன் எண்ணை விட்டு சாம்பார் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். மிளகாய், வெங்காயம் இரண்டும் வாசனை வர வதங்கியவுடன், நறுக்கி வைத்துள்ள காய்களைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வதக்கவும். பின் தக்காளியை நடுத்தரத் துண்டுகளாக வெட்டிச் சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, காய்கள் மூழ்கும் அளவிற்குத் தேவையானத் தண்ணீரைச் சேர்க்கவும். மூடி போட்டு காய்கள் வேகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும், புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். சாம்பார் சற்று நீர்க்க இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தேவையானால் மேலும் நீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்கும் பொழுது, அடுப்பைத் தணித்து விட்டு, அதில் வேக வைத்துள்ள சாதம்/பருப்ப் கலவையை, நன்றாக மசித்து விட்டு, கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும். அத்துடன் பொடித்து வைத்துள்ளப் பொடி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

பொரித்த அப்பளம்/வடவம் அல்லது சிப்ஸ் ஆகியவற்றுடன் சூடாக பரிமாறவும்.

தக்காளி சாதம் - இரண்டாம் வகை


இந்த சாதம், பூண்டு, வெங்காயம் சேர்க்காமல், அதிக காரமில்லாமல், விரைவில் செய்யக்கூடிய ஒன்று. விரதம் மற்றும் பண்டிகை நாட்களுக்கு ஏற்றது.

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
தக்காளி (நடுத்தர அளவு) - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

நெய் அல்லது எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6

செய்முறை:

தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 முதல் 6 விசில் வரும் வரை வேக விடவும்.

சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, நன்றாகக் கிளறி விடவும்.

ஒரு சிறு வாணலியில் நெய் அல்லது எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.

சூடாக அப்பளம், சிப்ஸ் போன்றவற்றுடன் பரிமாறவும்.

மற்றொரு வகை தக்காளி சாதம்

சுக்கு மல்லி சாதம்


சூடான சாதத்தில், சிறிது சுக்குப்பொடி, உப்பு, நெய் அல்லது நல்லெண்ணைச் சேர்த்து பிசைந்து, ஓரிரண்டு கவளம் சாப்பிட்டால், வயிற்றுத்தொல்லை மற்றும் உடல் வலி தீரும்.

சுக்கோடு, தனியாவையும் (கொத்துமல்லி விதை) சேர்த்து பொடிக்கும் பொழுது, சுக்கின் காரம் சற்று குறைந்து, மணமும் அதிகரிக்கும். இந்தப்பொடி தயாரிக்க, ஒரு விரலளவு சுக்கையும், 2 டேபிள்ஸ்பூன் தனியாவையும், தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்தெடுத்து, பொடிக்க வேண்டும்.

அதற்குப்பதில், கடைகளில் கிடைக்கும் "சுக்கு மல்லி காபி பொடியை" உபயோகித்து இந்த சாதத்தைச் செய்தேன். சுவையில் வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை. சூடாக இந்த சாதத்தை சாப்பிட்டு விட்டு, ஒரு கப் ரசமோ அல்லது ரசம் சாதமோ சாப்பிட்டால், உடம்பிற்கு நல்லது.

தேவையானப்பொருட்கள்:

சூடான சாதம் - 1 கப்
சுக்கு மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
கறிவேப்பிலை - சிறிது
நெய் அல்லது நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் உப்பு, சுக்கு மல்லித்தூள், சிறிது நெய் அல்லது எண்ணை விட்டு, கலந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, மீதமுள்ள நெய் அல்லது எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, அடுப்பை அணைத்து விடவும். அதில் சாததைக் கொட்டி நன்றாகக் கிளறி விட்டு உடனே சாப்பிடவும்.

பின்குறிப்பு: இதை தாளிக்காமலும், அப்படியே சாப்பிடலாம். ஆனால் தாளித்து செய்யம் பொழுது, சுவை கூடி நன்றாக இருக்கும்.

தக்காளி சாதம் - முதல் வகை



தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 1" துண்டு
பூண்டுப்பற்கள் - 4
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை இலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியைக் கழுவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாகக் கீறி வைக்கவும்.

முழு தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பை அணைத்து விடவும். சற்று நேரம் கழித்து, தக்காளியை எடுத்து அதன் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்த தக்காளிச் சாற்றுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 4 கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பிலேற்றி அதில் எண்ணையை விடவும். எண்ணை காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பட்டை இலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியவுடன், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். பின்னர் அதில் ஊற வைத்துள்ள அரிசியை, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு சேர்க்கவும். அரிசியைத் தொட்டால் சுடும் அளவிற்கு வரும் வரை கவனமாகக் கிளறி விடவும். பின்னர் அதில் தக்காளிச் சாற்றையும், எலுமிச்சம் சாற்றையும் சேர்த்துக் கிளறி மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டு, குக்கர் ஆறியதும், திறந்து கவனமாகக் கிளறி விடவும்.

விருப்பப்பட்டால், கொத்துமல்லித்தழையைத் தூவி அலங்கரிக்கலாம்.

வறுத்த முந்திரிப்பருப்பு, வேக வைத்தப் பட்டாணி ஆகியவற்றையும் இத்துடன் கலந்துப் பரிமாறலாம்.

குடமிளகாய் சாதம்


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
குடமிளகாய் - 1
கொண்டைகடலை - 1/4 கப்
வெங்காயம் - 1
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்து பொடிக்க:

காய்ந்தமிளகாய் - 2
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
இலவங்கபட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 1

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே (அல்லது குறைந்தது 8 மணி நேரம்) ஊற வைக்கவும்.

ஊறிய கடலை நன்றாகக் கழுவி, அத்துடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து குக்கரில் மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைக்கவும்.

வறுக்கக கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு டீஸ்பூன் எண்ணையில் சிவக்க வறுத்தெடுத்து, சற்று ஆறியவுடன், நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

அரிசியை குழையாமல், உதிரியாக வேக வைத்தெடுக்கவும். சாதத்தை ஒரு தட்டில் கொட்டி அதன் மேல் ஓரிரண்டு டீஸ்பூன் எண்ணையை தெளிக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின், அதில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலை மற்றும் உப்பு போட்டுக் கிளறி விடவும். கடைசியில் சாதத்தைப் போட்டுக் கிளறி, அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ளப் பொடியை அதன் மேல் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.

குறிப்பு: கொண்டைக்கடலை சேர்க்க நேரமில்லையென்றால், அதற்கு பதில் தாளிப்பில் வேர்க்கடலையோ அல்லது முந்திரி பருப்போ சேர்த்து செய்யலாம். அல்லது எந்தவிதக் கடலையும் சேர்க்காமலும் செய்யலாம். கடலை வகைகளைச் சேர்த்தால் சுவை சற்றுக் கூடும்.

புளிச்சாதம்


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி விதை - 1 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி குழையாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்தெடுத்து, ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஓரிரு டீஸ்பூன் எண்ணையை தெளித்து விடவும்.

புளியையும் உப்பையும் ஊறவைத்து, திக்காக பிழிந்தெடுக்கவும். 2 கப் புளித்தண்ணீர் கிடைக்கும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பின் அதில் வேர்க்கடலை, மிளகாய் (மிளகாயை 4 அல்லது 5 துண்டுகளாகக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து சற்று வதக்கி அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதனிடையே, இன்னொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் ஒரு காய்ந்த மிளகாய், கொத்துமல்லி விதை மற்றும் வெந்தயத்தை வறுத்தெடுத்து, ஆறியவுடன் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

புளிக்கரைசல் நன்றாகக் கொதித்து சற்று திக்கானதும், பொடித்து வைத்துள்ள வெந்தய-தனியாப் பொடியைச் சேர்த்துக் கிளறி விடவும். புளிக்காய்ச்சல் கெட்டியாகி, எண்ணை மேலே மிதந்து வரும் பொழுது, இறக்கி விடவும்.

இந்தப் புளிக்காய்ச்சலை சாதத்தின் மேல் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து விடவும். கலக்கும் பொழுது தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணை விட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு: இதில் மற்ற எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் புளிச்சாதத்திற்கு நல்லெண்ணை சேர்த்தால்தான் வாசமாக இருக்கும். இதில் வேக வைத்த கறுப்பு கொண்டைக்கடலையையும் புளிக்காய்ச்சல் கொதிக்கும் பொழுது சேர்த்து செய்யலாம்.

மசாலா சாதம்


தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
பச்சை கொத்துமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
காரட் - சிறு துண்டுகளாக வெட்டியது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலாத் தூள் - ஒரு சிட்டிகை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியை குழையவிடாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய்யை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் முந்திரிப்பருப்பு, காரட் துண்டுகள், பச்சை மிளகாய் (கீறிப்போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். முந்திரிப்பருப்பு சற்று சிவக்க வறுபட்டதும், அத்துடன் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், கொத்துமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கிளறு கிளறவும். பின்னர் அதில் சாதம் மற்றும் உப்பு போட்டு நன்றாகக் கிளறி, இறக்கி வைக்கவும்.

எள்ளு சாதம்



தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
வெள்ளை எள் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

சாதத்தைக் குழைய விடாமல், பொல பொல என்று வேக வைத்து எடுத்து, ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும். பின் அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும். பின்னர் இத்துடன் வறுத்த எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்யவும்.

இந்தப் பொடியை சாதத்தின் மேல் தூவி, சிறிது ந்ல்லெண்ணைச் சேர்த்து கிள்றி விடவும்.

குறிப்பு: எள் பொடியை முன்பே செய்து வைத்துக் கொண்டால், தேவை படும் பொழுது சாதத்தில் சேர்த்து கிளறிக் கொள்ளலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...