- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
இனிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜவ்வரிசி பருப்பு பாயசம்
தேவையானப்பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 1/2 கப்
ஜவ்வரிசி - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
பால் - 1/2 கப்
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஜவ்வரிசியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு வெறும் வாணலியில் பயத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
வறுத்த பருப்பை குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும்.
வெல்லத்தில் அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
குக்கரைத் திறந்து, வெந்த பருப்பை நன்றாக மசித்துக் கொள்ளவும். திரும்பவும் குக்கரை அடுப்பிலேற்றி, தீயைக் குறைத்து வைத்துக் கொண்டு, வெந்த ஜவ்வரிசியைப் பருப்போடு சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில் வெல்லப்பாகை விட்டு நன்றாகக் கலக்கவும். பாயசத்தை சில நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியில் பாலை ஊற்றிக் கிளறவும். பாயசம் கெட்டியாக இருந்தால் தேவையான அளவு வென்னீர் அல்லது பாலை சேர்த்துக் கிளறி விடவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து பாயசத்துடன் சேர்க்கவும். ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
பறங்கிக்காய் வெல்ல அல்வா
தேவையானப்பொருட்கள்:
பறங்கிக்காய் துருவல் - 2 கப் (அழுத்தி அளக்கவும்)
வெல்லம் பொடித்தது - 3/4 கப்
பால் - 3/4 கப்
நெய் - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
முந்திரி பருப்பு - சிறிது
பறங்கி விதை - சிறிது (விருப்பப்பட்டால்)
காய்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி அளவு
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பெரிய அளவு பறங்கிக்காய் துண்டை எடுத்து, தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சன்னமாகத் துருவிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு துருவலை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் பறங்கிக்காய் துருவலைப் போட்டு வதக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்கிய பின் பாலைச் சேர்த்துக் கிளறவும். மூடி போட்டு வேக விடவும். பால் அனைத்தையும் இழுத்துக் கொண்டு காய் வெந்ததும், வெல்லத்தூளைப் போட்டு கிளறவும். வெல்லம் நன்றாகக் கலந்து, அல்வா கெட்டியானவுடன் (10 முதல் 15 நிமிடங்கள் ஆகும்) மீதமுள்ள நெய்யை விட்டு கிளறவும். கடைசியில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். பறங்கி விதையை தூவி பரிமாறவும்.
குறிப்பு: இனிப்பு அதிகம் தேவையென்றால் ஒரு கப் வெல்லம் சேர்க்கவும். நெய்யும் சற்று கூடுதலாகச் சேர்த்தால் அல்வா மிகவும் சுவையாக இருக்கும்.
அவல் கேசரி
தேவையானப்பொருட்கள்:
அவல் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - சிறிது
உலர்ந்த திராட்சை - சிறிது
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு வாணலியில் அவலைப் போட்டு, தொட்டால் சுடும் வரை வறுத்தெடுத்து, ஆறியபின் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரி பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அவல் பொடியை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும். மிதமான தீயில், நீர் அனைத்தையும் அவல் இழுத்துக் கொண்டு மிருதுவாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். கேசரி பவுடரையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். கடைசியில் நெய், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் அனைத்தையும் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டிலோ, கிண்ணத்திலோ மாற்றி வைக்கவும்.
கோதுமை கேரட் அல்வா
கோதுமை மாவு - 1/2 கப்
கேரட் (நடுத்தர அளவு) - 2
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
செய்முறை:
கேரட்டை கழுவி, தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய கேரட் துண்டுகளை சிறிது நீர் சேர்த்து வேக விட்டு, சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் நெய்யை விட்டு, அதில் கோதுமை மாவை போட்டு, மிதமான தீயில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் அத்துடன் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சர்க்கரையையும் சேர்த்து கை விடாமல் கிளறவும். சர்க்கரை நன்றாகக் கலந்து, அல்வா கெட்டியாக பந்து போல் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, ஏலக்காய் தூளைச் சேர்த்துக் கிளறி, தேவைப்பட்டால், மேலும் சிறிது நெய்யையும் ஊற்றிக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திலோ, தட்டிலோ கொட்டிப் பரப்பி விடவும். முந்திரியை சிறிய துண்டுகளாக்கி, அல்வாவின் மேல் தூவி விடவும்.
கவனிக்க: இனிப்பு அதிகம் தேவையென்றால், சர்க்கரையின் அளவை சிறிது கூட்டிக் கொள்ளவும்.
கும்மாயம்
"கும்மாயம்" அல்லது "ஆடி கும்மாயம்" என்று அழைக்கப்படும் இந்த பலகாரம், வெவ்வேறு வகை பருப்பு மற்றும் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் ஒரு இனிப்பாகும். இதை ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாயன்று செய்து கடவுளுக்கு பிரசாதமாகப் படைப்பார்கள்.
தேவையானப்பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 4 டேபிள்ஸ்பூன்
வெல்லம் பொடித்தது - 2 கப்
நெய் - 1/4 கப்
தண்ணீர் - 6 கப்
செய்முறை:
வெறும் வாணலியில் பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி ஆகியவற்றை தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, சலித்துக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு 2 கப் மாவு கிடைக்கும். இதை "கும்மாயப் பொடி" அல்லது "கும்மாய மாவு" என்று சொல்வார்கள்.
ஒரு வாணலியில் பாதி அளவு நெய்யை விட்டு, அதில் கும்மாயப் பொடியைச் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். இன்னொரு அடுப்பில் வெல்லத்தையும், தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
வறுத்த மாவில், வெல்ல நீரை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளறவும். மாவு கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறி, இறக்கி, நெய் தடவிய ஒரு டிரே அல்லது தட்டில் கொட்டி ஆற விடவும்.
அப்படியேவும் பரிமாறலாம். அல்லது துண்டுகளாகியும் கொடுக்கலாம்.
கல்கண்டு பொங்கல்
தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
கல்கண்டு - 1 கப்
பால் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நெய் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
செய்முறை:
அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு, அத்துடன் பால், தண்ணீர் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
குக்கரில் ஆவி குறைந்ததும், மூடியைத் திறந்து, வெந்த அரிசியை நன்றாக மசித்து விடவும். அதில் கல்கண்டைச் சேர்த்து (கல்கண்டு சிறிதாக இருந்தால் அப்படியே சேர்க்கலாம். பெரிதாக இருந்தல் பொடித்து சேர்க்கவும்), மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கிளறி விடவும். கல்கண்டு கரைந்து சாதத்துடன் நன்றாகக் கலந்ததும், நெய்யை சேர்த்துக் கிளறி விடவும்.
முந்திரி, திராட்சை இரண்டையும் சிறிது நெய்யில் வறுத்து பொங்கலில் சேர்க்கவும். கடைசியில் ஏலக்காய் தூளைத் தூவி, நன்றாகக் கலந்து இறக்கி வைக்கவும்.
கவனிக்க: இனிப்பு குறைவாக வேண்டுமெனில், 3/4 கப் கல்கண்டு சேர்த்தால் போதுமானது.
கோதுமை ரவா இனிப்பு பொங்கல்
தேவையானப்பொருட்கள்:
கோதுமை ரவா - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - ஒன்றரை அல்லது 2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில், கோதுமை ரவா, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
வறுத்த ரவா, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். குக்கரை திறந்து, வெந்த ரவா மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வெல்ல பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
கோதுமை ரவா - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - ஒன்றரை அல்லது 2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில், கோதுமை ரவா, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
வறுத்த ரவா, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். குக்கரை திறந்து, வெந்த ரவா மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வெல்ல பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
கேரட் ஜவ்வரிசி பாயசம்
தேவையானப்பொருட்கள்:
கேரட் (பெரியது) - 1
ஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன்
பால் - 1/2 லிட்டர் (2 பெரிய டம்ளர்)
சர்க்கரை - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - 15
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஜவ்வரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
10 முந்திரி பருப்பை சிறிது பாலில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
கேரட்டைக் கழுவி, தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரைச் சேர்த்து வேக வைத்தெடுக்கவும்.
ஊறிய ஜவ்வரிசியைக் கழுவி, நீரை வடிகட்டி விட்டு, 1 அல்லது 2 கப் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். ஜவ்வரிசி மினுமினுப்பாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
ஒரு மிக்ஸியில், வெந்த கேரட்டையும் , ஊற வைத்துள்ள முந்திரியையும், ஊற வைத்த பாலுடன் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, கேரட் விழுது, வெந்த ஜவ்வரிசி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். சர்க்கரையையும் சேர்த்துக் கலந்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
மீதமுள்ள முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். கடைசியில் ஏலக்காய்த்தூளைத் தூவிக் கலந்து, இறக்கி வைக்கவும்.
சூடாகவோ அல்லது குளிர வைத்தோ சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு பாயசம்
தேவையானப்பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர் (2 பெரிய டம்ளர்)
உருளைக்கிழங்கு - 1
பயத்தம் பருப்பு - 1/2 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
நெய் - 1 அல்லது 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
காய்ந்த திராTசை - சிறிது
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வெல்லப்பாகை தனியாக எடுத்து வைக்கவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைக்கவும்.
இன்னொரு அடுப்பில், வாணலியை வைத்து பயத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். வறுத்த பருப்பை ஒரு குக்கரில் போட்டு, அதிலேயே உருளைக்கிழங்கையும் கழுவி, இரண்டாக வெட்டிப் போடவும். 2 கப் தண்ணீரைச் சேர்த்து மூடி போட்டு, 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டெடுக்கவும். குக்கர் ஆறியபின், மூடியைத் திறந்து உருளைக் கிழங்கை தனியாக எடுத்து, தோலுரித்து விட்டு, மசித்துக் கொள்ளவும். வெந்த பருப்பையும் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு, சிறிது பாலை விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
மசித்த பருப்பு, அரைத்த உருளைக்கிழங்கு விழுது ஆகியவற்றை ஒவ்வொன்றாக அடுப்பிலிருக்கும் பாலில் சேர்த்துக் கிளறி விடவும். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொதிக்க ஆரம்பித்ததும், வெல்லப்பாகை விட்டு கிளறி விடவும். மீண்டும் ஒரு கொதி வநததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அத்துடன் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூளையும் தூவிக் கலந்து பரிமாறவும்.
இதை சூடாகவும் சாப்பிடலாம் அல்லது குளிர வைத்தும் சாப்பிடலாம்.
சேமியா அல்வா
தேவையானப்பொருட்கள்:
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1 கப்
நெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய முந்திரி/பாதாம்/பிஸ்தா - அலங்கரிக்க (விருப்பப்பட்டால்)
செய்முறை:
ஒரு வெறும் வாணலியில் சேமியாவைப் போட்டு சற்று சிவக்கும் வரை (அல்லது தொட்டால் கை சுடும் வரை) வறுத்து எடுத்து ஆற விடவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் சேமியாவிற்கு 1/2 கப் பொடி கிடைக்கும்.
அடி கனமான வாணலியில் பால், சர்க்கரை, சேமியா பொடி ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும். பின்னர் அதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அதில் கேசரி பவுடரைச் சேர்த்துக் கிளறி விடவும். கடைசியில் நெய்யைச் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறவும். முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் வறுத்து அல்வாவில் சேர்க்கவும். ஏலக்காய்த் தூளையும் சேர்த்து கிளறி, ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி பரப்பி விடவும். பொடியாக நறுக்கிய பருப்புகளை அதன் மேல் தூவி விடவும்.
திருவாதிரை களி

திருவாதிரை களி, முன்பெல்லாம் வெங்கல உருளியில் வெல்லத்தைக் கொதிக்க விட்டு, அதில் வறுத்து பொடித்த அரிசி மாவைக் கொட்டிக் கிளறி செய்யப்படும். இப்பொழுதெல்லாம் பிரஷர் குக்கரில் செய்கிறார்கள். கீழ்காணும் இன்னொரு முறையில் செய்து பாருங்கள். மிருதுவான, சுவை மிக்க களி தயார்.
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
வெல்லம் பொடித்தது - ஒன்றரைக் கப்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
ஏலக்காய் - 5
முந்திரிப்பருப்பு - சிறிது
நெய் - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசியைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியபின், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை அடி கனமான ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 2 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க விட்டு ஊற்றவும். பாத்திரத்தை மூடி வைத்து, அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
இதற்கிடையில், ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயையும் பொடித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 1/4 அல்லது 1/2 கப் (வெல்லம் மூழ்கும் அளவிற்கு) தண்ணீரை விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, அரிசி மாவில் ஊற்றவும். நன்றாகக் கிளறி விட்டு, அடுப்பிலேற்றி, மிதமான தீயில் வைத்து வெல்லமும், மாவும் நன்றாகக் கலக்கும் வரைக் கிளறி விடவும். அத்துடன் தேங்காய் துருவல், வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
குறிப்பு: அதிக இனிப்பு தேவையென்றால் 2 கப் அளவிற்கு வெல்லம் சேர்க்கலாம். மேலும் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் பயத்தம் பருப்பையும் வறுத்து, அரிசியுடன் சேர்த்து அரைக்கலாம்.
இந்த களியுடன் தாளகம் அல்லது எழுகறி கூட்டு என்றழைக்கப்படும் காய்கறி கூட்டை சேர்த்து பரிமாறவும்.
அச்சு முறுக்கு
தேவையானப்பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
மைதா - 1/4 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 சிட்டிகை
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணையை விட்டு காய வைக்கவும். எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை (நீளமான கம்பி முனையில் விதவிதமான வடிவத்தில் அச்சு கடைகளில் கிடக்கும்) எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும். உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.
இலேசான இனிப்புடன் கூடிய இந்த முறுக்கு "அச்சப்பம்" என்றும் "ரோஸ் குக்கி" என்றும் அழைக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது பெரும்பாலானோர் வீடுகளில் இதை செய்வார்கள்.
அரிசி பாயசம்
தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி விட்டு, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி, அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சற்று கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அதில் வெல்ல நீரை விட்டு, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும். பாயசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் பொடியாக நறுக்கிய தேங்கயை போட்டு சிவக்க வறுத்து பாயசத்தில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
கோதுமை மாவு லட்டு
தேவையானப்பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
பொடித்த சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
முந்திரிப்பருப்பு - சிறிது
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் 1/2 கப் நெய்யை விட்டு சூடானதும் அதில் கோதுமை மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். அடுப்பை அணைத்து விடவும்.
வறுத்த கோதுமை மாவு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி, கலந்து வைத்துள்ள மாவின் மேல் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறி விடவும். பின்னர் எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
எள்ளு உருண்டை
தேவையானப்பொருட்கள்:
எள் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு, நன்றாக வெடித்து பொரியும் வரை வறுத்து எடுத்து ஆற விடவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு 2 அல்லது 3 சுற்றுகள் வரை அரைக்கவும். அத்துடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மீண்டும் சில வினாடிகள் ஓட விடவும். கடைசியில் ஏலக்காய்த்தூளையும் சேர்த்து 1 அல்லது 2 சுற்றுகள் சுற்றி எடுக்கவும். சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டைகளாக பிடிக்கவும்.
பொரித்த மோதகம்
பூரண கொழுக்கட்டை அல்லது மோதகம் என்றழைக்கப்படும் கொழுக்கட்டையை அரிசி மாவில் செய்து ஆவியில் வேக வைப்பார்கள். ஆனால் கணபதி ஹோமம் போன்ற விசேஷங்களுக்கு, மைதா அல்லது கோதுமை மாவில் கொழுக்கட்டை செய்து எண்ணையில் பொரித்தெடுப்பார்கள். வட இந்தியாவில் "பொரித்த மோதகம்" மிகவும் பிரபலமான ஒரு பிரசாதம்.
தேவையானப்பொருட்கள்:
மேல் மாவிற்கு:
மைதா - 1 கப் (குவித்து அளக்கவும்)
நெய் அல்லது எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - ஓரிரு சிட்டிகை
பூரணத்திற்கு:
தேங்காய்த்துருவல் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
மைதாவை நன்றாக சலித்து விட்டு, அத்துடன் உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணை விட்டு கலந்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
வெல்லத்தில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.
ஒரு பெரிய நெல்லிக்காயளவு மாவை எடுத்து, மெல்லிய பூரியாக இட்டு, அதன் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பூரணத்தை வைத்து, எல்லா மூலைகளயும் சேர்த்து, மேல் பாகத்தை நன்றாக அழுத்தி விட்டு மோதகம் செய்து கொள்ளவும். எல்லா மாவையும் இப்படியே செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், 4 அல்லது 5 மோதகங்களை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இதை மைதா மாவிற்குப் பதில் கோதுமை மாவை உபயோகித்தும் செய்யலாம்.
சத்து மாவு பர்பி
தேவையானப்பொருட்கள்:
சத்து மாவு - 2 கப்
பால் பவுடர் - 1 கப்
சர்க்கரை - 1 - 1/2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஓரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் சத்து மாவைப் போட்டு மிதமான தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வரை வறுத்தெடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அத்துடன் பால் பவுடரைச் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் சர்க்கரையைப்போட்டு அத்துடன் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரைக் கொதித்து மேலே குமிழ் வரத்தொடங்கியதும், அடுப்பை தணித்து சிறு தீயில் வைத்து, மாவைக் கொட்டிக் கிளறவும். மாவு கெட்டியாக ஆரம்பித்ததும் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சற்று ஆறியதும் வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.
குறிப்பு: நான் "மன்னா சத்து மாவு" உபயோகித்து இதை செய்தேன். அதிலேயே ஏலக்காய் சேர்த்திருப்பதால், நான் தனியாக வாசனை எதுவும் சேர்க்கவில்லை. விருப்பப்பட்டால் மேலும் சிறிது ஏலக்காய் தூள் அல்லது வெனிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கலாம். முந்திரி, பிஸ்தா போன்றவற்றையும் சேர்க்கலாம்.
மாம்பழ பர்ஃபி
தேவையானப்பொருட்கள்:
நன்கு கனிந்த மாம்பழம் (நடுத்தர அளவு) - 1
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் பவுடர் - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
நெய் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
மாம்பழத்தின் தோலை சீவி விட்டு, துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். ஒரு நடுத்தர அளவு மாம்பழத்திற்கு ஒரு கப் விழுது கிடைக்கும்.
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அதில் கடலை மாவைப் போட்டு வாசனை வர வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மாம்பழ விழுது, சர்க்கரை இரண்டையும் போட்டு, சற்று கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டிருக்கவும்.
விழுது சற்று கெட்டியானவுடன், அதில் வறுத்து வைத்துள்ளக் கடலை மாவையும், ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் சேர்ந்து வரும் வரைக் கிளறவும்.
கடைசியில் பால் பவுடர், முந்திரிப்பருப்பு (பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்), ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி விட்டு ஆற விடவும்.
நன்றாக ஆறியதும் (தட்டின் அடிபாகத்தைத் தொட்டால் சூடு இருக்கக் கூடாது) வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.
பின் குறிப்பு: பர்ஃபி செட் ஆவதற்கு குறைந்தது 2 மணி நேரம் பிடிக்கும். ஆனால் சென்னையிலுள்ள இன்றைய வெப்பத்திற்கு (110 டிகிரி) 2 மணி நேரத்திற்கு மேலும் சூடாகவே இருந்தது. அதனால், பர்ஃபி சற்று ஆறியவுடன், ரெபிரிஜ்ரேட்டரில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து, துண்டுகள் போட்டேன்.
ஓட்ஸ் குல்ஃபி
தேவையானப்பொருட்கள்:
ஓட்ஸ் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பால் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
காய்ச்சி ஆறிய பால் - 2 கப்
செய்முறை:
மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கி, அடுப்பில் வைத்து 2 அல்லது 3 நிமிடங்கள் வரை கை விடாமல் கிளறி, இறக்கி ஆற விடவும்.
ஆறியதும் குல்ஃபி அச்சில் ஊற்றி, ஃபிரீசரில் வைத்து 3 முதல் 4 மணி நேரம் உறைய விடவும்.
குல்ஃபி அச்சு இல்லெயென்றால், ஒரு சிறி அலுமினிய டிரேயில் ஊற்றி, மேலே அலுமினிய காகிதத்தால் மூடி உறைய விடலாம். அதுவும் இல்லையென்றால், ஒரு சிறிய டிபன் பாக்ஸில் ஊற்றி மூடி வைத்து செய்யலாம்.
பரிமாறு முன், குல்ஃபி அச்சை வெளியே எடுத்து, குழாய் தண்ணீரில் காட்டி விட்டு, மூடியைத் திறந்து ஒரு கத்தியால் சற்று நெம்பி விட்டால், எளிதாக குல்ஃபி அச்சிலிருந்து வந்து விடும்.
பின்குறிப்பு:
1. நன்கு காய்ச்சி ஆறிய பாலை உபயோகப்படுத்தவும்.
2. குயிக் குக்கிங் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு, பொடித்து அந்த பொடியை சேர்க்கவும். பதப்படுத்தாத முழு ஓட்ஸ் என்றால், வெறும் வாணலியில் போட்டு சற்று வறுத்து விட்டு பொடிக்கவும்.
3. நான் MTR பாதாம் பீஸ்ட் பவுடரை இதில் சேர்த்துள்ளேன். அதிலேயே, பாதாம், பால் பவுடர், ஏலக்காய், குங்குமப்பூ எல்லாம் சேர்ந்திருப்பதால், தனியாக வேறு எதையும் சேர்க்கவில்லை. எந்த பிராண்ட் பாதாம் டிரிங்க் பவுடரையும் உபயோகிக்கலாம். இல்லையென்றால், சாதாரண பால் பவுடரைச் சேர்த்து, வாசனைப் பொருட்களையும் தனியாகச் சேர்த்து செய்யலாம்.
4. எளிதாக செய்ய வேண்டுமெனில், கடைகளில் ரெடிமேடாக "குல்ஃபி மிக்ஸ்" கிடைக்கிறது. அதை உபயோகித்தும் செய்யலாம்.
பலாப்பழ அல்வா மற்றும் பாயசம்
இது பலாப்பழ சீசன். இப்பொழுது கிடைக்கும் பழத்தை உபயோகித்து, பலாப்பழ விழுதை செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் பொழுது, "இனிப்பு இலை அடை", "கொழுக்கட்டை", "பாயசம்" என்று விதவிதமாக சமைக்கலாம். பெரும் அளவில் செய்ய முடியாவிட்டால், தேவைக்கேற்ற பலாச்சுளைகளை வாங்கி சிறு அளவில் செய்யலாம்.
பலாப்பழ விழுது
தேவையானப்பொருட்கள்:
பலாச்சுளை - 10 முதல் 15 வரை
பொடித்த வெல்லம் - 1 கப்
சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை
செய்முறை:
பலாச்சுளையிலிருந்து, கொட்டையை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் 1/4 தண்ணீர் சேர்த்து, பிரஷ்ஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். இதை மைக்ரோவேவ் அவனிலும் அல்லது திறநத பாத்திரத்திலும் வேக வைத்தெடுக்கலாம். வெந்தப் பலாச்சுளை சற்று ஆறியதும், மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
விழுது எவ்வளவு இருக்கிறதோ அதற்கு சம அளவிற்கு வெல்லம் சேர்க்க வேண்டும். மேற்கூறிய அளவிற்கு ஒரு கப் வரை விழுது கிடைக்கும். எனவே ஒரு கப் பொடித்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து வடிகட்டவும். வடிகட்டிய வெல்லப்பாகை ஒரு அடி கனமான் வாணலியில் விட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதையும் சேர்த்து, அடுப்பிலேற்றி, மிதமான தீயில் கிளறவும். பாகும், விழுதும் நன்றாகச் சேர்ந்து, கெட்டியாக சுருண்டு வரும் வரைக் கிளறி, சுக்குப்பொடியைத் தூவி மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
பலாப்பழ அல்வா
அல்வா செய்ய வேண்டுமென்றால், மேற்கண்ட முறையில் விழுது தயாரித்து, சுக்குப் பொடிக்குப் பதில் சிறிது ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரிப்பருப்பு, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
பலாப்பழ பாயசம்
பாயசம் செய்ய மேற்கண்ட முறையில் விழுது தயாரித்து, கடைசியில் ஒரு கப் தேங்காய்பாலைச் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த சிறிதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள், முந்திரி, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். தேங்காய்பாலிற்குப்பதில் சாதாரண பாலையும் சேர்க்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)