• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
மசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பீர்க்கங்காய் பருப்பு


தேவையானப்பொருட்கள்:

பீர்க்கங்காய் - 2 அல்லது 3 (நடுத்தர அளவு
பயத்தம் பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 முதல் 3 வரை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
 
தாளிக்க:
எண்ணை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
 
செய்முறை:
 
பீர்க்கங்காயின் தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
 
பயத்தம் பருப்பைக் கழுவி குக்கரில் போட்டு, அத்துடன் பீர்க்கங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி போடவும்), மஞ்சள் தூள் சேர்த்து, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, 2 விசில் வரும் வரை வேக விடவும்.
குக்கர் ஆவி அடங்கியதும், திறந்து உப்பைப் போட்டு மசித்து விடவும்.

கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

சூடான சாததுடன் பிசைந்து சாப்பிடலாம். காரக்குழம்பிற்கு தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.

பருப்பு புளி மசியல்


தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

புளியை ஊற வைத்துக் கரைத்து, தேவையான நீரைச் சேர்த்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும். துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போடவும். அத்துடன் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து அத்துடன் புளித்தண்ணீரையும், உப்பையும் சேர்த்துக் கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்துள்ளப் பருப்பை மசித்து சேர்க்கவும். மீண்டும் ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்

சூடான சாதத்துடன் பரிமாறவும்.

கொங்குநாடு பருப்பு


"பருப்பு" என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பருப்பு தென்னிந்திய சமையலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமணம் மற்றும் இதர விருந்துகளில் முதலில் பரிமாறப் படுவது பருப்புதான். "பருப்பில்லாமல் கல்யாணமா" என்று கூறப்படும் அளவிற்கு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. குழந்தைகளுக்கு முதல் திட உணவாக நாம் கொடுப்பதும் இந்த பருப்பு கலந்த சாதத்தைத் தான்.

சாதாரணமாக வீட்டில் பருப்பு சமைப்பதென்றால், சாம்பாருக்கு வேக வைத்த பருப்பிலிருந்து சிறிது எடுத்து, உப்பு சேர்த்து மசித்து வைப்பதுதான். ஆனால் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் கொங்குநாட்டுப் பக்கம் பருப்பு சமைக்கும் முறையைப் பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. பருப்பில் சிறிது விளக்கெண்ணையை ஊற்றி திறந்தப் பாத்திரத்தில் வேக வைத்தெடுத்து, தேங்காய் எண்ணையில் தாளித்துக் கொட்டினார்கள்.

விளக்கெண்ணை, வாயுவை நீக்கி செரிமானத்தை எளிதாக்கும் என்றார்கள். ஆனால் நிறையப்பேர் வீட்டில் விளக்கெண்ணை இருப்பில் வைத்துக் கொள்ளுவதில்லை. எனவே நான் சிறிது நல்லெண்ணை சேர்த்து செய்தேன். திறந்தப் பாத்திரத்தில் வேக நேரம் அதிகமாகும் என்பதால், பிரஷ்ஷர் குக்கரில் வேக வைத்து செய்தேன்.

தேவையானப் பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்
நல்லெண்ணை - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

தேங்காய் எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பற்கள் (சிறிய அளவு) - 5
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
நெய் - 4 டீஸ்பூன் (சாதத்துடன் பரிமாற)

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவி, குக்கரில் போட்டு அத்துடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை, மஞ்சள் தூள், 3 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும். குழைய விட வேண்டாம், மிருதுவாக வெந்தால் போதும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் தேங்காய் எண்ணையை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் சீரகத்தைச் சேர்க்கவும். பருப்பு சற்று சிவந்தவுடன், வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். பூண்டை சற்று தட்டிப் போடவும். சில வினாடிகள் வதக்கியப் பின் அதில் வேக வைத்துள்ளப் பருப்பைச் சேர்க்கவும். உப்பையும் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். ஒரு கொதி வநததும்
இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன், சிறிது நெய்யை விட்டு கலந்து சாப்பிடவும். தொட்டுக் கொள்ள பொரித்த அப்பளம் மற்றும் பச்சை மிளகாய் பச்சடி நன்றாக இருக்கும்.

சுண்டைக்காய் மசியல்


தேவையானப்பொருட்கள்:

சுண்டைக்காய் - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 1
புளி - ஒரு நெல்லிக்காயளவு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை, நீள வாக்கில் கீறிக் கொள்ளவும். சுண்டைக்காயை நறுக்கத் தேவையில்லை. அப்படியே முழுதாக உபயோகிக்கலாம். ஆனால் பூச்சியில்லாமல் பார்த்து பொறுக்கி எடுக்கவும்.

புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக புளிச்சாற்றை எடுக்கவும்.

குக்கரில் துவரம் பருப்பைப் போட்டு, தேவையான தண்ணீரைச் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். குக்கர் சற்று ஆறியவுடன், மூடியைத் திறந்து வெந்த பருப்புடன், சுண்டைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், புளிச்சாறு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயதூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர்ச் சேர்த்து, தளர கிளறி விடவும். குக்கரை மூடி, மீண்டும் மூன்று விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

சற்று ஆறியவுடன், குக்கரைத் திறந்து, கீரை கடையும் மத்தால், நன்றாகக் கடையவும். மத்து இல்லையென்றால், "பிளண்டர்" அல்லது மிக்ஸியில், ஓரிரண்டு சுற்று ஓட விட்டு எடுக்கவும் மிக்ஸியில் போடுவதென்றால், ஆறியபின் போடவும். இல்லையெனில், மிகஸியின் மூடி கழன்று வெளியே சிதறி விடும்.

ஒரு சிறு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து மசியலில் கொட்டிக் கிளறவும்.

இதை சூடான சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது சாதம், இட்லி , தோசை போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ளவும் நன்றாயிருக்கும்.

கருணைக்கிழங்கு மசியல்


தேவையானப்பொருட்கள்:

பிடி கருணைக் கிழங்கு - 4 அல்லது 5
புளி - கொட்டைபாக்களவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
சின்ன வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கருணைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிறகு தண்ணீரை விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். பிரஷ்ஷர் குக்கரிலும் வேக வைக்கலாம்.

புளியை சிறிது நீரில் ஊறவைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கெட்டியான புளிக்கரைசலை எடுக்கவும்.

வெந்த கிழ்ங்கிலிருந்து, அதன் தோலை நீக்கி விட்டு, நன்றாக மசித்துக் கொள்ளவும். மசித்த கிழங்குடன், புளிச்சாறு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீரை ஊற்றி கலக்கி, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

தேங்காயை சற்று கொரகொரப்பாக அரைத்து கொதிக்கும் கிழங்கில் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

பின்னர் அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க: பிடிகருணை சாப்பிட்டால், தொண்டை சற்று கரகரப்பாக இருக்கும். இதை தடுக்க, கிழங்கை வேக வைக்கும் பொழுது சிறிது புளியையும் சேர்த்து வேக வைத்தால், கரகரப்பு இருக்காது. கிராமங்களில், கிழங்கை வேகவைக்கும் பொழுது புளியம் இலையைச் சேர்த்து வேக வைப்பார்கள்.

பிடிகருணைக்குப் பதில், காராகருணை என்றழைக்கப்படும், சேனை கிழங்கையும் உபயோகித்து இந்த மசியலைச் செய்யலாம். மூலநோய்க்கு சிறந்த நிவாரணி என்று சொல்லப்படுகிறது.

கீரைப் பூண்டு மசியல்


தேவையானப்பொருட்கள்:

கீரை - 1 கட்டு (முளைக்கீரை)
பூண்டுப்பற்கள் - 8
பச்சைமிளகாய் - 1
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

கீரையின் வேரை மட்டும் நீக்கி விட்டு, நன்றாகத் தண்ணீரில் அலசி எடுத்து, பொடியாக நறுக்கவும்.

நறுக்கியக் கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன், பூண்டைப் பொடியாக நறுக்கி, பின் தட்டிப் போடவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போடவும். உப்பையும் சேர்த்து, மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. கீரையின் நீர்ச்சத்திலேயே வெந்து விடும்.

நீண்ட நேரம் வேக விடக்கூடாது. நிறம் மாறிவிடும். 2 அல்லது 3 நிமிடங்கள் வெந்தால் போதும்.

கீழே இறக்கி வைத்து, கீரை கடையும் மத்தால் நன்றாகக் கடையவும்.

மத்து இல்லாவிட்டால், வெந்தக் கீரையை சற்று ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

காரமானக் குழம்பு செய்யும் பொழுது, தொட்டுக் கொள்ள இதைச் செய்யலாம். சுடு சாதத்தில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விட்டு கீரை மசியலைச் சேர்த்து பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...