• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
பொரியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொரியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பீன்ஸ் பால் கறி


தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ் - 200 கிராம்
பால் - 1 கப்
வெங்காயம் - 1
பூண்டு பற்கள் - 10
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பீன்ஸை கழுவி விட்டு, 2 அல்லது 3 அங்குல அளவிற்கு நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் நீள வாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் சோம்பை சேர்க்கவும்.  பின்னர் அத்துடன் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.  பின்னர் பீன்ஸைச் சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும்.  மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.  பின்னர் அதில் பாலைச் சேர்த்துக் கிளறி மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும்.  பால் சுண்டி, காயும் வெந்தவுடன், இறக்கி வைக்கவும்.

இந்த கறி, ஃப்ரைட் ரைஸ், சப்பாத்தி மற்றும் பிரட் டோஸ்ட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கோவக்காய் அவியல்


தேவையானப்பொருட்கள்:

கோவக்காய் - 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
தயிர் - 1/2 கப்
தேங்காய் எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கோவக்காயை கழுவி விட்டு, நீள வாக்கில் 4 அல்லது 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக பிசறி வைக்கவும்.

தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துதெடுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் கோவக்காய் துண்டுகளைப் போட்டு, 2 அல்ல்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதில் ஒரு கை நீரைத் தெளித்துக் கிளறி விட்டு, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும்.  காய் முக்கால் பங்கு வெந்தால் போதும், மூடியைத் த்றந்து, காயின் மேல் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போடவும். (இப்பொழுது கிளற வேண்டாம்).  அப்படியே மூடி வைத்து மேலும் 2 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் மூடியைத் திறந்து, கிளறி விட்டு, அதில் மீதமுள்ள தேங்காய் எண்ணையை ஊற்றி, கறிவேப்பிலையயும் சேர்த்துக் கிளறவும்   கடைசியில், தயிரை நன்றாகக் கடைந்து, காயில் ஊற்றிக் கிளறி, உடனே இறக்கி வைக்கவும்.

புடலங்காய் வறுவல்


தேவையானப்பொருட்கள்:

புடலங்காய் - 1
பொட்டுக்கடலை பொடி அல்லது கடலை மாவு - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - ஓரிரு துளிகள்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

 செய்முறை:

புடலங்காயின் விதை, மற்றும் உள்ளே இருக்கும் வெள்ளையான நாரை நீக்கி விட்டு, நீள வாக்கில், கீழ்கண்ட படத்தில் உள்ளது போல் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  
நீள புடலங்காயானால் ஒன்று போதும், குட்டையான காயானால் 2 உபயோகிக்கவும்.

 நறுக்கிய காயில் சிறிது உப்பைத் தூவி, பிசறி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற விடவும்.  பின்னர் காயை நன்றாகப் பிழிந்து விட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.  அத்துடன் பொட்டுக்கடலை பொடி அல்லது கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், வெள்ளை எள், பெருங்காயத்தூள, கறிவேப்பிலை  (பொடியாக நறுக்கி சேர்க்கவும்), எலுமிச்சம் பழச்சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசறி விடவும்.  அதன் மேல் ஒரு கை தண்ணீரைத் தெளித்து, எல்லா மாவும் காயில் நன்றாக ஒட்டும் படி பிசறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை காய வைத்து, ஒரு கை காயை எடுத்து உதிரியாக எண்ணையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  எல்லாவற்றையும் இப்படியே பொரித்தெடுக்கவும்.

கடைசியில், ஒரு கொத்து கறிவேப்பிலையை எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து, வறுத்து வைத்துள்ள காயின் மேல் தூவினால் போல் போட்டால் பார்க்க நன்றாக இருக்கும்.

சாம்பார் சாதம் / ரசம் சாதம் / கலந்த சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கொத்துமல்லி உருளைக்கிழங்கு வறுவல்


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4
பச்சை கொத்துமல்லி இலை - ஒரு சிறு கட்டு
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

உருளைக்கிழங்கைக் கழுவி, தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீரை விட்டு, அரை வேக்காடாக வேக வைத்தெடுக்கவும். குக்கரில் போட்டு 1 அல்லது 2 விசில் வரை வேக வைத்தும் எடுக்கலாம்.

கொத்துமல்லை இலையை நன்றாக அலசி விட்டு, நறுக்கிக் கொள்ளவும்  ஒரு கப் நறுக்கிய கொத்துமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு சூடானதும் அதில் சீரகத்தை போடவும்.  சீரகம் பொரிய ஆரம்பித்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு சிவக்க வறுக்கவும்.  பின்னர் அதில் கொத்துமல்லி விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.  அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருளைக்கிழங்கும், கொத்துமல்லி விழுதும் நன்றாகக் கலக்கும் வரை வதக்கி அடுக்கவும்.

சாதம் மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

கத்திரிக்காய் வதக்கல்


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 5 அல்லது 6
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கறி பவுடர் - 4 முதல் 5 டீஸ்பூன் வரை

வறுத்து பொடிக்க:

எள் - 3 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக சாறு எடுத்து வைக்கவும்.

வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு "படபட" என்று பொரியும் வரை வறுத்தெடுத்து ஆற விடவும். பின்னர் அத்துடன் வேர்க்கடலையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

கத்திரிக்காயைக் கழுவி, காம்பு பகுதியை அப்படியே விட்டு விட்டு, அடி பாகத்தை மட்டும் நான்காக  கீறிக் கொள்ளவும்.

கீறிய முழு கத்திரிக்காயின் உள்ளே ஒரு டீஸ்பூன் கறி பவுடரை போடவும்.  நான் இதில் "கறிவேப்பிலைப் பொடியை" உபயோகித்துள்ளேன்.  அவரவர் விருப்பத்திற்கேற்றார்போல், இட்லி மிளகாய் பொடி, பொரியல் பொடி போன்ற எந்தவொரு பொடியையும் உபயோகிக்கலாம்.

அடி கனமான ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விடவும்.  எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.  பின்னர் அதில் கத்திரிக்காயைச் சேர்த்து, இலேசாக பிரட்டி விடவும்.  மூடி போட்டு, சிறு தீயில் வைத்து வேக விடவும். கத்திரிக்காய் பாதி வெந்ததும், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விட்டு, புளிச்சாறை சேர்க்கவும்.  தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து, மீண்டும் சில நிமிடங்கள் வேக விடவும். கடைசியில் பொடித்து வைத்துள்ள எள் மற்றும் வேர்க்கடலைப் பொடியைத் தூவி கிளறி விடவும்.  கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும், இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்தி இவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


பேபி கார்ன் வறுவல்


தேவையானப்பொருட்கள்:

பேபி கார்ன் - 200 கிராம்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

4 அல்லது 5 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பேபி கார்னை முழுதாகப் போட்டு, 2 முதல் 3 நிமிடங்கள் வரை வேக விடவும். தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து சற்று ஆறியதும் நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.  வெட்டிய துண்டுகளை ஒரு தட்டில் போட்டு அதன் மேல் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு பிசறி விடவும்.  தேவையானால் சிறிது நீரைத் தெளித்து பிசறவும்.

ஒரு நான் ஸ்டிக் தாவாவை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய விடவும்.  அதில் பிசறி வைத்துள்ள பேபி கார்ன் துண்டுகளைத் தனித்தனியாக வைத்து, மிதமான சூட்டில் வேக விடவும்.  ஒரு பக்கம் சிவந்ததும், ஒவ்வொன்றையும் திருப்பிப் போட்டு சிவக்க வேக விடவும்.  இப்படியே திருப்பி, திருப்பி வேகவிட்டு, நன்கு சிவக்க வறுபட்டதும், எடுத்து வைக்கவும்.

புரோக்கோலி பொரியல்

தேவையானப்பொருட்கள்:

புரோக்கோலி - 1 (பெரிய அளவு)
பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்ப்புன்
பச்சை மிளகாய் - 2
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புரோக்கோலியின் பூவை தனியாக எடுத்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பை மிருதுவாக (குழைய கூடாது) வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 4 அல்லது 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது உப்பைச் சேர்த்து புரோக்கோலி துண்டுகளைப் போட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு, உடனே எடுத்து தனியாக வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, அத்துடன் புரோக்கோலியைப் போடவும்.  ஓரிரு சிட்டிகை உப்பைத் தூவி, மூடி போட்டு, மிதமான தீயில் ஓரிரு வினாடிகள் வேக விடவும்.  பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பை (தண்ணீரில்லாமல் வடித்து, பிழிந்து சேர்க்கவும்) சேர்த்து மீண்டும் சில வினாடிகள்  வதக்கி இறக்கி வைக்கவும்.

குடமிளகாய் வதக்கல்


தேவையானப்பொருட்கள்:

பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற குடமிளகாய்
(நடுத்தர அளவு) - ஒவ்வொன்றும் - 1
பூண்டுப்பற்கள் - 5 அல்லது 6 (சிறிய அளவு)
பச்சை கொத்துமல்லி இலை - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

குடமிளகாயைக் கழுவி, காம்பை நீக்கி விட்டு அரை அங்குல நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு அகலமான் நான் ஸ்டிக் கடாயில் எண்ணை விட்டு சூடானதும் பூண்டைப் போட்டு சில வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் குடமிளகாய்த்துண்டுகளைப் போட்டு மேலும் சில வினாடிகள் வதக்கவும்.  அதன் மேல் கொத்துமல்லி, புதினாவை நறுக்கித் தூவி கிளறி விடவும்  சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, ஓரிரு கை நீரையும் தெளித்துக் கிளறி, நிதானமான தீயில் மூடி வைத்து வேக விடவும். சில வினாடிகள் கழித்து, மூடியைத் திறந்து விட்டு, தண்ணீர் வற்றும் வரை வதக்கி எடுக்கவும்.

சீரக சாதம், புலாவ் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்தியின் உள்ளே வைத்து சுருட்டியும் சாப்பிடலாம். லன்ச் பாக்ஸ்ஸிற்கு ஏற்றது.

கோவைக்காய் கறி


தேவையானப்பொருட்கள்:

கோவைக்காய் - 10
எண்ணை - 3 முதல் 4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
வெங்காயம் - 1
உப்பு - 1 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கோவைக்காயைக் கழுவி விட்டு, நீளவாக்கில் நான்காகக் கீறிக்கொள்ளவும். முழுவதுமாகக் கீறாமல் முக்கால் பாகம் கீறி விட்டு ஒரு முனையை அப்படியே வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு போடவும்.  கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் வெந்தயம், மிளகாய், சீரகம் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுக்கவும்.  பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, இறக்கி வைத்து ஆறவிடவும்.  சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.  தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

அரைத்தெடுத்த விழுதை ஒவ்வொரு கோவைக்காயிலும் கொள்ளுமளவிற்கு அடைக்கவும்.  ஒரு தவாவை அடுப்பிலேற்றி மீதமுள்ள எண்ணையை விட்டு அதில் மசாலா அடைத்து வைத்துள்ள கோவைக்காயை தனித்தனியாக பரப்பி வைக்கவும்.


மூடி போட்டு மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக விடவும்.  மூடியைத் திறந்து காயை திருப்பி விட்டு, ஒரு கை தண்ணீரைத் தெளித்து, மீண்டும் மூடி வைத்து வேக விடவும்.  அவ்வப்பொழுது திருப்பி விட்டு காய் நன்றாக வெந்ததும், மூடியில்லாமல் சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து  வதக்கி எடுக்கவும்.


சாதம், சப்பாத்தி இரண்டிற்குமே தொட்டுக் கொள்ளலாம்.

வெண்டைக்காய் வதக்கல்


தேவையானப்பொருட்கள்:

வெண்டைக்காய் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
எண்ணை (தேங்காய் எண்ணை) - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி, துடைத்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து, பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வதக்கவும்.  பிறகு வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.  காய் பாதி வெந்ததும் அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வதக்கவும்.  பின்னர் அரிசி மாவை அதன் மேல் சிறிது சிறிதாகத் தூவி வதக்கவும்.  காய் நன்றாக வதங்கியதும் இறக்கி வைக்கவும்.

அரிசி மாவு சேர்ப்பதால் காய் கொழகொழப்பில்லாமல் இருக்கும்.


மொச்சைக்கொட்டை வதக்கல்


தேவையானப்பொருட்கள்:

பச்சை மொச்சைக்கொட்டை - 1 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 1
தக்காளி - 1
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து சற்று வதக்கவும். பின் தக்காளியைச் சேர்த்து வதக்கி அத்துடன் பச்சை மொச்சைக்கொட்டை, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடி போட்டு வேக விடவும். அவ்வப்பொழுது கிளறி விட்டு, மொச்சைக்கொட்டை வெந்ததும் அதில் மிளகுத்தூள் மற்றும் கரம் மசாலாத்தூளைத் தூவிக் கிளறி இறக்கி வைக்கவும்.

இதை சாதம் மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.  

குறிப்பு:  இதை காய்ந்த மொச்சைக்கொட்டையிலும் செய்யலாம்.  காய்ந்த மொச்சைக்கொட்டையானால், ஊறவைத்து, பின்னர் ஓரிரு விசில் வரும் வரை குக்கரில் வேக வைத்து உபயோகிக்கவும்.

சேப்பங்கிழங்கு வறுவல்


தேவையானப்பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 5 அல்லது 6
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சோளமாவு - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு தேவையான தண்ணீரைச் சேர்த்து, 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். வேக வைத்த கிழங்கின் தோலை உரித்து விட்டு 1/4" அளவிற்கு வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.  அத்துடன் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசறவும்.  பின்னர் அதில் சோள மாவைத்தூவி பிரட்டி விடவும்.  ஒரு கை தண்ணீரைத் தெளித்து நன்றாகப் பிசறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கிழங்கு துண்டுகளை, எண்ணை கொள்ளுமளவிற்கு தனித்தனியாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  கடைசியில் சிறிது கறிவேப்பிலையையும் எண்ணையில் பொரித்து,  வறுவலின் மேல் தூவி விடவும்.

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கத்திரிக்காய் பிரட்டல்


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 5 முதல் 6 வரை
கடலை மாவு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.   ஒரு வாயகன்ற பாத்திரத்தில், கடலை மாவு, மிளகாய்த்தூள், த்னியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிது, ஆகியவற்றைப் போட்டு கலந்துக் கொள்ளவும். அதில் கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து, ஓரிரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீரையும் விட்டு நன்றாகப் பிசறிக் கொள்ளவும்.   ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு சிவக்க வறுக்கவும்.  பின்னர் அதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (கீறிப் போடவும்) போட்டு சற்று வதக்கி விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.  கடைசியில் பிசறி வைத்திருக்கும் கத்திரிக்காயைப் போட்டு கிளறி விடவும்.  மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும். அவ்வப்பொழுது கிளறி விட்டு காய் வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

வெண்டைக்காய் வதக்கல்


தேவையானப்பொருட்கள்:

வெண்டைக்காய் - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:

வெண்டைக்காயைக் கழுவி, துடைத்து விட்டு 1 அங்குல நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும்.  எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் (கிள்ளி போடவும்) போட்டு ஒரு வினாடி வறுக்கவும்.  பின்னர் அதில் வெண்டைக்காயைப் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்கள் வதக்கவும்.  பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வதக்கி இறக்கி வைக்கவும்.

பாகற்காய் பிரட்டல்


தேவையானப்பொருடகள்:

பாகற்காய் - 2 அல்லது 3
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணை - 2   டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 தேக்கரண்டி அல்லது சுவை படி

செய்முறை:

புளியை சிறிது நீரில் ஊறவைத்து கரைத்து புளிச்சாற்றை எடுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் புளிச்சாறு தேவை.
 
பாகற்காயை கழுவி, முனையை நீக்கி விட்டு, மெல்லிய வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.  வெட்டிய வில்லைகளை கொதிக்கும் நீரில் ஓரிரு நிமிடங்கள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும்.  எடுத்து, ஒரு தட்டில் போடவும்.  அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் பொடி, புளிச்சாறு, வெல்லம், உப்பு போட்டு பிசறி 10 நிமிடங்கள் ஊற விடவும்.
 
ஒரு தோசைக்கல் அல்லது அகலமான தாவாவை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை தடவி சூடாக்கவும்.  அதில் பாகற்காய் வில்லைகளை தனித்தனியாக எடுத்து பரப்பி, அதன் மேலே ஓரிரு டீஸ்பூன் எண்ணை ஊற்றி வேக விடவும்.  ஒரு புறம் நன்றாக சிவந்ததும், எல்லா வில்லைகளையும் ஒவ்வொன்றாகத் திருப்பிப் போட்டு மறு பக்கமும் சிவக்க வேக விடவும்.  இரு பக்கமும் நன்றாக சிவக்கும் வரை வேக விட்டு எடுக்கவும்.

உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் புளிக்கறி


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
கத்திரிக்காய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை

செய்முறை:

புளியை 1/4 கப் தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.  புளித்தண்ணீர் 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை தேவை.

உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி விட்டு, தோலை சீவி, ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கத்திரிக்காயையும் அதே அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உருளை, கத்திரி துண்டுகளைப் போடவும். அத்துடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் உப்பு, புளித்தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசறி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும் கடைசியில் ஊற வைத்துள்ள உருளை, கத்திரிக்காயைச் சேர்த்துக் கிளறி விடவும். அரைக் கப் தண்ணீரை சேர்த்து மீண்ரும் நன்றாகக் கிளறி விடவும்.  மூடி போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து வேக விடவும்.  அவ்வப்பொழுது கிளறி விட்டு,   உருளைக்கிழங்கு வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்தி இரண்டிற்குமே தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

பீட்ரூட் கோஸ் பொரியல்


தேவையானப்பொருட்கள்:

முட்டைகோஸ் - 1 (சிறிய அளவு)
பீட்ரூட் - 1 (சிறிய அளவு)
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீட்ரூட்டின் தோலை நீக்கி விட்டு, 2 அங்குல நீளத்திற்கு மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கொதிக்கும் வென்னீரில் கோஸைப் போட்டு ஓரிரு நிமிங்கள் கொதிக்க விட்டு எடுத்து தனியாக வைக்கவும். பின்னர் பீட்ரூட் துண்டுகளையும் கொதிக்கும் நீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விட்டு எடுத்து வைக்கவும்.
 
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போடவும். கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி, அத்துடன் கோஸ் மற்றும் பீட்ரூட் துண்டுகளைப்பொட்டு சில நிமிடங்கள் வதக்கவும். கடைசியில் உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

இது சீக்கிரமே செய்யக் கூடிய, வெங்காயம், தேங்காய் எதுவும் சேர்க்காத ஒரு எளிமையான் பொரியல்.

பீன்ஸ் வதக்கல்


தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ் - 10 முதல் 15 வரை
தக்காளி பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு பற்கள் - 2 (சிறிய அளவு)
கொரகொரப்பாக பொடித்த மிளகாய் (Chilli flakes) - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பீன்ஸைக் கழுவி, இரு முனைகளையும் கிள்ளி விட்டு, 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய பீன்ஸ் துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு, அத்துடன் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு, எடுத்து குளிர்ந்த நீரில் அலசி வைத்துக் கொள்ளவும்.  இப்படி செய்வதால் காயின் நிறம் மற்றும் சுவை மாறாது.  அதே சமயம் காயும் பாதி வெந்து விடும்.
 
பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் நறுக்கிய பூண்டைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் தண்ணீரை விட்டு வதக்கவும். தண்ணீர் சுண்டியவுடன் பீன்ஸைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.  இப்பொழுது தக்காளியைச் சேர்த்து,  மசியும் வரை வதக்கவும்.  கடைசியில் பொடித்த மிளகாய், உப்பு சேர்த்து மீண்டும் சில வினாடிகள் வதக்கி இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்தியுடன் பரிமாறலாம். பீன்ஸ் சின்னதாக இருந்தால், முனையை மட்டும் கிள்ளி விட்டு முழுதாகவே உபயோகிக்கலாம்.

கவனிக்க: தக்காளிப் பழத்திற்குப் பதில், தக்காளி கெட்சப் அல்லது சாஸ் உபயோகித்தும் செய்யலாம்.


புடலங்காய் மசாலா அடைத்த கறி


இந்த கறியில் வெவ்வேறு விதமான மசாலைக்களை அடைத்து செய்யலாம். உருளைக்கிழங்கு மசாலா அல்லது காய்கறி மசாலா போன்றவற்றையும் சேர்த்து செய்யலாம். சாதாரணமாக இதில் தேங்காய், வெங்காயம் ஆகியவற்றை வதக்கி அடைத்து செய்வார்கள். நான் இதில் பருப்பு உசிலி சேர்த்து செய்துள்ளேன்.

தேவையானப்பொருட்கள்:


நீள புடலங்காய் - 1
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
எண்ணை - 3 to 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பருப்பு உசிலி செய்ய:

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக (மசால் வடைக்கு அரைப்பது போல்) அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும். பின் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

புடலங்காயில் அடைக்க:

இதற்கு நீள வகை புடலங்காய் தேவை. அப்பொழுதுதான் ஒரே மாதிரியான துண்டுகள் போட முடியும்.

புடலங்காயைக் கழுவி, 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூனால், ஒவ்வொரு துண்டுகளின் உள்ளே இருக்கும் விதை மற்றும் நாரை நீக்கி விடவும்.

ஒரு பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரைக் கொதிக்க விடவும். நீர் நன்றாகக் கொதிக்கும் பொழுது அதில் சிறிது உப்பு மற்றும் சில துளி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து, புடலங்காய்த் துண்டுகளைப் போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் கழித்து, புடலங்காய் துண்டுகளை எடுத்து விடவும். சிறிது நேரம் கொதிக்க விட்டால் போதும். காய் அதிகம் வெந்து, நிறம் மாறி விடக்கூடாது.

ஒவ்வொரு துண்டிலும் கொள்ளுமளவிற்கு பருப்பு உசிலியைத் திணித்து வைக்கவும். மீதமிருக்கும் அல்லது சிறிது உசிலியை தனியாக எடுத்து வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை தடவி, சூடானதும், புடலங்காய்த்துண்டுகளை பக்க வாட்டில் அடுக்கவும். சுற்றி 2 அல்லது 3 டீஸ்பூன் எண்ணை விடவும். மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும். மூடியை எடுத்து விட்டு காயை திருப்பி விட்டு வேக விடவும். காய் நிறம் மாற தொடங்கியதும், கல்லிலிருந்து எடுத்து வேறொரு தட்டில் அடுக்கி, அதன் மேலே, தனியாக எடுத்து வைத்துள்ள உசிலியைத் தூவி விடவும்.

காலிஃபிளவர் பொரியல்


தேவையானப்பொருட்கள்:

காலிஃபிளவர் - 1
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

காலிஃபிளவரிலிருந்து, பூக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கவும். இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் காலிஃபிளவர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சில வினாடிகள் கொதிக்க விட்டு, காலிஃபிளவரை எடுத்து தனியாக வைக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்தெடுக்கவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பிலேற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் காலிஃபிளவரைச் சேர்த்து, சிறிது உப்பும் போட்டுக் கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விடவும். நடு, நடுவே மூடியைத் திறந்து கிளறி விடவும். கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி நன்றாகக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, மேலும் ஓரிரு வினாடிகள் கிளறி இறக்கி வைக்கவும்.

கவனிக்க: இதை மைக்ரோ அவனிலும் செய்யலாம். மேற்கூறியவாறு பொடி செய்து கொள்ளவும். மைக்ரோவேவ் பாத்திரத்தில் காலிஃபிளவரைப் போட்டு அத்துடன் சிறிது எண்ணை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசறி விட்டு, அவனில் வைத்து 4 அல்லது 5 நிமிடங்கள் வேக விடவும். நிமிடத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்துக் கிளறி விடவும். கடைசியில் பொடியைத் தூவி மேலும் 2 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்தால், சுவையான பொரியல் தயார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...