• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
சிற்றுண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்றுண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காஞ்சிபுரம் இட்லி

 
தேவையானப்பொருட்கள்:

இட்லி (புழுங்கல்) அரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் (பொடி பல்லு பல்லாக நறுக்கியது) - 1/2 கப்
முந்திரி பருப்பு (சிறு சிறு துண்டுகளாக ஒடித்தது) - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக தண்ணீரில் 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் போட்டு இட்லிக்கு அரைப்பது போல் மிருதுவாக அரைத்து, உப்பு போட்டு கலந்து, இரவு முழுதும் புளிக்க விடவும்.

மறு நாள், ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு அதில் முந்திரி பருப்பு, சுக்குப் பொடி (சுக்குப்பொடி இல்லையென்றால், சிறு இஞ்சித் துண்டைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்) இரண்டையும் போட்டு, முந்திரி சிவக்கும் வரை வறுத்து மாவில் கொட்டவும்.  அதே வாணலியில் நல்லெண்ணையை விட்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை முழுதாகவும், மற்றொரு டீஸ்பூன் மிளகு,   சீரகத்தை ஒன்றிரண்டாகவும் பொடித்து சேர்க்கவும்.  இத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து இதையும் மாவில் கொட்டவும். தேங்காய் துண்டுகளையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

இட்லி குக்கர் அல்லது இட்லி பானையை அடுப்பிலேற்றி, தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.  ஒரே அளவுள்ள டம்ளர்களை எடுத்து எண்ணை தடவி அதில் 3/4 அளவிற்கு மாவை ஊற்றவும்.  இதை இட்லி குக்கர்/பானை உள்ளே வைத்து மூடி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

குக்கர் பாத்திரம் அல்லது வாயகன்ற பேசின் போன்ற பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைத்து, துண்டுகளாகவும் வெட்டி பரிமாறலாம். அல்லது சாதரண இட்லி போல், இட்லி தட்டில் ஊற்றியும் வேக வைக்கலாம்.. எப்படி ஊற்றி எடுத்தாலும் சுவை ஒன்றுதான். வடிவம் மட்டுமே மாறுபடும்.

ரஜ்மா பகோடா


தேவையானப்பொருட்கள்:

ரஜ்மா - 1 கப்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு பற்கள் - 5 முதல் 6 வரை
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

ரஜ்மாவை 8 மணி நேரம் அல்லது இரவு முழுதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

ஊறிய ரஜ்மாவை நன்றாக கழுவி விட்டு, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.  வெந்த ரஜ்மாவை நன்றாக வடித்தெடுத்து ஆற விடவும்.  பின்னர் மிக்ஸியில் போட்டு அத்துடன் காய்ந்த மிளகாய் மற்றும் சோம்பைச் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு (பூண்டை தோலுடன் போடலாம்), சீரகம் ஆகியவற்றை சிறு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த ரஜ்மா விழுது, கடலை பாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு பிசைந்துக் கொள்ளவும்.  தேவைப்பட்டால்  ஓரிரு ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.  எண்ணை நன்றாக காய்ந்த பின், மாவை சிறு விள்ளல்களாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

இதை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.  சாத வகைகளுடன் தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.

தினை தோசை


தேவையானப்பொருட்கள்:

தினை மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
எண்ணை - 4 டீஸ்பூன்
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தினை மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீரை விட்டு, தோசை மாவு பதத்திற்கு சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சூடானதும் எண்ணை தடவி விட்டு, ஒரு கரண்டி மாவை எடுத்து, கல்லின் ஓரத்திலிருந்து வட்டமாக ஊற்றி நடுவில் முடிக்கவும் (ரவா தோசைக்கு ஊற்றுவது போல்).  ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையைச் சுற்றி ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.  ஒரு பக்கம் சிவக்க வெந்ததும், திருப்பி போட்டு மறு பக்கமும் சிவக்க வெந்தவும் எடுத்து வைக்கவும்.

இதற்கு வெங்காய சட்னி நன்றாக இருக்கும்.

கவனிக்க:  தினை மாவு எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.  இதில் அரிசி மாவிற்குப் பதில், ஒரு கரண்டி சாதரண தோசை மாவையும் சேர்க்கலாம்.  வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம்.

உடனடி வெங்காய பக்கோடா

தேவையானப்பொருட்கள்:

இன்ஸ்டன்ட் பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு பற்கள் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில், மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.  இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  பூண்டை நசுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில், இன்ஸ்டன்ட் பஜ்ஜி/போண்டா மிக்ஸைப் போட்டு, அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.  ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணையை சூடாக்கி மாவின் மேல் கொட்டிக்  கலக்கவும்.  பின்னர் அதில் சிறிது நீரைத் தெளித்து, கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும், அதில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சாம்பார் சாதம்/புலாவ் போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.  மாலை நேர சிற்றுண்டியாகவும் டீயுடன் பரிமாறலாம்.

கவனிக்க:  இது  உடனடியாக செய்யக் கூடிய ஒரு "அவசர பக்கோடா".  வழக்கமான வெங்காய பக்கோடா குறிப்பிற்கு  இங்கே சொடுக்கவும்

மிளகு வடை (ஆஞ்சநேயர் வடை)

இந்த மிளகு வடை, ஆஞ்சநேயருக்கு வடைமாலையாக சாற்றுவதற்காக கோவில்களில் செய்யப்படுவது.

தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும்.

மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் உளுத்தம் பருப்பை போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும்.

ஒரு சுத்தமான ஈரத்துணியில், ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து வைத்து, மெல்லிய வடையாகத் தட்டவும்.  வடையை துணியிலிருந்து கவனமாக எடுத்து, காய்ந்த எண்ணையில் போட்டு, அரை வேக்காடாகப் பொரித்தெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே பொரித்தெடுக்கவும்.  பின்னர், மீண்டும் 4 அல்லது 5 பொரித்த வடைகளை எண்ணையில் போட்டு, நன்றாக சிவக்கும் வரை பொரித்தெடுக்கவும்.

பச்சை பயறு அடை


தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்
கோதுமை மாவு - 2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - தேவையான அளவு

செய்முறை:

பச்சை பயறை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் க்ழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு, வடிகட்டியில் போட்டு வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, பயறை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.  1 அல்லது 2 சுற்றுகள் சுற்றினால் போதும்.

அரைத்த பயறை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கோதுமை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.  தேவையானால் சிறிது நீரைத் தெளித்து, சப்பாத்திக்கு பிசைவது போல் மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.  சிறிது எண்ணையை மாவின் மேல் தடவி 30 முதல் 45  நிமிடங்கள் வரை மூடி வைத்து ஊற விடவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சூடானதும் சிறிது எண்ணையை விட்டு தேய்த்து விடவும்.  ஒரு ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து கல்லின் மேல் வைத்து, விரல்களால் மெல்லிய அடையாகத் தட்டவும்.  (கல்லில் தட்ட சிரமமாக இருந்தால், ஒரு வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் பேப்பரிலோ தட்டி எடுத்து கல்லில் போடவும்). அடையை சுற்றி சிறிது எண்ணையை விட்டு, இரு புறமும் திருப்பி திருப்பிப் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.  அடையை கல்லில் போட்ட பின், ஒரு பெரிய ஸ்பூனின் பின் புறத்தால் அடையை எல்லா இடத்திலும் சற்று அழுத்தி விட்டால், அடை மெல்லியதாக பரவிக் கொள்ளும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக விட்டால் அடை நன்றாக சிவந்து விடும்.

இதை தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம்.

அவல் வடை


தேவையானப்பொருட்கள்:

இன்ஸ்டன்ட் அவல் மிக்ஸ் - 160 கிராம் (2 கப்)
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய் தூள் - 1/4  டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:


அவல் மிக்ஸை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் 1 கப் கொதிக்கும் நீரை ஊற்றி கிளறி விடவும்.  மூடி போட்டு 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மூடி வைத்துள்ள அவல் மிக்ஸை திறந்து, அத்துடன் நறுக்கிய வெங்காய்ம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

இதிலிருந்து எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டி வடையாகத் தட்டிக் கொள்ளவும். எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், அதில் 3 அல்லது 4 வடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  எல்லா வடைகளயும் இவ்வாறே சுட்டெடுக்கவும்.

சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

கவனிக்க:  இன்ஸ்டன்ட் அவல் மிக்ஸில் செய்யும் இது ஒரு "அவசர அவல் வடை".  சீக்கிரமாக செய்து விடலாம்.  இன்ஸ்டன்ட் அவல் மிக்ஸ் இல்லையெனில், அவலை ஊறவைத்தும் செய்யலாம்.

அவல் ரோல்ஸ்


தேவையானப்பொருட்கள்:

இன்ஸ்டன்ட் அவல் மிக்ஸ் - 160 கிராம் (2 கப்)
ஜாமூன் மிக்ஸ் - 2 கப் (குவித்து அளக்கவும்)
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

அவல் மிக்ஸை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் 1 கப் கொதிக்கும் நீரை ஊற்றி கிளறி விடவும்.  மூடி போட்டு  வைத்திருக்கவும்.

ஒரு தட்டில் ஜாமூன் மிக்ஸை போட்டு, அத்துடன் மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் தெளித்து மிருதுவாக (ஜாமூன் செய்வதற்கு பிசைவது போல்) பிசையவும்.     இதை எலுமிச்சம் பழ அளவிற்கு உருட்டி வைக்கவும்.  இது தான் மேல் மாவு.

மூடி வைத்திருக்கும் அவல் மிக்ஸை திறந்து, நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.  இதை சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு (ஜாமூன் மிக்ஸ் உருண்டையை விட சற்று சிறியதாக) எடுத்து நீள வடிவில் உருட்டி வைக்கவும். இது தான் உள்ளே வைக்கும் பூரணம்.

கையில் சிறிது எண்ணையைத் தடவிக் கொண்டு ஜாமூன் மிக்ஸ் உருண்டையை எடுத்து, கொழுக்கட்டைக்கு கிண்ணம் செய்வது போல் செய்யவும்.  இதனுள் அவல் உருண்டையை வைத்து எல்லா பக்கத்தையும் நன்றாக மூடி விடவும்.   சப்பாத்தி பலகையில் வைத்து இலேசாக விரல்களால் உருட்டி வைக்கவும்.  எல்லா உருண்டைகளையும் இவ்வாறு செய்து முடிக்கவும்.  சுமார் 15 ரோல்ஸ் கிடைக்கும்.

வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், 3 அல்லது 4 உருண்டைகளைப் போட்டு, தீயை குறைத்து வைத்து மிதமான சூட்டில், பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தக்காளி கெச்சப் அல்லது புதினா/கொத்துமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

நான் இதை "கற்பூரவல்லி (ஓமவல்லி)" இலைமேல் வைத்து பரிமாறியுள்ளேன்.  இலையுடன் சேர்த்து சாப்பிட சுவையாகவும் இருந்தது.  சீரணத்திற்கும் சிறந்தது.  இல்லெயென்றால், கேரட், வெள்ளரி போன்ற பச்சை காய்கறிகளை சிறு துண்டுகளாக்கி அதனுடனும் பரிமாறலாம்.
  
கவனிக்க:  இன்ஸ்டன்ட் அவல் மிக்ஸில் தாளிப்பு, உப்பு, காரம் அனைத்தும் இருப்பதால், உடனடியாக உபயோகிக்க முடியும்.  நேரமும் மிச்சமாகும்.  இல்லையென்றால், சாதரண அவலை ஊற வைத்து, தாளித்தும் செய்யலாம்.  ஜாமூன் மிக்ஸ் கை வசம் இருந்ததால் அதை மேல் மாவிற்கு உபயோகித்துக் கொண்டேன். 

ஜாமூன் மிக்ஸ் காய்கறி பகோடா

  
தேவையானப்பொருட்கள்:

ஜாமுன் மிக்ஸ் பவுடர் - 1 கப்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
கேரட் (நடுத்தர அளவு) - 1
பீன்ஸ் - 4 அல்லது 5
முட்டைக்கோஸ் - ஒரு சிறு துண்டு
பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி
கீரை - சிறிது
வெங்காயம் - 1
 இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மற்ற காய்கறி, கீரை ஆகியவற்றையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  பட்டாணியை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் போட்டு 2 சுற்று சுற்றி எடுக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில், ஜாமுன் மிக்ஸ், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், சோம்பு, உப்பு ஆகியவற்றைப் போட்டு கலந்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் நறுக்கி வைத்துள்ள, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, காய்கறிகள் அனைத்தையும் போட்டு கிளறி விடவும்.  2 டேபிள்ஸ்பூன் எண்ணையை சூடாக்கி, மாவின் மேல் கொட்டி, ஸ்பூனால் கிளறி விடவும்.  பின்னர் சிறிது தண்ணீரைத் தெளித்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி காய விடவும்.  அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.  மாவை சிறிது சிறிதாகக் கிள்ளி எண்ணையில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

கவனிக்க:  இந்த பக்கோடாவை கடலை மாவு மற்றும் அரிசி மாவில் மட்டும் செய்யலாம்.  அப்படி செய்வதென்றால் 1 கப் கடலை மாவிற்கு, 1/2 கப் அரிசி மாவு சேர்த்து செய்யவும்.    மீந்து போன ஜாமுன் மிக்ஸ் கை வசம் இருந்ததால், அதை தீர்ப்பதற்காக, இதில் சேர்த்து செய்துள்ளேன்.

காய்கறி வடை


தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 6 முதல் 8 வரை
முட்டைகோஸ் - சிறு துண்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி இலை - ஒரு சிறிய கட்டு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாக 1 மணி நேரம் ஊற வைக்கவும்.  பின்னர் நன்றாகக் களைந்து கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல், கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கேரட்டின் தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும், பீன்ஸை நீளவாக்கில் நான்காக வெட்டி, அதை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.  முட்டை கோஸயும் பொடியாக நறுக்கி  கொள்ளவும்.

நறுக்கிய காய்கறி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி இலை, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக பிசையவும்.

 ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், ஒரு சிறு ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து வடையாக தட்டி, எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பண்டிகை வடை


பண்டிகை நாட்களில், சிலர் வீடுகளில் வெங்காயம், சோம்பு போன்ற மசாலாப் பொருட்களை சமையலில் சேர்க்க மாட்டார்கள். இப்படி வெங்காயம், சோம்பு சேர்க்காமல் செய்யப்படும் வடையை "பண்டிகை வடை" என்று அழைப்பார்கள்.

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பருப்புகள் மூன்றையும் ஒன்றாகப் போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.  பின்னர் நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து, மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

இஞ்சி, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.  சீரகத்தையும் மாவில் போட்டு நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.  எண்ணை காய்ந்ததும், எலுமிச்ச அளவு மாவை எடுத்து வடையாகத் தட்டி, நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

வெண்ணை தோசை

கர்நாடக மாநிலத்திலுள்ள தவனகிரியில் பிரசித்தமானது இந்த வெண்ணை தோசை.

தேவையானப்பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
அரிசி பொரி - 100 கிராம்
 மைதா - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணை - 100 கிராம் அல்லது தேவைக்கேற்றவாறு
சமையல் சோடா - 2 சிட்டிகை
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

 செய்முறை:

அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக 8 மணி நேரம் ஊற வைக்கவும்.  வெந்தயத்தை, உளுத்தம் பருப்புடன் சேர்த்து ஊற விடவும்.     ஊறிய அரிசியை நன்றாகக் கழுவி விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.  அதிலேயே உளுத்தம் பருப்பு, வெந்தயம், பொரி, மைதா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்து, உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.

 மறு நாள் காலையில் மாவுடன் சமையல் சோடாவைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சிறிது வெண்ணை தடவி, கல் சூடானதும் மாவை கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாகப் பரப்பி விடவும்.  சிறிது வெண்ணையை எடுத்து தோசையின் மேல் ஆங்காங்கே போடவும்.  ஒரு புறம் சிவந்து வெந்ததும், திருப்பிப் போட்டு மறு புறமும் சிவந்ததும் எடுத்து வைக்கவும்.

 கர்நாடகத்தில்,  இந்த தோசையுடன் மசித்த உருளைக்கிழங்கும் (நம்மூர் உருளைக்கிழங்கு மசாலா போல் இல்லாமல், மசித்த உருளைக்கிழங்கை வெறுமனே தாளித்து கொடுப்பார்கள்) , தேஙகாய் சட்னியும் பரிமாறுவார்கள்  நாம் நம் விருப்பம் போல் சட்னி, சாம்பார்  ஆகியவற்றுடனும் பரிமாறலாம்.


  

கேழ்வரகு முறுக்கு


தேவையானப்பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
வெண்ணை அல்லது நெய் - 3 டீஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

1/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, 1/2 கப் பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், எள், வெண்ணை அல்லது நெய், உப்பு ஆகியவற்றப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.  பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு  மிருதுவாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்தெடுத்துக் கொள்ளவும்.   ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். முறுக்கு அச்சில் மூன்று கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும். முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.

கவனிக்க:  முறுக்கின் நிறம் கறுப்பாக இருப்பதால், முறுக்கு வெந்து விட்டதா என்பதை நிறத்தை வைத்து கணிக்க முடியாது.  எனவே முறுக்கை எண்ணையில் பிழிந்தவுடன் ஏற்படும் எண்ணையின் சலசலப்பு சத்தம் அடங்கியவுடன் எடுத்தால் சரியாக இருக்கும்.

மேற்கண்ட அளவிற்கு சுமார் 20 சிறிய அளவிலான முறுக்குகள் வரும்.

பயத்தம் பருப்பு தயிர் போண்டா


தேவையானப்பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தயிர் - 3 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்றாக கழுவி விட்டு, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைத்து, இறக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும்.  எண்ணை காய்ந்ததும், கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து எண்ணையில் போடவும்.  எண்ணை கொள்ளுமளவிற்கு 4 அல்லது 5 போண்டாவைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து, கொதிக்க வைத்துள்ள வென்னீரில் போடவும். போண்டா வென்னீரில் ஊறி சற்று மிருதுவானவுடன், ஒரு கரண்டியால் எடுத்து, இலேசாக பிழிந்து விட்டு, ஒரு தட்டில் பரவலாக அடுக்கி வைக்கவும். தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, சிறிது உப்பைச் சேர்த்துக் கலக்கி, போண்டாவின் மேல் ஊற்றவும்.  அதன் மேல்  மிளகாய்த்தூளைத் தூவி பரிமாறவும்.

சிவப்பு அவல் கொழுக்கட்டை



தேவையானப்பொருட்கள்:

சிவப்பு அவல் - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அவலை கழுவி விட்டு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும். தண்ணீர் அவல் மூழ்கும் அளவிற்கு விட்டால் சரியாக இருக்கும். ஊறிய அவலில் தண்ணீர் இருந்தால் வடிகட்டி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.   ஒரு சிறு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து பிசைந்து வைத்துள்ள அவலில் கொட்டவும்.  தேங்காய்த்துருவலையும் சேர்த்து மீண்டும் நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.   எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து ஓவல் வடிவில் கொழுக்கட்டையாகப் பிடித்து, இட்லி தட்டில் அடுக்கி ஆவியில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.  

சட்னியுடன் பரிமாறவும்.  இட்லி மிளகாய்ப் பொடியுடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

புரோக்கோலி மசால் தோசை


தேவையானப்பொருட்கள்:

தோசை மாவு - 1 கிண்ணம்
புரோக்கோலி - 1
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டுப்பற்கள் (சிறிய அளவு) - 3 அல்லது 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

மசாலா தயாரிக்க:  

புரோக்கோலியின் பூவை தனியாக எடுத்து நடுத்தர அளவு துண்டுகளாக  நீளவாக்கில்  வெட்டிக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் 4 அல்லது 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது உப்பைச் சேர்த்து புரோக்கோலி துண்டுகளைப் போட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு, உடனே எடுத்து தனியாக வைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது இடித்துக் கொள்ளவும்.

தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விட்டு எடுத்து, சற்று ஆறியதும், தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

முந்திரிப்பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு காய்ந்ததும் சீரகம், சோம்பு ஆகியவற்றைப் போடவும். சீரகம் பொரிந்ததும் இஞ்சி, பூண்டு சேர்த்து சற்று வதக்கி, அதன் பின் வெங்காயத்தையும் சேர்த்து சிவக்க வதக்கவும்.  பின்னர் அதில் தக்காளி விழுதைச் சேர்த்து, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி விடவும்.    சில வினாடிகள் வரை கிளறி விட்டு அதில் முந்திரி விழுதைச் சேர்த்துக் கிளறவும்.  பின்னர் அதில் புரக்கோலியைப் போட்டு, சிறிது தண்ணீரைத் தெளித்து, மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.  புரக்கோலி வெந்து மசாலா கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.


தோசை தயாரிக்க:

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, எண்ணை தடவி, கல் சூடானதும் ஒரு பெரிய கரண்டி தோசை மாவை  ஊற்றி மெல்லியதாக பரப்பி விடவும்.  ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையைச் சுற்றி ஊற்றி வேக விடவும்.  ஒரு புறம் சிவக்க வெந்ததும், தோசையின் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் மசாலாவை வைத்து, தோசையின் இரண்டு முனையயும்  மடித்து விட்டு, திருப்பிப் போட்டு சில வினாடிகள் வேக விட்டு எடுக்கவும்.

சட்னி/சாம்பாருடன் பறிமாறவும்.

கவனிக்க:  இந்த புரக்கோலி மசாலாவை சப்பாத்தி, பூரி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

பயத்தம் பருப்பு முறுக்கு


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்  அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை 1 அல்லது 2 மணி நேரம் ஊறவைத்துக் கழுவி, நிழலில் அரை மணி நேரம் காய வைத்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சலித்துக் கொள்ளவும். அல்லது கடைகளில் கிடைக்கும் அரிசி மாவையும் உபயோகிக்கலாம்.

பயத்தம் பருப்பில் 2 அல்லது 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.  வெந்த பருப்பு ஆறியவுடன் அதில் அரிசி மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையும் தெளித்து, மிருதுவாக  முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். முறுக்கு அச்சில் ஒற்றை கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும். முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.



உருளைக்கிழங்கு தோசை


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி இலை - சிறிது
எண்ணை - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

உருளைக்கிழங்கைக் கழுவி, தோலை சீவி விட்டு, துருவிக்கொள்ளவும். துருவிய உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, மைதா, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரைச் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.  பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி எண்ணை தடவி, கல் சூடானதும், அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி  வட்டமாக பரப்பி விடவும்.  தோசையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு வேக விடவும்.  ஒரு பக்கம் சிவக்க வெந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.

தக்காளி சாஸ் அல்லது கெட்சப் சேர்த்து பரிமாறவும்.

கவனிக்க:  இது சாதாரண தோசையை விட வேக நேரமாகும்.  ஒரு தோசை முருகலாக வேக 3 முதல் 5 நிமிடங்கள் ஆகும்.

பொட்டுக்கடலை வடை


தேவையானப்பொருட்கள்:

பொட்டுக்கடலை - 1/2 கப்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
நறுக்கிய வெங்காயம் - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் 
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
நறுக்கிய கொத்துமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பொட்டுக்கடலை, கசகசா, சோம்பு, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். பொடித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கடலை பாவு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, தேங்காய்த்துருவல், உப்பு ஆகியவற்றை போட்டு கலந்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாகத் தண்ணீரைத் தெளித்து, கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும், எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து வடையாகத் தட்டிப் போடவும். 3 அல்லது 4 வடைகளாகப் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தக்காளி சாஸ் அல்லது கெட்சப் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேற்கண்ட அளவிற்கு  சுமார் 12 வடைகள் கிடைக்கும்.

அச்சு முறுக்கு


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
மைதா - 1/4 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 சிட்டிகை
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.

வாணலியில் எண்ணையை விட்டு காய வைக்கவும்.  எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை (நீளமான கம்பி முனையில் விதவிதமான வடிவத்தில் அச்சு கடைகளில் கிடக்கும்) எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து  எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும்.  அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும்.  உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.

இலேசான இனிப்புடன் கூடிய இந்த முறுக்கு "அச்சப்பம்" என்றும் "ரோஸ் குக்கி" என்றும் அழைக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது பெரும்பாலானோர் வீடுகளில் இதை செய்வார்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...