கேரளத்தில் "எரிசேரி" என்றழைக்கப்படும் இந்த கறி, தமிழகத்தின் "கூட்டு" போன்றதுதான். இதில் வாழைக்காய், சேனை, பலாக்காய், பூசணிக்காய், காராமணி பயறு போன்றவற்றைச் சேர்த்து செய்வார்கள். நான் வாழைக்காய், சேனை, காராமணி சேர்த்து செய்துள்ளேன்.
தேவையானப்பொருட்கள்:
வாழைக்காய் - பாதி
சேனைக்கிழங்கு - ஒரு நடுத்தர அளவு துண்டு
காராமணி பயறு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
அரைத்தெடுக்க:
தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
கராமணி பயறை 4 முதல் 5 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) ஊறவைத்து, கழுவி விட்டு, ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து குக்கரில் 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.
தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாழைக்காய், சேனை ஆகியவற்றைக் கழுவி, தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாழைக்காய் மற்றும் சேனை துண்டுகள் இரண்டும் சம அளவிற்கு இருக்க வேண்டும். பாதி வாழைக்காய்க்கு ஒரு கப் துண்டுகள் கிடைக்கும். அதே அளவிற்கு (1 கப்) சேனைத் துண்டுகளையும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் மஞ்சள் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். காய் மிருதுவாக வெந்ததும், கரண்டியின் பின்புறத்தால் சற்று மசித்து விட்டு, அத்துடன் வேக வைத்துள்ள காராமணி, மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்கவும்.
பின்னர் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டிக் கலந்து விடவும்.
1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலை, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணையில் பொன்னிறமாக வறுத்து, அதன் மேல் தூவி விடவும்.
சூடான சாதத்துடன் சேர்த்து, பொரித்த அப்பளத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
1 கருத்து:
புதுவித சமையல் ! நன்றி சகோதரி !
கருத்துரையிடுக