- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
திருவாதிரை களி
திருவாதிரை களி, முன்பெல்லாம் வெங்கல உருளியில் வெல்லத்தைக் கொதிக்க விட்டு, அதில் வறுத்து பொடித்த அரிசி மாவைக் கொட்டிக் கிளறி செய்யப்படும். இப்பொழுதெல்லாம் பிரஷர் குக்கரில் செய்கிறார்கள். கீழ்காணும் இன்னொரு முறையில் செய்து பாருங்கள். மிருதுவான, சுவை மிக்க களி தயார்.
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
வெல்லம் பொடித்தது - ஒன்றரைக் கப்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
ஏலக்காய் - 5
முந்திரிப்பருப்பு - சிறிது
நெய் - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசியைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியபின், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை அடி கனமான ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 2 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க விட்டு ஊற்றவும். பாத்திரத்தை மூடி வைத்து, அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
இதற்கிடையில், ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயையும் பொடித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 1/4 அல்லது 1/2 கப் (வெல்லம் மூழ்கும் அளவிற்கு) தண்ணீரை விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, அரிசி மாவில் ஊற்றவும். நன்றாகக் கிளறி விட்டு, அடுப்பிலேற்றி, மிதமான தீயில் வைத்து வெல்லமும், மாவும் நன்றாகக் கலக்கும் வரைக் கிளறி விடவும். அத்துடன் தேங்காய் துருவல், வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
குறிப்பு: அதிக இனிப்பு தேவையென்றால் 2 கப் அளவிற்கு வெல்லம் சேர்க்கலாம். மேலும் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் பயத்தம் பருப்பையும் வறுத்து, அரிசியுடன் சேர்த்து அரைக்கலாம்.
இந்த களியுடன் தாளகம் அல்லது எழுகறி கூட்டு என்றழைக்கப்படும் காய்கறி கூட்டை சேர்த்து பரிமாறவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
மிகவும் நல்லா இருக்கு......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
கருத்துரையிடுக