தேவையானப்பொருட்கள்:
சுரைக்காய் - 1
தயிர் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - 5 அல்லது 6
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
சுரைக்காயின் தோலை சீவிவிட்டு, உள்ளிருக்கும் விதை மற்றும் வெள்ளைப் பகுதியை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தயிரை நன்றாகக் கடைந்து, அத்துடன் சிறிது நீரைச் சேர்த்து கெட்டி மோராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுரைக்காய் துண்டுகளைப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, காய் மூழ்கும் அளவிற்கு சிறிது நீர் சேர்த்து வேக விடவும். காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு கலந்து ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை சிறு தீயில் வைத்து, மோரைச் சேர்த்துக் கிளறி விட்டு, உடனே அடுப்பை அணைத்து விடவும். நீண்ட நேரம் கொதிக்க விடக் கூடாது.
ஒரு வாணலியில் அல்லது தாளிக்கும் கரண்டியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, சற்றுக் கிளறி விட்டு, இந்த தாளிப்பை கூட்டில் கொட்டிக் கிளறவும்.
இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது மற்ற சாத வகைகளுடன் தொட்டுக் கொள்ளவும் செய்யலாம்.
- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
கூட்டு / குருமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்டு / குருமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாங்காய் பருப்பு
இது ஒரு ஆந்திர சிறப்பு உணவு. மாங்காய், பருப்பு இரண்டையும் ஒன்றாக வேக வைத்து தாளிப்பார்கள். மாங்காயைத் தோலுடனோ அல்லது தோலை சீவி விட்டோ அவரவர் சுவைக்கேற்ப சமைப்பார்கள்.
நான் மாங்காயை தோலுடன் தனியாக வேக வைத்து செய்துள்ளேன்.
தேவையானப்பொருட்கள்:
மாங்காய் (நடுத்தர அளவு ) - 1
துவரம் பருப்பு - 1 சிறிய கப்
எண்ணை - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2 (இலேசாக கீறிக் கொள்ளவும்)
பூண்டு பற்கள் (சிறிய அளவு) - 5
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவி, குக்கரில் போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணை, மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் தண்ணீரை விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
மாங்காயைக் கழுவி விட்டு தோலுடன் நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாங்காய் துண்டுகளைப் போட்டு அத்துடன் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் பொடி, சிறிது உப்பு சேர்த்து, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு வேக விடவும்.
காய் நன்றாக வெந்ததும், இறக்கி வைத்து இலேசாக மசித்துக் கொள்ளவும். அத்துடன் வெந்த பருப்பையும் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையுன் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு (சற்று நசுக்கி போடவும்) சேர்த்து வதக்கி, கொதிக்கும் பருப்புல் கொட்டி கிளறி, இறக்கி வைக்கவும்.
இந்த பருப்பை சூடான சாதத்துடன், சிறிது நெய் அல்லது நல்லெண்ணை சேர்த்து பிசைந்து, பொரித்த அப்பளம் அல்லது ஜவ்வரிசி வடவத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
பறங்கிக்காய் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
பறங்கிக்காய் - 1 துண்டு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4 கப்
சிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
பறங்கிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, மிதமான தீயில் வேக விடவும்.
இதற்கிடையில், தேங்காய், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சற்று கொரகொரப்பாக அரைத்தெடுத்து, வெந்தக் காயில் கொட்டிக் கிளறி விடவும். ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.
அவசரக்கூட்டு
தேவையானப்பொருட்கள்:
வீட்டிலிருக்கும் ஒன்றிரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட காய்கள் நறுக்கியது - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ஒரு குக்கரில், நறுக்கிய காய்கறி துண்டுகள், பயத்தம் பருப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப்போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுத்து, கரண்டியால் சற்று மசித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடியைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுக்கவும். (கருகி விடக் கூடாது). பின்னர் அதில் வேக வைத்துள்ளக் காயைக் கொட்டிக் கிளறி விட்டு, கடைசியில் உப்புச் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
பின்குறிப்பு: தாளிக்கும் பொழுது சாம்பார் பொடி சேர்ப்பதால் கூட்டு மணமாக இருக்கும். வீட்டிலுள்ள எந்த விதமானக் காய்களையும் உபயோகிக்கலாம். நான் இதில் அவரைக்காய், ஒரு சிறிய கத்திரிக்காய், ஒரு சிறிய உருளைக்குழங்கு (தோலுடன்) சேர்த்துள்ளேன்.
எரிசேரி
கேரளத்தில் "எரிசேரி" என்றழைக்கப்படும் இந்த கறி, தமிழகத்தின் "கூட்டு" போன்றதுதான். இதில் வாழைக்காய், சேனை, பலாக்காய், பூசணிக்காய், காராமணி பயறு போன்றவற்றைச் சேர்த்து செய்வார்கள். நான் வாழைக்காய், சேனை, காராமணி சேர்த்து செய்துள்ளேன்.
தேவையானப்பொருட்கள்:
வாழைக்காய் - பாதி
சேனைக்கிழங்கு - ஒரு நடுத்தர அளவு துண்டு
காராமணி பயறு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
அரைத்தெடுக்க:
தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
கராமணி பயறை 4 முதல் 5 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) ஊறவைத்து, கழுவி விட்டு, ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து குக்கரில் 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.
தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாழைக்காய், சேனை ஆகியவற்றைக் கழுவி, தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாழைக்காய் மற்றும் சேனை துண்டுகள் இரண்டும் சம அளவிற்கு இருக்க வேண்டும். பாதி வாழைக்காய்க்கு ஒரு கப் துண்டுகள் கிடைக்கும். அதே அளவிற்கு (1 கப்) சேனைத் துண்டுகளையும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் மஞ்சள் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். காய் மிருதுவாக வெந்ததும், கரண்டியின் பின்புறத்தால் சற்று மசித்து விட்டு, அத்துடன் வேக வைத்துள்ள காராமணி, மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்கவும்.
பின்னர் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டிக் கலந்து விடவும்.
1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலை, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணையில் பொன்னிறமாக வறுத்து, அதன் மேல் தூவி விடவும்.
சூடான சாதத்துடன் சேர்த்து, பொரித்த அப்பளத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
சுண்டைக்காய் கூட்டு

தேவையானப்பொருட்கள்:
சுண்டைக்காய் - 2 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைத்தெடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில், சுண்டைக்காயைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அத்துடன், காய் மூழ்கும் அளவிற்கு தேவையான நீரைச் சேர்த்து வேக விடவும். காய் வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இதற்கிடையில், தேங்காய்த்துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மைய அரைத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.
கூட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.
அவரைக்காய் கூட்டு

தேவையானப்பொருட்கள்:
அவரைக்காய் - 10 முதல் 15 வரை
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
அவரைக்காயை நன்றாகக் கழுவி, காம்பு மற்றும் அதன் மேலுள்ள நாரை நீக்கி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைத்தெடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில், அவரைக்காயைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அத்துடன், காய் மூழ்கும் அளவிற்கு தேவையான நீரைச் சேர்த்து வேக விடவும். காய் வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இதற்கிடையில், தேங்காய்த்துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மைய அரைத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.
கூட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.
காய்கறி கடலைக் கறி

தேவையானப்பொருட்கள்:
பீன்ஸ் - 8 முதல் 10 வரை
கேரட் - 1
காலிஃபிளவ்ர் - பாதி
கொண்டைக்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டெஅச்போன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
கொண்டைக்கடலையை 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
காய்கறிகளைக் கழுவி விட்டு, 1" அளவிற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். காலிஃபிளவரையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊறவைத்துள்ளக் கடலையை குக்கரில் போட்டு, தேவையான நீரை ஊற்றி 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.
தேங்காய்த்துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, பாலை பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளியை சேர்க்கவும். அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், காய்கறிகளைச் சேர்த்துக் கிளறி விடவும். அத்துடன் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்துள்ளக் கடலையைச் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். நன்றாகக் கொதி வந்ததும், தேங்காய்ப் பாலைச் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.
புலாவ் மற்றும் சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
காய்கறி கூட்டு

தேவையானப்பொருட்கள்:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1
பறங்கிக்காய் - ஒரு சிறு துண்டு
அவரைக்காய் - 5 அல்லது 6
உருளைக்கிழங்கு - 1
சேனைக்கிழங்கு - ஒரு சிறு துண்டு
வாழைக்காய் - பாதி
பச்சை மொச்சைக் கொட்டை - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வறுத்தரைக்க:
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
தனியா - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
புளியை ஊற வைத்து, சாற்றைப் பிழிந்தெடுத்து கொள்ளவும்.
துவரம் பருப்பை குக்கரில் போட்டு வேக வைத்தெடுக்கவும்.
காய்கறிகளை நன்றாகக் கழுவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். காய்கறி துண்டுகள், பச்சை மொச்சைக் கொட்டை ஆகியவற்றை, ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து, காய்கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வேக விடவும்.
இதற்கிடையே, வறுக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணையில் வறுத்தெடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
காய்கறிகள் வெந்தவுடன் புளிச்சாற்றை ஊற்றி கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன், வேக வைத்துள்ளப் பருப்பைக் கடைந்து சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். மறுபடியும் ஒரு கொதி வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
திருவாதிரை, பொங்கல் ஆகிய பண்டிகையின் பொழுது இந்தக் கூட்டை செய்வார்கள். இதை "தாளகம்" என்றும் "பொங்கல் கூட்டு" என்றும் அழைப்பார்கள்.
உருளைக்கிழங்கு தயிர் மசாலா

தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 2
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பச்சை கொத்துமல்லி இலை - சிறிது
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தயிர் - 1/2 கப்
செய்முறை:
உருளைக்கிழங்கை, குக்கரில் போட்டு தேவையான தண்ணீரை விட்டு, 1 அல்லது 2 விசில் வரும் வரை அல்லது கிழங்கு முக்கால் வேக்காடு வேகும் வரை வேக விட்டு எடுக்கவும். குக்கர் ஆறியதும், அதை திறந்து, கிழங்கை எடுத்து தோலை உரித்து விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலைச் சேர்க்கவும். சோம்பு சற்று பொரிந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பச்சை வாசனை போனவுடன், உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துக் கிளறி விடவும். அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது நீர் (1/4 கப் அளவிற்கு), சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கிளறி மூடி போட்டு, மிதமான தீயில் உருளைக் கிழங்கு மிருதுவாக வேகும் வரை வைத்திருக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாயைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில், தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, ஓரிரு வினாடிகள் கிளறி, இறக்கி வைக்கவும்.
சப்பாத்தி, பூரி அல்லது சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம். மைதா பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
அடிப்படைக் கறி

அடிப்படைக் கறி எனப்படும் இந்த கிரேவியை செய்து வைத்துக் கொண்டால், இதை பயன்படுத்தி நிறைய கறி / கிரேவி வகைகளை தயாரிக்கலாம். உதாரணமாக, வேக வைத்தப் பருப்பைச் சேர்த்தால், சுவையான "பருப்பு" தயார். வேக வைத்த உருளைக்கிழங்கு, காய்கறிகள், பனீர், கீரை போன்றவற்றையும் சேர்த்து, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள விதவிதமான கிரேவி செய்யலாம். அல்லது இந்த கிரேவியை அப்படியேவும் சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் சேர்த்து பிசைந்து, தக்காளி சாதம் போன்றும் சாப்பிடலாம்.
தேவையானப்பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1
தக்காளி (பெரிய சைஸ்) - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறு துண்டு
இலவங்கம் - 2
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சீரகம், பட்டை, இலவங்கம் ஆகியவற்றைப் போடவும். சீரகம் பொரிய ஆரம்பித்ததும் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும். பின்னர் தக்களி, உப்பு சேர்த்துக் கிளறவும். சிறிது (2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்) தண்ணீரைச் சேர்த்து, மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் மீண்டும் சிறிது நீரை விட்டுக் கிளறி விடவும். தக்காளி, வெங்காயம், மசாலா அனைத்தும் ஒன்றாகச் சேர்த்ததும், இறக்கி வைக்கவும்.
பச்சை பயறு மிளகு மசாலா

தேவையானப்பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
பச்சைப்பயறை 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற விடவும். ஊறிய பின், நன்றாகக் கழுவி நீரை வடித்து விட்டு, குக்கரில் போட்டு நல்லத்தண்ணீர் 2 கப் விட்டு 1 அல்லது 2 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்த பயறை, வெந்த நீருடன் அப்படியே ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். மூடி போட்டு ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையான மசாலா இது. குழாய்ப்புட்டுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
வெள்ளரிக்காய் கூட்டு

தேவையானப்பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 1
பயத்தம் பருப்பு - 1/4 கப்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2
செய்முறை:
வெள்ளரிக்காயின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பயத்தம் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.(மலர வேக வைத்தால் போதும். குழைய விடக் கூடாது).
பருப்பு வெந்தவுடன், அதில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு அத்துடன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் கடுகு, பொடியான நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.
காரக்குழம்பு, வத்தல் குழம்பு போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள நன்றாயிருக்கும். சூடான சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
வெள்ளைப்பூசணிக்காய் - ஒரு நடுத்தர அளவு துண்டு
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வெள்ளைப்பூசணிக்காயின் தோலை நீக்கி விட்டு, அதன் மத்தியிலுள்ள விதை மற்றும் வெள்ளைப் பகுதியையும் நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை நன்றாக வேக வைத்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
பூசணிக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். காய் நன்றாக வெந்தவுடன் கடலைப்பருப்பை அதில் சேர்த்துக் கிளறி விடவும்.
இதனிடையே, தேங்காய்துருவல், பச்சை மிளகாய் சீரகம், அரிசி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
அரைத்த விழுதை பூசணிக்காயில் சேர்த்துக் கிளறி விட்டு கொதித்து வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
பின்னர் அதில் கடுகு, வெங்காயம் (பொடியாக நறுக்கிப் போடவும்), கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.
சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அல்லது தொட்டுக் கொண்டு சாப்பிடவும் செய்யலாம்.
சப்பாத்திக்கான பருப்பு

தேவையானப்பொருட்கள்:
பாசி பருப்பு (பயத்தம் பருப்பு) - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி தழை - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
பயத்தம் பருப்பை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் எண்ணை, உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் விட்டு மலர வேக விடவும். பசைபோல் குழைய விட வேண்டாம்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்த்து பொரிக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். அதன் பின் தக்காளித்துண்டுகளைச் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்றாக மசிய வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்த பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பை ஊற்றிக் கிளறி ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து கீழே இறக்கி வைக்கவும். பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும். கொத்துமல்லித் தழையை மேலே தூவி விடவும்.
சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள ஏற்ற பருப்பு இது.
பட்டாணி மசாலா
தேவையானப்பொருட்கள்:
காய்ந்த வெள்ளை பட்டாணி - 1 கப்
தக்காளி (பெரியது) - 1
பெரிய வெங்காயம் - 2
இலவங்க பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
பட்டாணியை 8 முதல் 10 மணி நேரம் (அல்லது இரவு முழுதும்) ஊற வைக்கவும். ஊறிய பட்டாணியை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 2 முதல் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்றொரு வெங்காயத்தையும், தக்காளியையும் நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பெரிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர் அத்துடன் தக்காளித் துண்டுகளையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, ஆற விடவும். பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள மிளகாய், தனியா, பட்டை, கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
வெந்த பட்டாணியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து, அதையும் அரைத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய், வெங்காய விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் வேக வைத்துள்ள பட்டாணியை வெந்த நீருடன் சேர்க்கவும். பட்டாணி விழுதையும் சேர்த்து, தேவை பட்டால் மேலும் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறவும். உப்பு சரி பார்த்து, , ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
விருப்பப் பட்டால், கொத்துமல்லி தழை தூவி பரிமாறலாம்.
பூரி, சப்பாத்தி, பிரட் டோஸ்ட் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு
தேவையானப் பொருட்கள்:
வாழைக்காய் - 1
பச்சைப்பயறு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
பூண்டு பற்கள் - 4 (விருப்பப்பட்டால்)
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
செய்முறை:
பச்சைப்பயிறை 6 அல்லது 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
வாழைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணையில், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்தெடுத்து அத்துடன், புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஊறவைத்த பயறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
வாழைக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்க்கவும். (பூண்டு சேர்ப்பதானால், பூண்டை தோலுடன் சற்று நசுக்கி சேர்க்கவும்). பின்னர் அதில் வேக வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும்வரை அடுப்பில் வைத்து, இறக்கி வைக்கவும்.
சூடான சாதத்துடன் பிசைந்து, அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
சப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து பரிமாறலாம்.
காலிஃபிளவர் மசாலா
தேவையானப்பொருட்கள்:
காலிஃபிளவர் - 1
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டுப்பற்கள் - 4 அல்லது 5
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 20
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லித்தழை - சிறிது
செய்முறை:
காலிஃபிளவரை தண்டு நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டியத்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசறி விட்டு சற்று நேரம் ஊற விடவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பு, கசகசா இரண்டையையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
பின்னர் அத்துடன் ஊற வைத்துள்ள காலிஃபிளவர் துண்டுகளைப் போட்டுக் கிளறி மூடி வைத்து, மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வேக விடவும். பின்னர் அதில் முந்திரி விழுதைப் போட்டுக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.
கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.
சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட சுவையாயிருக்கும்.
வாழைத்தண்டு கூட்டு
தேவையானப்பொருட்கள்:
வாழைத்தண்டு - 1 (ஒரு அடி நீளம்)
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வாழைத்தண்டை வட்ட வில்லைகளாக வெட்டி, அதிலுள்ள நாரை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைத்தெடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில், வாழைத்தண்டு துண்டுகளைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன், வாழைத்தண்டு மூழ்கும் அளவிற்கு தேவையான நீரைச் சேர்த்து வேக விடவும். வாழைத்தண்டு நன்றாக வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இதற்கிடையில், தேங்காய்த்துருவல், சீரகம், அரிசி ஆகியவற்றை மைய அரைத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.
கூட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, கடுகு, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.
சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். அல்லது காரகுழம்பு மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
பெங்களூர் கத்திரிக்காய் மிளகு கூட்டு
தேவையானப்பொருட்கள்:
பெங்களூர் கத்திரிக்காய் - 1
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வறுத்தரைக்க:
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
பெங்களூர் கத்திரிக்காயை, தோலை சீவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பயத்தம் பருப்பையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து குக்கரில் போட்டு, ஒரு கப் தண்ணீரை விட்டு, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் மிளகாய், தனியா, மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை வறுத்தெடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வத்ங்கியவுடன், வேக வைத்துள்ள காயையும், பருப்பையும் மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி விடவும். நன்றாகக் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, பின்னர் இறக்கி வைக்கவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)